2009

2009

இலங்கை பூராவும் மின்சார விநியோகத்தடை

091009ecb.jpgஇலங் கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணிமுதல் இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் நண்பகல் வரை விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதற்கு பிரதான காரணம் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்க முடிவு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

26parliament.jpg2010ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் முழுமையாக தயாராக இருந்தது. ஆனால் பொருளாதார நிபுணர்களினதும் அரசியல் கட்சித் தலைவர்களினதும் கோரிக்கைகளின் அடிப்படையிலே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது இடைக்கால கணக்கறிக் கையொன்றை முன்வைக்க அரசாங்கம் முடிவு செய்ததாக சபை முதல்வரும் சுகாதார போஷாக்கு அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தினதோ வேறு அழுத்தங்கள் காரணமாகவோ இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டுக்காக இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்திருப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

இடைக்கால கணக்கறிக்கை இந்த மாத முதற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  நவம்பர், டிசம்பர் மாதங்கள் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நடத்தப்படும். குழுநிலை விவாதத்தின் பின்னர் இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்படும்.

அரசியல் யாப்பின் பிரகாரமே அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இலங்கையில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவது இது முதற் தடவையல்ல. 1866 இல் முதன் முதலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் முதற் தடவையாக 1931 இல் முதன் முதலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்காக 1982ல் ஆட்சியில் இருந்த ஐ. தே.க அரசு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்தது.

1994 இல் அன்றிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்காக 1999 நவம்பரில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் ஐ. தே. க அரசு கூட இடைக்கால கணக்கறிக்கை முன்வைத்தது.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவது புதிய விடயமல்ல. 2010ல் தெரிவாகும் புதிய அரசாங்கத்திற்கு தாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வாய்ப்பளிக்கும் வகையிலே வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் அரசு பணிகளை தடையின்றி தொடரவுமே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை முன்வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் 2010ல் தெரிவாகும் புதிய அரசாங்கத்திற்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க, புதிய வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்க வாய்ப்பு ஏற்படும்.

பாராளுமன்றத் தேர்தலின் பின் புதிய அரசாங்கமொன்றும் புதிய அமைச்சரவையொன்றும் தெரிவாக உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது பொருத்தமல்ல. இது குறித்து பொருளாதார நிபுணர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அரசுக்கு தெரியப்படுத்தின என்றார்.

வடபகுதி மக்களை உச்ச பாதுகாப்புடன் மீள்குடியேற்றுவதே அரசின் நோக்கம் – பிரதமர் சபையில் அறிவிப்பு

1509sri-lankan-prime-minister.jpgவடபகுதி மக்களை உச்ச அளவு பாதுகாப்புடன் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரை யாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டு மக்க ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பயங்கரவாதம் இப்போது தோற்கடிக் கப்பட்டுள்ளது. என்றாலும் அதன் நிழலை இன்னும் சமூகமயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதை நாமறிவோம்.

இது நாட்டினுள் மட்டுமல்லாமல் நாட்டிற்கு வெளியிலும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை இனம் காண்பதே இன்று எமது பணியாக உள்ளது. இதற்கு அவசரகாலச் சட்ட ஏற்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. அண்மையில் புலிகளின் ஆளில்லாத விமானத்தின் பாகங்களை எமது பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அத்தோடு பெருந்தொகை வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். எமது பாதுகாப்பு படையினரிடமுள்ள சகல ஆயுதங்களையும் புலிகள் கொண்டிருந் தனரென்பதையே இவை காட்டுகின்றன. புலிகள் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் மீட் டெடுத்து வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களையும், வெடி பொரு ட்களையும் ஏன் புதைத்து வைத்தார்கள் என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் பின்னொரு சமயத்தில் இவற்றை மீண்டும் பயன்படுத்தும் நோக் கிலேயே புதைத்திருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. அதனால் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இட மளிக்க முடியாது. அதற்கான முடிவை நாம் ஏற்கனவே எடுத்துவிட்டோம்.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து தற்காலிக இடங்களில் தங்கி யுள்ள மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற முறையில் கொலைக் களத்தில் தள்ளிவிட எம்மால் முடியாது. இதனை சிலர் எவ் வளவு தான் கூறினாலும் புரிந்துகொள் கிறார்கள் இல்லை. அதேநேரம், அந்த மக்களை வீணாகத் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்க வைத்து பராமரிக்கவும் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து நாம் செயற்படுகின் றோம். இவ்வாறான நிலையில் மூளை விகாரமடைந்துள்ள ஓரிருவர் அந்த இடங் களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். எந்தப் பயனையும் எதிர்பாராமல் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொள்ளுகின் றார்கள். இதனூடாக பாதுகாப்பு படை யினருக்கும், அரசாங்கத்திற்கும் மாத்திரமல்லாமல் நாட்டின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

இதேநேரம், ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்களது பிர சார இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர். அந்த நாடுகளின் பாராளுமன்றங்களுக்குள்ளும் அவர்களது நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இதற்கு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சில சிங்கள வர்களும் உதவுகின்றனர். இது கவலை தரும் நிலமையாகும்.

இதேவேளை, ஐரோப்பாவிலுள்ள மற்றொரு குழுவினர் ஆயுதக் குழுவொன்றை தயார்படுத்தி வருவதாகத் தகவல் கிடைத் துள்ளது. புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை, அச்சுறுத்துவதே இக்குழுவினரின் நோக்கம். அவர்கள் ஊடகங்களுக்குள் மறைந்திருந்து இவ்வாறு செயற்படுகின்றனர். இந்தத் தகவல்களை அதிகாரிகளும் இனம் கண்டுள்ளனர்.

இவ்வாறான குழுக்கள் தலைதூக்குவது நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இந்நாட்டில் சகலரும் அச்சம், பீதியின்றி வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

அதனால் பயங்கரவாதிகளையும் பாதாள ஆயுதக் குழுக்களையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவது அவசியம். இல்லாவிடில் இந் நாட்டு மக்கள் சுதந்திரத்தை இழந்துவிடுவர்.

இதேவேளை கொழும்புக்கும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் வந்த புலிகள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாக எமது உளவுப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டிருக்கி ன்றன. அதனால், ஆயுதங்கள் குறித்தும், பயங்கரவாதிகள் தொடர்பாகவும் நாம் மேலும் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

பாகிஸ்தான் புலனாய்வு குழு வருகை

210909flag.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்யவென பாகிஸ்தானிய புலனாய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மூன்றாம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இலங்கை சக்திகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து பாகிஸ்தான் குழுவினர் அது பற்றி ஆராய இலங்கை வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய குழு இரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள போதிலும், அது மேலும் நீடிக்கலாமென்றும் மலிக் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்களைப் பகிரங்கப்படுத்துவதென பாகிஸ்தான் குழு தீர்மானித்துள்ளதுடன், துரித விசாரணைகளுக்காக இலங்கையுடனான ஒத்துழைப்பு தொடருமென்றும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான தகவல் பரிமாற்றங்களின் மூலம் விசாரணையை வலுப்படுத்த முடியுமென்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நீடிப்பு 70 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 70 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேறியது. பிரேரணைக்கு எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 82 வாக்குகளும் கிடைத்தன.

ஐ. தே.க.,  ஸ்ரீல. மு. கா.,  ஜே. வி. பி. ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

ஜனாதிபதி தலைமையில் தம்புள்ளையில் ஏர்பூட்டு விழா

290909mahinda.jpgஇவ்வருடம் பெரும்போக வேளாண்மைச் செய்கையை மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கும் நோக்கில் தம்புள்ளையில் எதிர்வரும் 12ஆம் திகதி ஏர்பூட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாத்தளை மாவட்ட அரச அதிபர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் நடைபெறவிருக்கும் இவ்வேர்பூட்டு விழவில் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

கிழக்கு இலங்கையில் புடவை விற்பனையில் ஈடுபட்ட மேலும் சில இந்தியர்கள் கைது

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டிற்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிஸார், குறிப்பிட்ட சந்தேக நபர்களை விற்பனைப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். வாகரையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

   

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

091009.jpgநாகப் பாம்பு தன்னைத் தீண்டிவிட்டதை அறியாத பதினைந்து வயது பாடசாலை மாணவி, அப்பாம்பினை கொல்ல முயன்ற தகப்பனை தடுத்து பாம்பைக் காப்பாற்றினார். எனினும் சிறிது நேரத்தினுள் அப்பாம்பின் விஷம் உடலில் ஏறியதால் அம்மாணவி பரிதாபகரமாக மரணமானார். இச் சம்பவம் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் உள்ள ஊரியால என்னும் விவசாயக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் குறித்து மேலும் கூறப்படுவதாவது :- ஊரியாவ கிராமத்தில் உள்ள விவசாயியான இலங்கக்கோன் தனது குடும்பத்தாருடன் இங்கு வசித்து வருகின்றார். சம்பவம் இடம்பெற்ற தினமான செவ்வாயன்று (06.10.2009) வழக்கம் போன்று இரவு பணிகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று விட்டனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் தன் மீது ஏதோ ஊர்ந்து செல்வதை அவதானித்த இலங்கக்கோன் படுக்கையை விட்டு எழுந்து பார்த்தபோது நாகப்பாம்பொன்று ஒரு மூலையில் நிற்பதை அவதானித்தார். அவ்வமயம் வீட்டிலுள்ள அனைவரும் எழுந்துவிட்டனர்.

இலங்கக்கோன் பாம்பை அடித்துக்கொல்ல முயன்ற போது அவரது மகளான சிங்கள மகா வித்தியாலயத்தில் பயிலும் 15 வயது நிரம்பிய நிரோஷா சந்திரரத்தின என்பவர் குறுக்கிட்டு பாம்பை அடிக்க வேண்டாமென்றும் அது எமக்கு எதுவிதமான தீங்கும் செய்யவில்லையே என்று கூறவும் தகப்பன் மனம் இரங்கி பாம்பை கொல்லாமல் துரத்தி விட்டார்.

இதனையடுத்து சற்று நேரத்தினுள் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், தொண்டை அடைப்பதாகவும் மகள் நிரோஷா தெரிவித்தார். சில கைமருந்துகள் செய்தும் நிலைமை மோசமாகவே புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானார்.

பிரேத பரிசோதனையின் போது நிரோஷாவின் காலில் நாகப் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. மரண விசாரணை நடத்திய புத்தளம் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம். எச். எம். சபீயூ பாம்பு கடித்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார். வைத்திய அதிகாரி ஏ. ரவீந்திரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைவு

இடம் பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.  இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்

இந்த மாணவன் புதிய சூழலில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தனது படிப்பை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இலங்கை – போட்டி நிகழ்ச்சிகள் 3 நாடுகளில்

cricket_.jpgஇலங்கை,  இந்தியா,  பங்ளாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில்  2011-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை “ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. ஏ,  பீ, என இரு பிரிவுகளிலும்; தலா 7 அணிகள் இடம் பெறுகின்றன.

ஜொஹனஸ்பர்கில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் வௌ;வேறு பிரிவுகளிலும்,  அவுஸ்திரேலியா,  தென்னாபிரிக்கா ஆகியவை வேறு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி “ஏ’ பிரிவில் இலங்கை,  அவுஸ்திரேலியா,  பாகிஸ்தான், நியூஸிலாந்து, சிம்பாப்வே,  கனடா,  கென்யா அணிகள் இடம்பெறுகின்றன. “பி’ பிரிவில் இந்தியா,  தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்ளாதேஷ்; அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் அடங்குகின்றன.