விடு விக்கப்பட்ட விசுவமடு மற்றும் குருவிகுளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளின் மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவிகள் ஒன்றும், 80 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவி ஒன்றும் இவற்றில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். படையினர் கடுமையான தாக்குதல்களினால் சேதமடைந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்றுள்ள இந்த மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினரே கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
February
February
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் -27 தாக்குதல் விமானங்கள் மூலம் கடற்புலிகளின் வளங்களை இலக்கு வைத்து இன்று(பெப்:09) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் விடயமாக விமானப் படைப்பேச்சாளர் தகவல் தருகையில் தொடர்சியாக கடற்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்து இன்று காலை 7.00 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்காக அமைந்துள்ள வெள்ளமுள்ளவாய்கல் பகுதியில் கடற்புலிகளின் படகுகள் ரெய்லர்கள் ரெக்டர்கள் என்பன வானிலிருந்து அவதானிப்பதற்க்கு முடியாத வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களையே இத்தாக்குதல் இலக்காகும் என விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11. 30 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
தாக்குதலில் 20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 படையினரும், 40 பொதுமக்களுமாக 64 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்கொலைக் குண்டு தாக்குதலினையடுத்து குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவிக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுள் பெரும்பாலும் சிறுவர்களும், பெண்களும் அடங்குகின்றனர்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர்
சிவிலியன்களை இலக்குவைத்து புலிகளால் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று(09) பிற்பகல் பெளத்தாலோக மாவத்தையிலுள்ள இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதியும், அரசாங்கமும் விடுத்த அறிவித்தலையடுத்து சிவிலியன்கள் வேகமாக வரத் தொடங்கினர். கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்த வண்ணமிருந்தனர். இந்த அடிப்படையில் நேற்றுக் காலையும், முல்லைத்தீவு சுதந்திரபுர பிரதேசத்தை நோக்கி சுமார் ஐயாயிரம் பொதுமக்கள் வருகை தந்தனர்.
இவ்வாறு வருபவர்களை வரவேற்கவென சுதந்திரபுரத்தில் பாதுகாப்புப் படையினரால் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சகலரையும் சோதனையிடுவதற்கும், பதிவு செய்துகொள்வதற்கும் என இரு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சின்னஞ் சிறார்களுக்கும் என தனியான வரிசை ஒன்றும், ஆண்களுக்கு தனியான வரிசை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை வரவேற்க காத்திருக்கும் படையினர் நிராயுத பாணிகளாகவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பலர் பல நாட்களாக உண்ணாதவர்களாகவும், சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் கூட குடித்திருக்காதவர்களுமாகவே உள்ளனர். எனவே அவர்களை வரவேற்று சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான ஆகாரங்கள் கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் தகவல் பதிவுசெய்த பிறகு பஸ் வண்டிகள் மூலம் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
இந்த அடிப்படையில் நேற்றுக்காலை 5000 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து தஞ்சமடையும் சிவிலியன் போன்றே பெண் தற்கொலை குண்டுதாரியும் வருகை தந்துள்ளார். பெண்களை சோதனையிடும் வரிசையில் வந்த அவரை இராணுவத்தின் பெண் வீரர் ஒருவர் சோதனையிட முற்பட்டபோதே தற்கொலை குண்டுதாரி தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அப்பாவி தமிழர்கள் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக கொண்டு வரப்பட்டு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கிரமமான முறையில் பெற்றுக்கொடுக்கவென நான்கு விசேட செயலணிகள் அமைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வந்து சேர்வர் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எவ்விதமான குறைபாடுகளுமின்றி சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்க இச்செயலணிகள் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார். இதுவரை வவுனியா மெனிக்பாம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரை தங்க வைத்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வன்னியில் இருந்துவரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமைத்த உணவுகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி என்பன வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு ள்ளதாக கூறிய அவர் வன்னியில் இருந்துவரும் மக்களை தங்க வைக்க ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இவர்களுக்கு உதவி வழங்க ஐ.நா. மற்றும் ஐ.நா.வுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முன்வந்துள்ளன. இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தினேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்கள், நீர் வசதி, மலசல கூட வசதி என்பன அளிக்க ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
வவுனியா வரும் மக்களுக்கு சுகாதார வசதி, கல்வி, குடிநீர், மலசல கூட வசதி மற்றும் உணவு வசதிகள் அளிப் பதற்கென 4 செயலணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அது குறித்து இன்று (9) வவுனியா செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செயலணிகளினூடாக குறித்த வசதிகள் வழங்குவது குறித்து தனித்தனியாக நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. வன்னியில் இருந்துவரும் மக்களை கவனிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். உணவுகள், மருந்துகள் என்பவற்றை கையிருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல் லைத்தீவு வடகிழக்கு கடலில் புலிகளின் இரண்டு படகுகளை கடற்படையினர் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஆறு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்படையின் அதிவேக தாக்குதல் படகான டோராவை பயன்படுத்தி நேற்றுக்காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆறு புலிகளில் இருவரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வெளியில் செல்ல முற்பட்ட இரண்டு படகுகளும் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 10 கடல் மைல் தொலைவில் வரும்வரை காத்திருந்த பாதுகாப்புப் படையினர் அந்த படகுகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையிலும் கடற்படையினர் கடற்பரப்பில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதலா வது சந்திர கிரகணம் இன்று (9ம் திகதி) தோன்றுகின்ற போதிலும், அதனை இலங் கை உட்பட உலகின் பெரும் பாலான நாடுகளில் பார்க்க முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவி யல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற் கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.
பூமியின் இருள் பகுதிக்குள் சந்திரன் பிரவேசிப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று மாலை 6.07 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் இரவு 10.10 மணி வரை இருக்கும் எனவும் அவர் கூறினார். இம்முறை சந்திரன் சாதாரண இருள் பகுதியால் பயணிப்பதால் தான் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. என்றாலும் இக்காலப் பகுதியில் சந்திரன் மங்கலாகத் தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வருடம் நான்கு சந்திர கிரகணங்கள் தோன்றவிருக்கின்றன. அவற்றில் முதலாவது சந்திர கிரகணமே இன்று தோன்றவிருக்கிறது. எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதியும், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் என்றபடி இச்சந்திர கிரகணங்கள் தோன்றும் என்றும் அவர் கூறினார்.
முல் லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதமாக அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி இருப்பதாக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.
இது விடயமாக பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களினால் கடந்த சில தினங்களாக மீட்கப்படாத பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், துரிதமாக அங்கு உணவு அனுப்புவது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஜனவரி 29 ஆம் திகதி 810 டொன் உணவுப் பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதிக்கு உணவு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டன. அப்பகுதிக்கு துரிதமாக உணவுப் பொருட்கள் அனுப்புவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி வருகிறோம். இது குறித்து ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், உலக உணவுத் திட்டம் என்பவற்றுடனும் பேசி வருகிறோம் என்றார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்முஸ்லிம் இன நல்லுறவுக்கு மட்டக்களப்புகாத்தான்குடி முஸ்லிம்களால் வடபுல அகதிகளுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கியமை ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி பிரதேச மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சம்மேளனத் தலைவர் எம்.எம்.சுபைர் தலைமையிலும் மட்டக்களப்பு நகர ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலிலும் , இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பும் இணைந்து நடத்திய வடபுல அகதிகளுக்கு பொருட்கள் கையளிப்பு நிகழ்வும் இதே தினம் மாலை 4.30 மணிக்கு பள்ளிவாயலில் வர்த்தக சங்கத் தலைவர் கே.எம். கலீல் தலைமையிலும் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ;
உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காகவும் அல்லது பிறரை வாழவைப்பதற்காகவுமே பிறக்கின்றான். இந்த ரீதியில் கிழக்குமாகாணசபையை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததையடுத்து கிழக்கு மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தபோதும் வட பகுதியில் பாதிப்புக்குள்ளான எமது உறவுகளுக்கு எம்மால் முடிந்தவரை உதவ வேண்டுமென்ற கோரிக்கையினை எமது மாகாணசபையின் தீர்மானத்திற்கேற்ப முன்வைத்தேன். இதற்காக மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தபோதும் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் பெருமளவிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கி இருக்கின்றமை இம்மாவட்டத்தில் விஷமிகளின் திட்டமிட்ட நடவடிக்கையினால் சிதைந்து காணப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு ஜனாதிபதி கிழக்கு மாகாணசபையைத் தோற்றுவித்ததன் பிறகு நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளதை வெளிக்காட்டுகின்றது.
கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின், நான் மட்டுமல்ல மக்களும் பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தார்கள். இருந்தும் 13 ஆவது சரத்து முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருந்த நிலையிலும் சமூக மனித உறவுகளை கடந்த 8 மாத காலத்துக்குள் இறுக்கமாக முன்னெடுத்துச் செல்வது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் மூலமே மாவட்டத்தின், மாகாணத்தின்,பிரதேசத்தின் , கிராமத்தின் அபிவிருத்தியினையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றார்.
இந்நிகழ்வுகளில் நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் , முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரஷாந்தன், பிரதி மேயர் எஸ்.ஜோர்ஜ்பிள்ளை, பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் நீதிபதி எம்.எம்.மஹ்ரூப் கரீம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
புலிகளின் பிடியிலிருந்து கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 10,301 சிவிலியன்கள் தப்பி வந்து இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களில் 5600 சிவிலியன்கள் நேற்று முன்தினம் 4701 சிவிலியன்கள் நேற்றும் வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்திரம் விசுவமடு பிரதேசத்தை நோக்கி வருகை தந்த 4701 சிவிலியன்களில் மூவர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று சிவிலியன்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளால் கொல்லப்பட்ட மூன்று சிவிலியன்களின் சடலங்களை பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுக்காலை வரை 21,621 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தப்பி வரும் பொதுமக்களை நலன்புரி முகாம்களுக்கு அழைத்துச் செல்லவென போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 50 பஸ்கள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதை புலிகள் பல்வேறு விதத்தில் தடுத்துவருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
புலிகள் பணயமாக வைத்து மேற்கொள்ளும் அடக்கு முறைகளையும், அவர்களது பிடியிலுள்ள சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாளாந்தம் கொடுத்துவரும் துன்பங்களையும் வெறுத்த சிவிலியன்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இது மேலும் கணிசமான முறையில் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பிவர முயற்சிப்பவர்களுக்கு சங்கிலிகளால் புலிகள் அடித்து கடுமையாக துன்புறுத்தியிருப்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களையும் பெருமளவில் குறைத்தும் கொடுப்பதாக தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இளம் வயதுடையவர்கள் பலாத்காரப் படுத்தப்படுவதுடன் 45 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாய பயிற்சி வழங்கப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காமினி மகா வித்தியாலயத்தில் 1000 பேரும், தம்பைமடு முகாமில் 2799 சிவிலியன்களும், நெலுங்குளம் முகாமில் 2625 சிவிலியன்களும், மெனிக் பாம் முகாமில் 582 சிவிலியன்களும், செட்டிக்குளம் மத்திய கல்லூரியில் 1763 சிவிலியன்களும், கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 1351 பொதுமக்களும், ஓமந்தையில் 6000 பொதுமக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக் காட்டினார்.
ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் இன்று இரவு 9 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி தொடக்கம் சுமார் 48 மணிநோம் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கான கொடுப்பனவு மற்றும் பதவியுயர்வு என்பவற்றை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.