February

February

புலிகள் ஆயுதங்களை கீழே போடலாம்: யுத்தநிறுத்தம் என்பது கிடையாது – அமைச்சர் கெஹெலிய

rambukwela.jpgவிடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டிய எத்தகைய தேவையும் அரசாங்கத்துக்குக் கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே வைப்பார்களானால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளனர். நாம் யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாரென அதில் குறிப்பிட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தருணத்திலேயே புலிகளின் இக்கோரிக்கைக்குப் பதிலளிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று வெளியிட்ட தகவல் அமைந்துள்ளது.

அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக விடு தலைப் புலிகளுடனான அனுபவம் அரசாங்கத்துக்கு உண்டு. இத்தகையதொரு நிலையில் விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் 98 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யுத்த நிறுத்தமொன்றுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

vanni.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவிவகாரங்களுக்கான கவுன்சில் இலங்கையில் மோசமடைந்துவரும் மனிதநேய நெருக்கடி குறித்தும் பெருமளவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் போர் தொடர்பிலான சட்டங்களை இந்த மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக போர்நிறுத்தம் ஒன்றையும் கோரியிருக்கிறது என பி.பி.ஸி. செய்திச்சேவை நேற்று அறிவித்துள்ளது. .

விடுதலைப்புலிகள் மோதல் நடக்கும் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க வன்முறை மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியிருப்போரைப் பார்க்க வருபவர்களைக் கண்காணித்து அனுமதிக்கும் முறை சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம் , அங்கு சுயாதினமான கண்காணிப்பு அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஐ.நா. செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற மனித நேய அமைப்ப்புகள் அந்த முகாம்களுக்கு வர முழு அனுமதி தரப்படவேண்டும் என்றும் அது கோருகிறது.

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்பதை வலியுறுத்தும் ஒன்றியம், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவது என்பது அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே அமையும் என்று கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் முடிவாகத் துறந்து, சிறார்களை படையணியில் சேர்ப்பதை நிறுத்தி, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வை அடைய ஒரு அரசியல் வழிமுறையில் பங்கேற்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது

இறைவரித் திணைக்கள பணிகள் இன்று முதல் வழமைபோல் தொடரும் -திணைக்கள ஆணையாளர் நாயகம்

colombo-01.jpgஇறைவரித் திணைக்கள நடவடிக்கைகள் யாவும் இன்று (24) வழமைபோல இடம்பெறும் என இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எஸ். அங்கம்மன தெரிவித்தார்.

புலிகளின் விமானம் விழுந்து நொறுங்கியதால் இறைவரித் திணைக்கள 12ம் மாடி கூடுதலாக சேதமடைந்தது. ஏனைய மாடிகளிலும் சிறுசிறு சேதங்கள் ஏற்பட்டன. 12ம் மாடி தவிர்ந்த ஏனைய மாடிகளில் இன்று முதல் பணிகள் வழமைபோல இடம்பெறும் எனவும் விமானம் வீழ்ந்ததால் கணனி வலைமைப்பிற்கோ ஆவணங்களுக்கோ சேதம் ஏற்படவில்லை எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

12ம் மாடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வேறு இடமொன்றுக்கு மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை துரிதமாக திருத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

விசுவமடுவில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு பாதுகாப்பு படையினரால் மீட்பு

uthaya_nanayakara_.jpgமுல்லைத் தீவு, விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  படையினரால் விடுவிக்கப்பட்ட விசுவமடுவின் பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதல்களின்போதே இந்த ஆயுதக்கிடங்கை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 81 மி.மீ. ரக 250 மோட்டார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர். 52 பீப்பாய் எரிபொருள்கள், 150 பெட்டிகளைக் கொண்ட இரும்புக் குண்டுகள், 35 ஆயிரம் வெடிபொருட்கள் என்பனவற்றையும் படையினர் அங்கிருந்து கண்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புப் படையினர் இந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புலிகள் மீண்டும் மூச்சுவிட இடமளிக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath_f_jaffna.pngபயங்கர வாதிகளை முற்றாக அழித்தொழிக்கும்வரை மனிதாபிமான நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புலிகளுடன் எந்தவித யுத்தநிறுத்த உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி வலியுறுத்திக் கூறினார்.

2006ம் ஆண்டிலிருந்து பாதுகாப்புப் படையினர் இந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட முன்னேற்றங்களிலிருந்து தாம் எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புலிகள் மீண்டும் மூச்சுவிடுவதற்கு தான் இடமளிக்கப் போவதில்லை. தற்பொழுது புலிகள் 65 சதுர கிலோமீற்றர் சிறியபரப்புக்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவுக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மீண்டும் செல்கிறது

red-cr.jpgநோயா ளிகளையும் காயம்பட்டவர்களையும் அழைத்துவருவதில் செஞ்சிலுவைக்குழு உதவிவருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றுமொரு தொகுதி நோயாளாகளை அழைத்து வரும் வகையில் சற்று முன்னர் கிறீன் ஓசியானிக் கப்பல் அனைத்துலக செஞ்சிலுவக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என பி.பி.ஸி. செய்திச்சேவை நேற்று அறிவித்துள்ளது. .

இந்தக் கப்பலில் கோதுமை மாவு உள்ளிட்ட ஒரு தொகுதி உணவுப் பண்டங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுமாத்தளன் பகுதியிலிருந்து தொடர்ந்து நோயாளர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் காயங்களுக்கு இலக்கானோர் திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் நிலையில், சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்து வகைகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மருத்துவப் பணிகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது பற்றியதான இணைப்புக் குழுவின் கூட்டமும்  நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

நான்காவது பரம்பரையாகவும் தோட்டத் தொழிலாளர்கள் பத்தடி காம்பராக்களிலேயே வாழ்கின்றனர் – நகர அபிவிருத்தி அமைச்சர்

up-cun.jpgமலையக தோட்டப் புறங்களிலுள்ள நீர்வீழ்ச்சி மூலமே இந்நாடு முழுவதுக்குமான மின்சாரம் பெறப்படுகின்றது. ஆனால், அத் தோட்டத்தொழிலாளர்களின் லயன் காம்பராக்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. நான்காவது பரம்பரையாக இந்நாட்டில் வசித்துவரும் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் தமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பத்தடி லயன் காம்பராக்களிலேயே இன்னும் மூன்று நான்கு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மாத்தளை மாவட்டத்தில் இந்த அவல நிலையை பல தோட்டங்களில் காணலாம். எனவே இவர்களை இந்த அவல நிலையிலிருந்து மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என நகர அபிவிருத்தி அமைச்சர் ரோஹண திசாநாயக்க கூறினார்.

தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்க, ஸ்ரீ.ல.சு.க.மாத்தளை மாவட்ட அமைப்பாளர் எம்.சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர் மேலும் கூறியதாவது;

மாத்தளை மாவட்டத்தில் ஒருசில தொழிலாளர்களின் லயன் காம்பராக்களின் கூரைத்தகடுகள் பழுதடைந்துள்ளதையும் இவர்களுக்கு குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படாமலுள்ளதையும் என்னால் நேரில் காணமுடிந்தது. இவர்களின் குறைகளை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பாளர் எம்.சசிகரனுக்கு அறிவித்துள்ளேன். ஏற்கனவே அவரால் கையளிக்கப்பட்ட அறிக்கையையடுத்து உடனடியாக லயன் காம்பராக்களுக்கு மூவாயிரம் கூரைத்தகடுகள் வழங்கியுள்ளேன். நாம் இதேபோன்று மக்களது அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். இதே போன்று முஸ்லிம் மக்களும் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். அண்மைக் காலங்களில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபைத் தேர்தல்களிலுமே எமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுவருவதை நோக்கும்போது அடுத்து நடைபெறவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.

எமக்கு கிடைத்துள்ள தொடர்ச்சியான வெற்றிகள் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்து, நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் சரியானவை என்பதை மக்கள் அங்கீகரிப்பதையே உணர்த்துகின்றன. எந்தவொரு நாடும் எமது உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டியதில்லை என நாட்டுமக்கள் சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதாகவும் அது அமைந்துள்ளது.

நாம் கடந்த ஒரு மாதத்துக்குள் மாத்தளை மாவட்டத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரைகாலமும் அபிவிருத்தி வேலைகளுக்காக திறைசேரியில் வழங்கப்பட்டுவந்த நிதி முறையாகப் பயன்படுத்தாததால் மீண்டும் திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுவந்தது. ஆனால் இவ்வருடம் வழங்கப்பட்ட நிதி வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடும். மாத்தளை மாவட்ட வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் இதுவரை பெற்றுக் கொள்ளாத மாபெரும் வெற்றியை கடந்த மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி பெற்றுள்ளதால் எம்மால் எதிர்காலத்தில் மேலும் சிறந்தமுறையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

சிறைச்சாலைக்குள் எவ்வாறு துப்பாக்கி வந்தது? அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

gun.jpgநீர் கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று கைதிகள் மரணமான சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நீதிவான் ஜெயகிடி அல்விஸ் சிறைச்சாலையில் விசாரணை நடத்தினார். சிறைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தும் கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீது அவர் விசனம் தெரிவித்தார்.

சிறைச்சாலையைச் சுற்றி 18 அடி உயரமான மதில் சுவர் இருப்பதாகவும், அருகில் 2 அடி பாதையும், குடிமனைகளும் இருப்பதால் யாராவது துப்பாக்கியை உள்ளே வீசியிருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நீதிவானிடம் கூறியதையடுத்து நீதிவான் இந்த விசனத்தை தெரிவித்தார். கைதிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் இத்துப்பாக்கி எப்படி உள்ளே வந்தது எனவும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.

அடுத்த விசாரணையின் போது இத்துப்பாக்கி எவ்வாறு சிறைச்சாலைக்குள் வந்தது என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சிறைச்சாலை திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்துள்ளார்.

இரு கைதிகளையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு அரச மரத்தில் ஏறிநின்ற கைதி எம்மை அச்சுறுத்தி கைக்குண்டை வீசப்போவதாகக் கூறியதால் நிர்கொழும்பு பொலிஸாரின் உதவியை நாடியதாக சிறைச்சாலை அத்தியட்சர் லக்ஷ்மன் குணவர்தன தெரிவித்தார்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயராம தமது சாட்சியத்தில்; அரச மரத்தில் நின்ற கைதியொருவரை நோக்கி கீழே துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தரவின்படி நான் அந்தக் கைதியை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தேன். அவர் சூடுபட்டு கீழே விழுந்தார் என்றார். மரண விசாரணையின் பின்னர் பிரேத பரி சோதனையைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் மருத்துவ சிகிச்சை முகாம்

medicine.jpgமட்டக் களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் இலவச ஒருநாள் நடமாடும் வைத்திய சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட 23 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜே.டி.சி.கலும் திலகரத்ன தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் சிவில் இணைப்பதிகாரி மேஜர் தென்னக்கோன் மற்றும் களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம், பெரியகல்லாறு, பட்டிருப்பு இராணுவ பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கண், காது, தொண்டை, பல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இதில் இடம்பெற்றன. இராணுவ வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட 12 வைத்திய நிபுணர்களால் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சை தேவையானோர்களுக்கு வைத்திய ஒழுங்குகளும் செய்துகொடுக்கப்பட்டன.  ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சிவில் நடவடிக்கைகளை மக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முகமாகவே இச்சிகிச்சை முகாம் இங்கு இடம்பெற்றது.

பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், கிரான்குளம், குருக்கள்மடம், தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டனர். இம் முகாமில் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.யின் அரசியல்துறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாண தேர்தல் முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வி

sri-lanka-election-02.jpgஇம்முறை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் 11 பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் 8 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருவரும் என 21 முன்னாள் உறுப்பினர்கள் தோல்வியுற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் ஐந்து பேரும் இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் மக்கள் விடுதலை முன்னணியில் மூவரும் தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்த புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் யூ. எம். ஐயூப்கான் இம்முறை தோல்வி அடைந்துள்ளார்.