மனிக்பாமில் பாடசாலை ஆரம்பம்; அமைச்சர் ரிஷாத் திறந்து வைப்பு

risard.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மனிக் பாமில் தங்கியுள்ள 315 மாணவர்களுக்கான பாடசாலை நேற்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு 45 ஆசிரியர்களைக் கொண்டு இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்துள்ள மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையினை கருத்திற்கொண்டு வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது தெரிந்ததே.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடநூல்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன. சீருடைகள் வழங்கப்படவுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து இதுவரையில் வவுனியாவிற்குள் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இவர்களுடைய பிள்ளைகள் கல்வி கற்பதற்கே நலன்புரி நிலையத்தில் தற்காலிக இரண்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண பிரதம செயலாளர் எஸ். இரங்கராசா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அரச அதிபர், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

செட்டிக்குளம் மகா வித்தியாலய அதிபர் எஸ். யேசுதாசன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். க.பொ.த உயர்தர மாணவர்களின் நலன்கருதி மேலதிக கல்வி நடவடிக்கைக்காக இம் மாணவர்களை செட்டிகுளம் பாடசாலையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் பணிகளையும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ள மாணவர்கள் நான்கு பேரையும் உடனடியாக கல்வி நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

மெனிக் பாம் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்விப் பணிகளை மேற்பார்வை செய்ய வவுனியா வலய உதவிக் கல்விப் பணிப்பாளரை இணைப்பாளராக நியமிக்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார். மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கடைத்தொகுதி மற்றும் மருத்துவ மத்திய நிலைய பணிகளையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டார். மெனிக்பாம் முகாமிலிருந்து செட்டிகுளம் பாடசாலைக்கு செல்லவுள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சருடன் வடமாகாண ஆளுநரின் பிரதம செயலாளர் வி. தியாகலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.ஏ. சார்ள்ஸ், வட மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல். டீன், கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • SUDA
    SUDA

    என்னப்பா புதினமாக் கிடக்குது.? அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போனா ஆட்கள் காணாமல் போய்விடுவினம் என்று அவங்கள் நெற்றில செய்தி போர்றாங்கள். இங்க பார்த்தா வந்த சனத்துக்கு இவையள் பள்ளிக்கூடம் திறந்து குடுக்கினம்.என்ன நடக்குது அங்க ஒரு வேளை நாளைக்கு ரிசாத் பதியுதீன் அரசாங்கத்தின் கையாளாக இருந்து தமிழ்த் தேசத்துக்கு துரோகம் செய்யிறாரென்று செய்தி போடுவினமோ தெரியாது. போட்டாலும் போடுவாங்கள் மக்களின் இரத்தத்திலை பிழைப்பு நடத்தும் பயல்கள்.

    Reply