யாழ்., வன்னிக்கு விஜயம் செய்யுமாறு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

president.jpgமுல்லைத்தீவில் புலிகள் மனிதக் கேடயங்களாக உடயோகிக்கும் தமிழ் மக்களை விடுவிக்கவென சொந்த முறையில் வேண்டுகோள் விடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணைய தளத்துக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவி ஜெயலலிதாவையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும் அவர்கள் மேற்கொள்ளும் விஜயத்தின்போது அங்கு வாழும் தமிழ் மக்களை சந்தித்து உரையாட முடியுமெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த இரு இந்தியத் தலைவர்களும் ஜனாதிபதியின் அழைப்பு சம்பந்தமாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி புலி பயங்கரவாதிகளுக்கு ஆலோசனை வழங்கும் சமயத்தில் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது அவசியமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். தமிழ்நாடு அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை வரமுடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவித்தும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது தொடர்பான சமரச பேச்சுக்களை தமிழ்நாட்டுத் தலைவர்கள் நடத்த முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாவிகளையும் அணைக்கட்டுகளையும் தகர்ப்பதன் மூலம் அப்பாவி பொதுமக்களுக்கு புலிகள் இயக்கம் அளப்பரிய கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதென்றும் இந்த பேட்டியின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதென்றும் ஜனாதிபதி அதில் கூறியுள்ளார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருகின்றனரெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • raja
    raja

    We appreciate you Mr President, but they will not come here because they already promised to their beloved brother (Praba) to protect him by wrong fabricated propaganda, if they come then, they would wanted to tell real situation to TN people

    Reply