பாராளு மன்றம் ஏப்ரலில் கலைக்கப்பட்டு ஜூலையில் பொதுத் தேர்தலொன்று நடத்தப்படக் கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. படை நடவடிக்கைகளின் பெறுபேறுகளினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தற்போது நிலைமைகள் சாதகமாக இருப்பதனால் இது பெரும்பாலும் நடைபெறக் கூடுமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளும் அதேபோல் ஏற்கனவே நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவும் அரசாங்கத்துக்கே சாதகமாக அமைந்தமையானது இவ்வாறானதொரு நகர்வுக்கு காரணமாக இருக்கலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, மேல் மாகாண சபையும் கலைக்கப்பட்டு தற்போது அதற்கான வேட்புமனு கோரல் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் மத்திய கொழும்பு பிரதேசத்தை தவிர களுத்துறை, கம்பஹா மாவட்டங்களென மேல் மாகாணத்தின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளே ஓங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் மேல் மாகாண சபை தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், எஞ்சியிருக்கும் ஊவா மற்றும் தென்மாகாண சபைகளை கலைப்பது பற்றி சித்திரை புத்தாண்டின் பின்னரே முடிவாகுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். எனினும் யுத்த வெற்றிகளால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலொன்றை நடத்தினால் பெறுபேறுகளும் சாதகமாக இருக்குமென்பது அரசாங்கத்தின் கணிப்பீடாக இருக்கலாமென்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலைமையிலேயே பாராளுமன்றம் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் கலைக்கப்பட்டு ஜூலை மாதத்தில் பொதுத் தேர்லொன்று நடத்தப்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடனேயே முடிவுக்கு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஜனாதிபதியொருவரது பதவிக் காலத்தில் 4 வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமென்பதற்கு அமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்படுகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக நடத்தப்படும் பொதுத் தேர்தல் முடிவுகளது சாதக பாதக நிலைமைகளைக் கொண்டே உரிய காலத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவது பற்றி தீர்மானமாமென்று சுட்டிக்காட்டப்பட்டது.