2009

2009

தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லை -எஸ்.பி. திசாநாயக்க

sbdisanayakka.jpgதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மகிந்த ராஜபக்ஷ அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லையெனத் தெரிவித்துள்ள ஐ.தே.க. வின் தேசிய அமைப்பாளரான எஸ்.பி. திசாநாயக்க, இனவாதம், பயங்கரவாதமென எத்தனை நாளைக்கு இவர்கள் கூறமுடியுமெனவும் கேள்வியெழுப்பினார். பலகொல்ல, கெங்கல்ல, பள்ளேகல பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில், மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய எஸ்.பி. திசாநாயக்க மேலும் தனது உரையில்;

“இந்த அரசாங்கம் இன்னும் சில காலத்திற்கு மட்டுமே. இவர்களிடம் எந்த அபிவிருத்தி திட்டமும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய கைத்தொழில்கள் எவையும் உருவாக்கப்படவில்லை. சம்பள உயர்வு இல்லை. வாழ்க்கைச் செலவு கூடிச் செல்கிறது. இனவாதம், பயங்கரவாதம் என்று எத்தனை நாளைக்கு இவர்கள் கூறமுடியும்? சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசிடம் உரிய தீர்வு கிடைக்காது. இந்த அரசு மீது சிறுபான்மையினர் நம்பிக்கை இழந்துள்ளனர்.

மலையகத்தில் தொண்டமான், சந்திரசேகரன், ஐ.ம.சு.மு. ஆகிய பிரபல அரசியல்வாதிகளையும் கட்சியினையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். அந்த மக்கள் ஐ.தே.க.வுக்கே வாக்களித்தனர். இந்த நன்றியை ஐ.தே.கட்சியோ, அதன் முதலமைச்சர் வேட்பாளராக அதிக தெரிவு வாக்குகளை பெற்ற நானோ மறக்கமாட்டோம். உங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த நாட்டினை விடுதலைசெய்து மீண்டும் சுபீட்சமாக சகலரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய, சுமைகள் குறைந்த ஒரு நாடாக இலங்கையை உருவாக்குவோம்.

இந்த அரசாங்கத்தினை மாற்றி புதிய அரசாங்கத்தினை, ஐ.தே.க.யினை ஆட்சிபீடமேற்றும் முயற்சியில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

பிரான்ஸ் பெண் மீது காலியில் பாலியல் வல்லுறவு

2222.jpgஉல்லாசப் பயணம் மேற்கொண்டு காலிநகரில் தங்கியிருந்த பிரான்ஸைச்சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரைக் காலி பொலிஸார் தேடிவருகின்றனர். காலி நகரில் வீடு ஒன்றில் வாடகைக்கு அமர்ந்திருக்கும் இப்பெண் உல்லாசமாக வெளியே போய்வருபவர் என்றும் அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் உணவை அருந்திவந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதன்கிழமை இந்த வீட்டுக்கு வந்த ஒருவர் உட்புகுந்து ஆயுதத்தைக் காண்பித்து சத்தமிடக்கூடாது என்று கூறி அப்பெண்மீது குற்றம் புரிந்ததாக காலிப் பொலிஸ் நிலையத்தில் அவர் முறையிட்டுள்ளார். அத்துடன் வந்த நபர் அப்பெண்ணிடமிருந்து 1000 யூரோ நாணயத்தாள்களையும் எடுத்துசென்றுள்ளார். இப்பெண் சில மணி நேரங்களால் வீட்டுக்கு வெளியே வந்து அயலவர்களுக்கு நடந்த சம்பவத்தைக்கூறி காலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார். தற்போது இப்பெண் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பசுமை நகராக்கத்தை முன்னெடுக்க சுகாதார அமைச்சு திட்டம்

colombo-sri-lanka.jpgஉலக சுகாதார நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள “பசுமையான நகராக்க திட்டத்தை’ நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

மேலும் உலகின் நகரங்கள் அல்லாத பகுதிகளில் சுகாதாரத்துக்கு கேடான வகையில் நிர்மாணிக்கப்படும் கட்டிடத் தொகுதிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவனம் செலுத்திவருகிறது.

இலங்கையில் இவ்வாறான கட்டிட நிர்மாணங்களுக்கு தடைகள் இல்லாத நிலைமை காணப்படுவதோடு இதற்கெதிராக மிகக் குறைவான தண்டனைகள் வழங்கப்படுவதால் இது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லையென சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு நிர்மாணிக்கப்படும் அலுவலகக் கட்டிடங்களில் போதிய காற்றோட்ட வசதிகளோ,சூரிய வெளிச்சமோ கிடைப்பதில்லை. அத்துடன் அலுவலக ஊழியர்கள் செயற்கையான வெளிச்சம் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமைகளால் நீரிழிவு, இருதயநோய், டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். நகர மற்றும் புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து பசுமை கருத்திட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்து வந்த மூவர் பொலிஸாரால் கைது

police-arrest.jpgவாடகைக் கென அமர்த்தப்பட்டு பதுளை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் சிலவற்றிற்கு போலியான உரிமைப்பத்திரங்களை தயாரித்து அவ்வாகனங்களை விற்பனை செய்துவந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாரஹேன்பிட்டியவைச் சேர்ந்த உபுல் விஜயரட்ண, வஜிர கிசாந்த, எஸ்.லியனகே ஆகியோரையே பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

எல்லைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.பண்டார தலைமையிலான குழுவினர் மேற்கண்ட மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளின் போது திடுக்கிடும் பல விடயங்கள் தெரியவந்துள்ளன.

கொழும்புப் பகுதியிலிருந்து பதுளை மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு போலி உரிமைப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவ்வகையில் விற்பனை செய்யப்பட்ட நான்கு வாகனங்களையும் போலி உரிமைப்பத்திரம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி இயந்திரத் தொகுதியொன்றையும் கையடக்கத் தொலைபேசிகள் நான்கினையும் மற்றும் போலி உரிமைப்பத்திரங்கள் தொடர்பான பெருமளவிலான ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் இளைஞர், யுவதிகள் பலரை தொழில் வாய்ப்புகருதி ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாக்களைப் பெற்று மோசடி செய்தவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் எச்.என்.பி.அம்பன்வெல கூறினார்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீரங்கிகளால் அவர்கள் மீதே தாக்குதல்!

wanni-operations.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் கனரக பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கெதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான இராணுவத்தின் 53ஆம் படையணியினர் சில தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 மி.மி. கனரக பீரங்கி இரண்டைக் கண்டுபிடித்திருந்தனர். 27 கிலோ மீற்றர் சுடுதூரத்தைக் கொண்ட இந்த பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கு எதிராக வன்னியில் குண்டுகளை ஏவி வருகின்றன.

இது தொடர்பாக களமுனையில் உள்ள படை வீரர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றும் நோக்குடன் நாம் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். புலிகளின் இந்த கனரக பீரங்கிகள் கைப்பற்றப்பட்டமை வியக்கத்தக்க வெற்றியாகும். இந்தப் பீரங்கிகளினூடாக நாம் இன்று எமது எதிரியை தாக்கி வருகின்றோம் எனக்கூறினார். 

இராணுவ தலைமை அதிகாரியாக ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி – பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

uthaya_nanayakara_.jpgஇராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போது இராணுவ தலைமை அதிகாரியாகக் கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரல் நிசங்க விஜேசிங்க நாளையுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார். இவரது வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைப் பிரிவுக் கட்டளைத் தளபதியாக கடந்த 3 வருடங்கள் பணியாற்றிய இவர் அண்மையில் இராணுவத்தின் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டார் எனவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இன்று கருப்புத் தினம்

court-tamilnadu.jpg
வழக்கறிஞர்களைத் தாக்கிய காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌ வேண்டும் என்று வலியுறுத்தி 5-வது நாளாக வழக்கறிஞர்கள் இன்று உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் தடியடியைக் கண்டித்து இன்றைய தினத்தை கருப்பு தினமாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கடைபிடித்தனர். அகில இந்திய பார்கவுன்சில் தீர்மானத்தின்படி, கருப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது. அத‌ன்படி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். செ‌ன்னை எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌ம் மு‌ன்பு‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கரு‌ப்பு பே‌ட்‌ஜ் அ‌ணி‌ந்தபடி போரா‌ட்ட‌த்தில் ஈடுபட்டனர்.

சென்னை வழ‌க்க‌றிஞ‌ர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கரு‌ப்பு‌க் கொடி ஏ‌ந்‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்‌தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

eastern-university.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து கலைப் பீடத்தின் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி மாணவியின் தற்கொலை, ஏனைய மாணவர்களிடையே பதட்ட நிலையை ஏற்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.விடுதியில் தங்கியிருந்த ஏனைய மாணவர்கள் சிலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொண்ட மாணவியான தனபாலசிங்கம் நிரூஜா(வயது 23)வின் மரண விசாரணை இன்று மாலை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை நடத்திய செங்கலடி வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சுகுமார், கழுத்தில் சுருக்கிட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவியின் சடலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியாவிலுள்ள உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுடர் ஒளி ஆசிரியர் கைதான செய்தியை ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன : லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

vithyatharan.jpgநேற்று சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் பலவாறு செய்திகள் வெளியிட்டிருந்தன என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

” நேற்றுக் காலை 10.00 மணியளவில் சீருடையில் வந்த பொலிஸாரே சுடர் ஒளி ஆசிரியர் வித்தியாதரனை கைது செய்தனர் . இது தொடர்பில் நாம் பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் வினவிய போது, அவர் கடத்தப்படவில்லை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார். சில ஊடகங்களில் அவர் கடத்தப்பட்டு தெமட்டகொட பகுதியில், அவரை விட்டுச்சென்றதாகச் செய்தி குறிப்பிட்டிருந்தது தவறானது. கடந்த 20 ஆம் திகதி விடுதலைப்புலிகள் தலை நகரில் நடத்திய விமானத்தாக்குதல் தொடர்பிலான தொலைபேசி இலக்கங்கள் குறித்தே அவரைப் பொலிசார் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்களிலிருந்து அரசு என்ற வகையில் நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் வித்தியாதரன் இருக்கும் இடத்தில் பல விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர்தான் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதா அல்லது இச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனில் அதற்கேற்ற நடவடிக்கைகளை தொடர்வதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

jet-1301.jpgஇலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமானங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை இது பொய்யான தகவல்” என அவர் தெரிவித்தார்