யாழ்ப்பாண குடாநாட்டில் மீண்டும் பாடசாலைகளை இரு நேரங்களாக நடத்துவதற்கு கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர் தரப்பாடசாலைகளின் அபிவிருத்திச் சபை பாடசாலை ஊக்குவிப்புச் சபை, பழைய மாணவர்கள், பெற்றோர்கள் தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி காலையும் மாலையுமாக இரு நேரப்பாடசாலைகளாக நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதி நிலவுவதாலும் இயல்புநிலை ஏற்பட்டு வருவதாலும் பாடசாலைகளை இரு நேரங்களாக இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக கடந்த 20 வருடங்களாக குடாநாட்டின் சகல பாடசாலைகளும் ஒரு நேர பாடசாலையாக இயங்கிவருகின்றன.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியான சூழலில் கல்வி கற்க முடியாத நிலையில் சோர்வடைந்து வருகின்றனர் எனவும் அவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு எனவும் கல்விமான்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
பாடசாலைகளை இரு நேரமாக இயக்குவது தொடர்பாக 1999 ஆம் ஆண்டு கல்வியமைச்சின் சுற்று நிருபம் தெரிவித்துள்ளது. இதேநேரம் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருநேர பாடசாலை முறையை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.