27

27

பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகை தர உள்ளார்.

pranab.jpgஇன்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி  கொழும்பு வருகை தர உள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பிற்கு வருகை தர உள்ளார் . அச்சமயம் ஜனாதிபதி ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இத்தகைய பின்னணியில், பிரணாப் கொழும்பு வருகை தரும்  செய்தி வந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

யாழ்., வன்னிக்கு விஜயம் செய்யுமாறு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

president.jpgமுல்லைத்தீவில் புலிகள் மனிதக் கேடயங்களாக உடயோகிக்கும் தமிழ் மக்களை விடுவிக்கவென சொந்த முறையில் வேண்டுகோள் விடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணைய தளத்துக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவி ஜெயலலிதாவையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் மேற்கொள்ளும் விஜயத்தின்போது அங்கு வாழும் தமிழ் மக்களை சந்தித்து உரையாட முடியுமெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த இரு இந்தியத் தலைவர்களும் ஜனாதிபதியின் அழைப்பு சம்பந்தமாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி புலி பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை வழங்கும் சமயத்தில் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது அவசியமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை வரமுடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவித்தும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது தொடர்பான சமரச பேச்சுக்களை தமிழ்நாட்டுத் தலைவர்கள் நடத்த முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாவிகளையும் அணைக்கட்டுகளையும் தகர்ப்பதன் மூலம் அப்பாவி பொதுமக்களுக்கு புலிகள் இயக்கம் அளப்பரிய கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதென்றும் இந்த பேட்டியின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதென்றும் ஜனாதிபதி அதில் கூறியுள்ளார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருகின்றனரெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு நோக்கி படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கை

mulli-town.jpgமுல்லைத் தீவை கைப்பற்றிய பாதுகாப்புப் படையினரின் அடுத்த இலக்கு புலிகளின் எஞ்சியுள்ள கோட்டையான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதாகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பையும், விசுவமடுவையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 4 படைப்பிரிவுகளும் 3 செயலணிகளும் மும்முனைகள் ஊடாக வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய முனைகளை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவை படையினர் கைப்பற்றியதன் மூலம் புலிகளின் கடல்வழி நடவடிக்கைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் கிழக்கு கடற்பரப்பு முழுவதையும் முற்றுகையிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அடுத்துவரும் சில நாட்களுக்குள் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை புலிகளுடனான படை நடவடிக்கையில் 95 சதவீத வெற்றியை படைத்தரப்பு கண்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா வெகு விரைவில் இறுதி வெற்றியை அடைய முடியுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து முன்னேறி பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள படையினர் தற்பொழுது அங்குள்ள தமது நிலைகளை பலப்படுத்தி வரும் அதேசமயம், புலிகளின் முக்கிய தளங்களை நோக்கி முன்னேறி வருவதுடன் ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவத்தின் நான்காவது செயலணியினர் புதுக்குடியிருப்புக்கு வடபகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் சகல மண் அரண்களையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் சுண்டிக்குளம் தெற்கு நோக்கி படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேசமயம் 58வது படைப் பிரிவினர் ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 57வது படைப் பிரிவினர் கிழக்கு முனையில் விசுவமடு பகுதியிலிருந்தும், 59வது படைப் பிரிவினர் தற்பொழுது சாளை பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜெயகாந்தனுக்கு -பத்மபூஷன் விருது

jayakandhan.jpg
இந்தியாவில் 2009ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்ம விபூஷன் விருதும், ஜெயகாந்தன் உள்ளிட்டோருக்கு பத்மபூஷனும், நடிகர் விவேக் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மவிபூஷன் விருது பெற்றோர் ..

டாக்டர் அனில் ககோத்கர், டாக்டர் சந்திரிகா பிரசாத் ஸ்ரீவத்சவா, பேராசிரியர் டி.பி.சட்டோபாத்யாயா, கோவிந்த் நாராயண், பேராசிரியர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், டாக்டர் புருஷோத்தம் லால், சுந்தர்லால் பகுகுணா, மாதவன் நாயர், சகோதரி நிர்மலா, டாக்டர் ஏ.எஸ். கங்குலி.

பத்மபூஷன் விருது பெற்றோர் ..
வி.பி.தனஞ்செயன், வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, ஜெயகாந்தன், காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி, சரோஜினி வரதப்பன், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட 30 பேர்.

பத்மஸ்ரீ விருது பெற்றோர் ..

நடிகர்கள் விவேக், திலகன், அக்ஷய் குமார், நடிகை ஐஸ்வர்யா ராய், பாடகி அருணா சாய்ராம், ஹர்பஜன் சிங், மகேந்திர சிங் டோணி, பங்கஜ் அத்வானி, ஆறுமுகம் சக்திவேல் உள்ளிட்ட 93 பேர்

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததும் அபிவிருத்திக்கான யுத்தம் காத்திருக்கின்றது – கரு ஜெயசூரிய

karu_jayasuriya.jpgவடக்கு மீட்கப்பட்டு போர் முடிவுக்கு வந்தாலும் அடுத்ததாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய யுத்தம் காத்திருப்பதாகத் தெரிவித்த ஐ.தே.க.பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜெயசூரிய, நாட்டின் பொருளாதார நிலையை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஐ.தே.க.வுக்கு மட்டுமே உண்டெனவும் தெரிவித்தார். வென்னப்புவத் தொகுதியில் உள்ள கட்டுநேரியவில் நடைபெற்ற ஐ.தே.க.கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கருஜெயசூரிய அங்கு தொடர்ந்து பேசுகையில்;

இந்த நாட்டில் இடம்பெற்று வரும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்புவதற்குமான பாரிய யுத்தம் உள்ளது. இதனை எவ்வாறு சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்த வருட நடுப்பகுதியில் பொதுத்தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்ப்பதோடு அதனை எதிர்கொண்டு பாரிய வெற்றியைப் பெற்று இந்த நாட்டை ஆளும் சக்தி எமக்குக் கிடைக்கும். அந்த நாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எமது நாட்டுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார முகாமைத்துவத்தை சரியான பாதையில் சரியான முறையில் திருப்பும் சக்தி ஐ.தே.க.கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது. மாறாக எந்தக் கட்சிக்கும் பொருளாதார முகாமைத்துவம் இல்லை. இதனை அன்று முதல் ஐ.தே.கட்சி வெளிப்படுத்தி வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டது. குறுகிய இரண்டரை வருட காலத்திற்குள் அந்த நிலை அப்போதைய ஐ.தே.கட்சியினால் முழுமையாக மாற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

மீண்டும் இந்த நிலையை மாற்றுவதற்கு முதல் படிதான் மாகாண சபைத் தேர்தல்களின் வெற்றியாகும். இதனை நாம் உறுதிப்படுத்தியதோடு எமது கட்சியை ஆளும் பலத்தைப் பெற்றுத் தாருங்கள். எமது கட்சி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

பிரபாவின் வரட்டு கெளரவமும் பிடிவாதமுமே தமிழர்களுக்கு பேரழிவைத் தேடித்தந்தது – கருணா

karuna.jpgபுலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமுமே தமிழ் மக்களுக்கு அழிவைத் தேடித் தந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் வட பகுதியை புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களே நன்மை அடைவர்.  இதனூடாக சிங்கள மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. தமிழ் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்தினரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர் புலிகள் இயக்கத்தினர் அழிவின் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறினார். ரன்பிம (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் அலரி மாளிகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாறுகையில், இலங்கையில் தமிழீழம் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்கப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிப்போம் என புலிகள் இயக்கத் தலைவருக்கு எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் அந்த யோசனையை நிராகரித்ததுடன், யுத்தத்தின் மூலம் தமிழீழம் அமைக்கலாம் எனப் பிடிவாதமாக இருந்தார். அதனால் நான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி னேன்.

புலிகள் இயக்கத்தில் 22 வருடகாலம் உறுப்பினராக இருந்த நான், அக்காலம் முழுவதும் யுத்தக் களத்திலேயே இருந்தேன். ஆனால் புலிகள் இயக்கத் தலைவர் ஒருபோதுமே யுத்த களத்திற்கு வந்திராதவராவார். அவர் ஒரு மாயை. அவரது வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமும்தான் தமிழ் மக்களுக்கு, அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்தது. அதனால்தான் அவரை தமிழ் மக்களில் 95 சதவீதமானோர் நிராகரித்துவிட்டனர்.

பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்ததன் பயனாக அங்கு மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். பாரிய அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு உதயம் திட்டம் ஊடாக அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேளையில், வடபகுதியை வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதனால் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் அன்னாரின் கரங்களைப் பலப்படுத்துவது காலத்தின் அவசியத் தேவை யாகும்.

பொய்ப்பிரசாரம் செய்வதில் புலிகள் வல்லவர்கள். இதனை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தைப் போன்று மீண்டும் கெரில்லாப் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் இங்கு கிடையாது. ஆரம்ப காலத்தைப் போன்று புலிகள் இயக்கத்தினருக்கு இப்போது தமிழ் மக்களின் ஆதரவும் கிடையாது. அவர்கள் தமிழ் மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்திருப்பவர்கள்.

இதே நேரம் பாதுகாப்புப் படையினர் தொழில்நுட்ப ரீதியாக இப்போது பாரிய வளர்ச்சி அடைந்துள்ளனர். கெரில்லா போராட்டத்தின் மூலம் இவ்வளர்ச்சிக்கு முகம் கொடுக்க முடியாது. அதனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டுத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

யாழ்.குடாநாட்டில் பாடசாலைகளை இரு நேரங்களாக இயங்கவைக்க ஏற்பாடு

யாழ்ப்பாண குடாநாட்டில் மீண்டும் பாடசாலைகளை இரு நேரங்களாக நடத்துவதற்கு கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர் தரப்பாடசாலைகளின் அபிவிருத்திச் சபை பாடசாலை ஊக்குவிப்புச் சபை, பழைய மாணவர்கள், பெற்றோர்கள் தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி காலையும் மாலையுமாக இரு நேரப்பாடசாலைகளாக நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதி நிலவுவதாலும் இயல்புநிலை ஏற்பட்டு வருவதாலும் பாடசாலைகளை இரு நேரங்களாக இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக கடந்த 20 வருடங்களாக குடாநாட்டின் சகல பாடசாலைகளும் ஒரு நேர பாடசாலையாக இயங்கிவருகின்றன.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியான சூழலில் கல்வி கற்க முடியாத நிலையில் சோர்வடைந்து வருகின்றனர் எனவும் அவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு எனவும் கல்விமான்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பாடசாலைகளை இரு நேரமாக இயக்குவது தொடர்பாக 1999 ஆம் ஆண்டு கல்வியமைச்சின் சுற்று நிருபம் தெரிவித்துள்ளது. இதேநேரம் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருநேர பாடசாலை முறையை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரின் கருத்தால் இஸ்ரேலுடனான உறவில் பெரும் விரிசல்

gaa-sa.jpgபாலஸ்தீனம் காஸா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஸா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. “காஸா’ பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுவதை பொய்களால் மறைக்க முடியாது என தயான் ஜெயதிலக்க குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல், இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தக் கூடுமென்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது. தயான் ஜெயதிலக்கவின் கருத்துகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் கடந்த வாரம் இலங்கைக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது. இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகனவை கடந்த புதன்கிழமை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

மனித உரிமை சபையில் அரபு நாடுகள் எடுத்த நிலைப்பாட்டை விட இலங்கை மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் அதனை தாம் எதிர்க்கவில்லை எனவும் பாலித ஹோகனவிடம் மார்க் சோபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய நண்பர் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரதிநிதி மிகவும் சினமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இலங்கைக்கான ஆயுத உதவிகளை இஸ்ரேல் நிறுத்தக் கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தயான் ஜெயதிலக்க இஸ்ரேலுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சிடம் எவ்வித அங்கீகாரங்களையும் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொண்ட படைத்துறை தொடர்புகளுக்கு தயான் ஜெயதிலக்கவின் கருத்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

3 நிவாரண கிராமங்கள் – பசில் ராஜபக்ஷ

basil.jpgவடக்கு வசந்தத்தின்மூலம் மீண்டும் அந்த பிரதேசத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருகின்ற மக்களுக்காக 3 நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்

அந்த கிராமங்களுக்கு அனைத்து வசதிகளையும் குறைவின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நெலுக்குளம் மெனிக்பாம் மற்றும் ஓமந்தை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள நிவாரண கிராமங்களை அண்மித்தவகையில் தபால் நிலையம் வங்கி கூட்டுறவு நிலையம் சதோச காரியாலயம் என்பவற்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தவில்லை – ஜனாதிபதி

Mahinda Rajapaksaஎந்த வொரு சந்தர்ப்பத்திலும் தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் தனிமைப்படுத்தவில்லை. தொழிலாளரின் பிள்ளைகள் பொலிஸ், பாதுகாப்பு படையில் சேர முடியும். அனைவரும் ஒருதாயின் பிள்ளைகளே என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோர்வூட் நகரில் போட்டியிடும் இ.தொ.கா.வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இ.தொ.கா.பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இக்கூட்டம் ஆரம்பமானது. குண்டு துளைக்காத கண்ணாடி பெட்டியில் பலத்த பாதுகாப்பின் மத்தியலேயே ஜனாதிபதி உரைநிகழ்த்தினார்.

இந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தோட்டத் தொழிலாளர்களே விளங்குகின்றனர். இந்நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் சகல வசதி வாய்ப்புகளும் தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.  மலையக மக்களுக்கு இன்னும் வசதி வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற வேண்டுமெனின் உங்கள் மத்தியிலிருந்து தமிழ் பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய வேண்டும். இது வரைகாலமும், எந்தவொரு அரசாங்கத்தினாலும் முன்னெக்கப்படாத பெருமளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மலையக மக்களுக்கு எமது அரசாங்கமே சிறந்த சேவைகளை வழங்கியுள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.  எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களை தனிமைப்படுத்த வில்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். பயங்கரவாதத்திலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.