February

February

ஏப்ரலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூலையில் பொதுத் தேர்தல் இடம்பெறும்?

srilanka-parliament.jpgபாராளு மன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட்டு ஜூலையில் பொதுத் தேர்தலொன்று நடத்தப்படக் கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. படை நடவடிக்கைகளின் பெறுபேறுகளினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தற்போது நிலைமைகள் சாதகமாக இருப்பதனால் இது பெரும்பாலும் நடைபெறக் கூடுமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன், அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளும் அதேபோல் ஏற்கனவே நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவும் அரசாங்கத்துக்கே சாதகமாக அமைந்தமையானது இவ்வாறானதொரு நகர்வுக்கு காரணமாக இருக்கலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, மேல் மாகாண சபையும் கலைக்கப்பட்டு தற்போது அதற்கான வேட்புமனு கோரல் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் மத்திய கொழும்பு பிரதேசத்தை தவிர களுத்துறை, கம்பஹா மாவட்டங்களென மேல் மாகாணத்தின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளே ஓங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் மேல் மாகாண சபை தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், எஞ்சியிருக்கும் ஊவா மற்றும் தென்மாகாண சபைகளை கலைப்பது பற்றி சித்திரை புத்தாண்டின் பின்னரே முடிவாகுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். எனினும் யுத்த வெற்றிகளால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலொன்றை நடத்தினால் பெறுபேறுகளும் சாதகமாக இருக்குமென்பது அரசாங்கத்தின் கணிப்பீடாக இருக்கலாமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலைமையிலேயே பாராளுமன்றம் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் கலைக்கப்பட்டு ஜூலை மாதத்தில் பொதுத் தேர்லொன்று நடத்தப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடனேயே முடிவுக்கு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஜனாதிபதியொருவரது பதவிக் காலத்தில் 4 வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமென்பதற்கு அமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்படுகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக நடத்தப்படும் பொதுத் தேர்தல் முடிவுகளது சாதக பாதக நிலைமைகளைக் கொண்டே உரிய காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவது பற்றி தீர்மானமாமென்று சுட்டிக்காட்டப்பட்டது.

வன்னியிலிருந்து காயமடைந்து வந்தவர்களை பொலனறுவை ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது நல்லதல்ல-ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

batticolo1.jpgமுல்லைத் தீவில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 178 பேர் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக பொலனறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை;

திருகோணமலை வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்கும் வகையில் இவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போன்ற தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இவர்களை மாற்றுவது தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார். பொலனறுவை வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சகலரும் பெரும்பான்மை இனத்தவரின் மொழியான சிங்களம் பேசுபவர்கள். சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி பேசுபவர்கள் இதனால் மொழி ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுவது என்றால் பாதுகாப்புக் கெடுபிடிகள், போக்குவரத்து கெடுபிடிகள் அங்கு தங்கியிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல அங்கு சேவையாற்றுபவர்கள் சேவை மனப்பான்மையுடன் இவர்களுக்கு சேவையாற்றினாலும் மக்களையும் விடுதலைப் புலிகளாக கருதுபவர்களும் உண்டு.

ஏற்கனவே உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இவர்கள் அங்கிருந்து அறிமுகமில்லாத இடமொன்றிற்கு மாற்றப்பட்டிருப்பதானது அவர்களிடையே தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்துமென்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடையே ஒருவித அச்சமும் பீதியும் இருப்பதை அறியக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார

பொருளாதார நெருக்கடியால் இனத்துவேசம் அதிகரிக்கும் – யூ.என்.எச்.சி.ஆர். ஆணையாளர் எச்சரிக்கை

economics.jpgசர்வதேச பொருளாதார நெருக்கடியானது அகதிகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் திங்கட்கிழமை நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனைக்கூறிய அவர் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் குற்றம் சாட்டும் நிலைமையை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் பொருளாதார நெருக்கடியானது அந்நியர்கள் தொடர்பான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் “பிறப்பாக்கியாக’ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டதுடன் எந்தநாடு என்று எதனையும் அவர் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவில்லை.

அரசியல்வாதி என்ற முறையில் நான் பெற்ற அனுபவத்தின் பிரகாரம் நாடொன்றில் நிலைமை மோசமாக இருக்கும்போது இரு விடயங்கள் இலக்குவைக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. ஒன்று அரசு மற்றையது வெளிநாட்டவர்கள் என்று முன்னாள் போர்த்துக்கல் பிரதமரான அன்ரனியோ கூறியுள்ளார். பொருளாதார நிலைமை மோசமடையும் போது உலகின் பல பகுதிகளில் வெளிநாட்டவர் மீது வெறுப்புக்கொள்ளும் போக்கு தவிர்க்க முடியாதது என்று கட்டரஸ் கூறியுள்ளார். உலக பொருளாதார நெருக்கடியான மோதல்கள் மற்றும் இடம்பெயர்ந்த அகதிகள் தொடர்பான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்றும் கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கங்கத்துடன் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு சென்றுள்ள அன்ரனியோ கட்டரஸ் ஆசிய பசுபிக்பிராந்தியத்தில் புகலிடம் தேடுவோரை அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளை இந்தோனேஸியா போதிய அளவுக்கு தடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இழந்தன

sri-lanka-election.jpgமத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த பத்து சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தை இழந்துள்ளன. மேற்படி சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் 30 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியிருந்தன. மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 வீத வாக்குகளை எந்தவொரு சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொள்ள முடியாமையினாலேயே இந்நிலையேற்பட்டுள்ளது.

இம்முறை மாகாண சபையில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. தவிர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை. இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த மொத்த வாக்குகள் 3,039 ஆகும். இது மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 1.07 சதவீதமாகும்.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை.

navy_rg.jpgசமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலக தொடர்பாடல் பிரிவின் அறிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் மனிதக் கேடயங்களாக மக்களைப் பாவிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கடந்த சில நாட்களில் 30000 க்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்து தப்பி வந்துள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் தற்போதைய தேவைகளைக் கண்டறியவும் அவர்கள் தம் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் வரை இடம் பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்கான திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடவும் சென்ற வார இறுதியில் மீள்குடியமர்வு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுத்தீன் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கி வவுனியா சென்றிருந்தார். அக்குழுவில் அரசாங்க மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் அடங்கினர்.

இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் தற்போது நிறைவு செய்யப்படுகின்றன. அவர்கள் வவுனியா வந்ததும் வைத்தியர்கள் அவர்கள் உடல் நிலையைப் பரிசோதித்து தேவையானவகளுக்கு மருந்துகளை வழங்கி அவர்களுள் கடுமையாக நோய்வாய்ப் பட்டவர்களை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்றனர். வன்னியில் இருந்து களைத்துப் போய் வந்த அவர்களுக்கு உடனடியாக சூடான உணவும் பானங்களும் வழங்கப்படுகின்றன. விசேடக் கவனிப்புத் தேவைப்படும் முதியர்வகள் அவர்களுக்கான இல்லங்களில் சேர்க்கப்படுவதோடு மத குருமாரும் அநாதைகளும் மதத் தலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஏனைய சகல இடம்பெயர்ந்தோரும் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்கள் ஓரிரு வாரங்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளிலேயே பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மற்றும் சுகாதார வசதிகளை இம்முகாம்களில் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு முகாம்கள் போதாதவிடத்து சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மேலதிக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான உணவு மற்றும் சவர்க்காரம் உடுதுணிகள் போன்றவை குறைவின்றி வழங்கப்படுகின்றன.

சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்ற போதிலும் அவற்றை மிக அவசரமாக நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற வார விஜயத்தின் போது இடம்பெயர்ந்தோருக்கு வழங்ககப்படும் உணவின் தரம் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக இடம் பெயர்ந்தோர் தமது உணவைத் தாமே தாயரிக்கும் திட்டம் ஒன்றையும் அரசாங்கம் இவ்வாரம் பரீட்சித்து வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரிந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆட்களை இலகுவாகக் கண்டு பிடிப்பதற்கு வசதியாக கணனித் தரவுத் திரட்டு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மென்பொருள் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைக் கொண்டதொரு குழு அமைக்கப்பட்டுள்ளதோடு ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பும் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. கள நிலைமையை எடுத்துக் கொண்டால் இடைத்தங்கல் முகாம்களின் நிருவாகம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் தினமும் கூட்டங்களை நடாத்துகின்றனர்.

தற்போது இடைத்தங்கல் முகாம்கள் ஆட்களினால் நிரம்பியுள்ளதால் மக்களுக்குப் போதிய இடவசதியையும் மாணவர்கள் தம் கல்வியைத் தொடர்வதற்கு வசதியளிப்பதற்காகவும் ஏற்றவாறு விசாலமான தற்காலிக வீடுகளை அமைப்பதற்காக யூஎன்எச்சிஆருக்கு ஒரு காணித்துண்டை வழங்குவது பற்றியும் இவ்விஜயத்தின் போது ஆராயப்பட்டது.

இக்குடியிருப்புக்கள் அரசாங்கம் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நலன்புரி கிராமங்களின்; அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கிராமங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களைவிட மாறுபட்டதாகவும் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றன. மாண்புமிகு ஜனாதிபதி சீன விஜயத்தின் போது பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனசமூக வசதிகளுடன் சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கிராமங்களை கண்டு அவற்றைப் போலவே இந்நலன்புரி நிலையங்களை அமைக்க வேண்டும் என விரும்பியதன் விளைவாக இந்நலன்புரி நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டன.

தொடர்பாடல் பிரிவு
சமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலகம்.

புதுக்குடியிருப்புக்குள் நுழைந்திருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

mi24_2601.jpgஇலங்கை இராணுவத்தினர் இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் வசம் எஞ்சியுள்ள ஒரேயொரு நகரமாகிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் முன்னேறிய இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு கிழக்கே இராணுவ முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இதி்ல் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,

இந்த மோதல்களின்போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் 19 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இன்று அதிகாலையும் நேற்றும் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் 40 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவிலிருந்து கப்பலில் அழைத்து வரப்பட்ட காயமடைந்தோரில் இதுவரை 11 பேர் உயிரிழப்பு

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்குக் கூட்டிவரப்பட்ட காயமடைந்த பொதுமக்களில் பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் கண்டி போதனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர் என்றும் மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, திருகோணமலையிலிருந்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பெப்ரவரி 11 முதல் நான்கு தடவைகளாக கப்பல் மூலம் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டோரில் 1,110 பேர் திருகோணமலையிலிருந்து வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் 500 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 21 பேருமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. இதன் விபரம் வருமாறு;

பெப்ரவரி 1 தொடக்கம் பெப்ரவரி 19 வரை 500 பேர், பெப்ரவரி 20 – 28 பேர் , பெப்ரவரி 21-45 பேர், பெப்ரவரி 22-11 பேர் , பெப்ரவரி 23 -33 பேர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டோரின் பிந்திய நிலைவரம் வருமாறு;
கொழும்பு / கண்டி 68 பேர் , பொலனறுவை 171 பேர், கந்தளாய் 160 பேர், தம்பலகமம் 76 பேர்.

உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

europa-u.jpgஇலங்கை யில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்துமாறும் மனிதாபிமான உதவிகள் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்றடைவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேற அனுமதியளிக்குமாறும் கேட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் ஆயுதங்களையும் பயங்கரவாதத்தையும் சகல வன் முறைகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பிரசெல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பின் போதே இது தொடர்பான அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்துவருவது தொடர்பாகவும் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் மோதல் பகுதிகளில் அகப்பட்டிருப்பது குறித்தும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையிட்டும் கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த மோதலில் ஈடுபடும் தரப்பினர் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் யுத்தவிதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசும் புலிகளும் இந்தச் சட்ட விதிகளுக்கு அமைவாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்திருக்கிறது. மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்க புலிகள் வன்முறையையும் அச்சுறுத்தலையும் மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன் ஆயுதங்களையும் வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் புலிகள் கைவிட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை போருக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக ஆட்திரட்டல் ஆகியவற்றை கைவிட்டு நிலையானதும் நீதியானதுமான தீர்விற்கான அரசியல் நடவடிக்கைகளில் புலிகள் பங்குபற்ற வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. அதேசமயம் சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான கவலைகளுக்கு தீர்வு காணும் வகையில் சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் நடவடிக்கைகளை இலங்கை அரசதரப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீண்டகால மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதானது இறுதியான சமாதானத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வின் தேவையை மீள அழுத்தி நிற்பதாக ஒன்றிய அமைச்சர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார நிலையம்:அமைச்சர் ரிஷாத்

pregnant-lady.jpgவன்னியிலி ருந்து வரும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன்கருதி வவுனியா ஆயுர்வேத வைத்திய நிலையத்தில் விசேட மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார். வன்னியில் இருந்து சுமார் 700 கர்ப்பிணித் தாய்மார்கள் வவுனியாவுக்கு வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரசவத்தின் பின்னர் இவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்படாமல் மேற்படி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளும் அளிக்கவுள்ளதாகவும் அவர்களின் குழந்தைகளின் நலன்களை கவனிக்கவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சுகாதார அமைச்சினூடாக இவர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர வவுனியா வந்துள்ள மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் மு.கா.தனித்து போட்டி

SLMC Gen Sec M T Hasan Aliமேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் வேட்பாளர் பட்டியல்கள் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேல்மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ஹஸன் அலி அந்த இரண்டு மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று காலை பூர்த்தி செய்யப்படவிருப்பதாகவும் அப்பணி நிறைவுற்றதும் தாமதமின்றி இன்று அல்லது நாளையே வேட்புமனுதாக்கல் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.