பாலஸ்தீனம் காஸா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஸா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. “காஸா’ பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுவதை பொய்களால் மறைக்க முடியாது என தயான் ஜெயதிலக்க குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல், இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தக் கூடுமென்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது. தயான் ஜெயதிலக்கவின் கருத்துகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் கடந்த வாரம் இலங்கைக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது. இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகனவை கடந்த புதன்கிழமை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
மனித உரிமை சபையில் அரபு நாடுகள் எடுத்த நிலைப்பாட்டை விட இலங்கை மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் அதனை தாம் எதிர்க்கவில்லை எனவும் பாலித ஹோகனவிடம் மார்க் சோபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய நண்பர் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரதிநிதி மிகவும் சினமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இலங்கைக்கான ஆயுத உதவிகளை இஸ்ரேல் நிறுத்தக் கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தயான் ஜெயதிலக்க இஸ்ரேலுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சிடம் எவ்வித அங்கீகாரங்களையும் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொண்ட படைத்துறை தொடர்புகளுக்கு தயான் ஜெயதிலக்கவின் கருத்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.