“இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல”- நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’

redcross-2801.jpgஇலங்கைத் தமிழருக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு இருப்பதாக “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல என்று மகுடமிட்டு நேற்று திங்கட்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்திலேயே “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இதனைச்சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கைத் தமிழரின் தலைவிதி தொடர்பாக நெஞ்சுபடபடக்கும் திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் சிறிய நிலப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சியும் கவலையும் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வலுவான முறையில் முன்னேறிவருவது இரகசியமானதல்ல. கடந்த வருட முற்பகுதியில் யுத்தநிறுத்தம் முறிவடைந்த பின் கொழும்பு முழுமையாக ஒழித்து விடுவதற்கான யுத்தத்தை ஆரம்பிப்பதென முடிவு செய்தது.

உண்மையான நிலைமை யாராலும் கண்டுகொள்ளக் கூடியதாகும். ஆனால், மாநிலத்தின் (தமிழ்நாடு) அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இது தொடர்பாக தமது கண்களை மூடிக் கொண்டுள்ளனர். அடையாளங்கள் தொடர்பான குழப்பங்களும் உள்ளன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தமிழகத்தின் சிறிய மற்றும் குரல்கொடுக்கும் கட்சிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையான தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விடயத்தில் தலையிட வேண்டிய தெய்வீக உரிமை இந்திய அரசுக்கு இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த மாதிரியான நிலைப்பாட்டை புலிகள் ஊக்குவிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இந்தியா மீதான நல்லெண்ண வெளிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தமை இதற்கு சாட்சியமாகும்.

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடென்பதும் இந்தியாவோ அல்லது வேறு எவரோ உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாதென்பதும் உண்மையானதொன்றாகும். 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை தோல்வி கண்டது. பல காரணங்கள் இருந்தாலும் புலிகள் அதில் ஆர்வம் காட்டாதமையும் ஒரு காரணமாகும். 2002 இல் நோர்வே அனுசரணையுடனான யுத்த நிறுத்தமும் தோல்வி கண்டது. நம்பிக்கை தொடர்பாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. எவ்வாறாக இருப்பினும் இலங்கையில் தமிழர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு உண்டு.

யுத்தம் முடிவடைந்த பின் தமிழர்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் அவர்கள் வாழ வேண்டியது அவசியமாகும். 25 வருட காலமாகக் கடுமையான போராட்டங்களின் பின்னரும் தலைமுறையினர் இடம்பெயர்ந்த பின்னரும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆகக் குறைந்த விடயமாக இது காணப்படுகிறது. இதனையே இங்குள்ள அரசியல் கட்சிகள் மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இது தொடர்பான திட்டம் பலரிடம் இல்லை. அவர்களுடைய தற்போதைய நிலைப்பாடு சிந்தனையின் வங்குரோது தனத்தையே காட்டுவதுடன் நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இல்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *