2009

2009

ஜூன் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை

bati-trnco.jpgதிரு கோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண சபையின் கடந்த கால வேலைத் திட்டங்கள் ,எதிர் கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட18 பஸ் வண்டிகளில் 10 பஸ் வண்டிகள் அரசாங்கத் திணைக்களங்கள் ,பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மிகுதி 8 பஸ் வண்டிகள் தற்போது தலா 100 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் 4 ரயில் பஸ்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த 4 ரயில் பஸ்களும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் பகல் நேரம் சேவையில் ஈடுபடும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான்கு சிங்களப் புலிகள் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய நான்கு சிங்களப் புலி உறுப்பினர்களை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பு துறைமுகத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள இந்த சிங்கள புலி உறுப்பினர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட இருந்ததாகத் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளிடம் இலட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு குறித்த சிங்கள நபர்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவுப் பணிக்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஈழத்தமிழருக்காக இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்படவில்லை: கலைஞருக்கு ராமதாஸ் பதில்

26-ramsoss.jpgமுதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சனையால்தான் இரண்டு திமுக ஆட்சியையே பறிகொடுத்தது.   எங்களுக்கா ஈழத்தமிழர் நலனில் அக்கறை இல்லை என்று ராமதாசுக்கு கேள்வி கேட்டு அறிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்? நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.
 
இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.

நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம்சாற்றி ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம். அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.

37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார்.  அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.

எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை. எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் கலைஞர் முதல்வர்:ராமதாஸ்

jaya-ram.jpgபுதுச் சேரியில் இன்று டாக்டர் ராமதாஸ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திமுக கூட்டணியில் இருந்த நீங்கள் தற்போது அதிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சாரம் எப்படி இருக்கும்?

1967க்கு பிறகு மாநில கட்சிகள் தான் வளர்ந்து வருகின்றன. ஒரு கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள்  தொடர்ந்து அதே கூட்டணியில் இருப்பது இல்லை. மாறி மாறி தான் கூட்டணி ஏற்படும். மாநில பிரச்சனைகளை முன்வைத்து தான் பிரச்சாரம் செய்வோம்.

நீங்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு உங்களை முதல்வர் கருணாநிதி அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறாரே?

அரசியல் லாவணி பற்றி அவர் தான் அதிகமாக பேசுவார். அதே சமயம் அரசியலில் அநாகரிகமாக பேசுவதிலும், எழுதுவதிலும் முதல் அரசியல் தலைவரும் அவர்தான்.

மதுவிலக்கு பற்றி நீங்கள் கூறியிருப்பது புதுச்சேரிக்கும் பொருந்துமா?

புகையிலையை தேசிய அளவில் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டோம். அதேபோல மதுவிலக்கையும் தேசிய அளவில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோ னேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்தோனேஷியாவில் பாபுவா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெயபுராவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

பூமிக்கடியில் சுமார் 108 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை. 

வருண் காந்தி மீது மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு

india-varun.jpgபாஜக வேட்பாளர் வருண் காந்திக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. சனிக்கிழமை பிலிபித் சிறைக்கு முன்பு பாஜகவினர் நடத்திய பெரும் கலவரம் தொடர்பாக வருண் மீது கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், பொதுச் சொத்துக்களை அளித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருண் காந்தி கோர்ட்டுக்கு வந்து ஆஜராகும் நாடகம் நேற்று அரங்கேற்றப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பாஜகவினர் திரண்டு வந்தனர்.

கோர்ட்டுக்கு வெளியே அவர்கள் பெரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதேபோல, வருண் காந்தியை சிறைக்குக் கொண்டு சென்றபோதும் அவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறைக்கு வெளியே அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கும்பலைக் கலைத்தனர்.

இந்த வன்முறையில் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், வருண் காந்தி மீது, கலவரத்தைத் தூண்டியதாக போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருண் மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டுதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, முஸ்லீம் காவல்துறை அதிகாரி ஒருவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதை பிலிபித் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

ஆயுதங்களை கைவிடுமாறு ஜனாதிபதி விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் அழைப்பு

mahinda-rajapaksha.jpgsampandar-pr-con.jpgmano.jpgபாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்த அழைப்பானது துரதிர்ஷ்டவசமானதாகும். சிறிய நிலப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையை கைவிடுவதாகவும் கடைசித் தறுவாயிலிருக்கும் பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதான முயற்சியாகவும் அது அமையும்.

பாதுகாப்பு வலயங்களில் பணயக்கைதிகளாக புலிகளால் வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக ஜனாதிபதி வேண்டுகோளை விடுத்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் நேற்று சனிக்கிழமை பதிலறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இறப்புகள், காயங்கள், தமிழ் பொதுமக்கள் சிக்கியுள்ளமை தொடர்பாக, புலிகளின் பொறுப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் கடிதம் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பிரிவினைவாதம், புலிகளின் பயங்கரவாதத்தை புகழும் நடவடிக்கைகள், இலங்கை அரசு அதன் மக்களின் நலன்களுக்கு எதிராக பிரசாரம் செய்யும் இணையத்தளங்கள் உட்பட பல இணையத்தளங்களில் அக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்த அழைப்பானது துரதிர்ஷ்டவசமானதாகும். சிறிய நிலப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையை கைவிடுவதாகவும் கடைசித் தறுவாயிலிருக்கும் பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதான முயற்சியாகவும் அது அமையும். மோதல் பகுதியிருந்து பொதுமக்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியும் அரசாங்கமும் செப்டெம்பர் முதல் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்துவந்துள்ளனர். அச்சமயம் தமிழ்க் கூட்டமைப்பு இதில் ஈடுபாடு காட்டவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிலர், இலங்கைப் படையினரின் முன்னேற்றத்தைப் புலிகள் தடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளினால் இடங்களில் வைக்கப்பட்ட பொதுமக்கள் பெரும் அபாயத்தில் இருந்தனர். அது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு அமைதியாக இருந்தது.

மோதல் சூன்யப் பகுதியில் புலிகள் ஆட்லறியை வைத்து தாக்குதல் நடத்திய போது தமிழ்க் கூட்டமைப்பு ஒரு வார்த்தைதானும் தெரிவிக்கவில்லை. அரசு 1,250 மெற்றிக்தொன் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் 1,020 மெற்றிக்தொன் பொருட்களை அனுப்ப உள்ளது. கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான விநியோகங்களை அனுப்பிவைப்பதை உறுதிப்படுத்த ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தை எடுத்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் விமான, ஆட்லறி தாக்குதல்களால் சராசரியாக 40- 50 பொது மக்கள் கொல்லப்படுவதாகவும் பலமடங்கானோர் காயமடைவதாகவும் தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது. தற்போதைய மனிதாபிமான நடவடிக்கையில் ஆயுதப் படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயற்படுவதாக கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இலங்கை ஆயுதப் படைகள் எந்தவொரு ஆட்லறிகளையோ கனரக ஆயுதங்களையோ பிரயோகிக்கவில்லை. விமானப்படையினரும் குண்டுவீச்சு நடத்தவில்லை. ஆயினும் புலிகள் ஹெலிக் கொப்டர்கள் மீது மோதல் சூன்யப்பகுதியிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தினமும் 40- 50 பொதுமக்கள் கொல்லப்படுவது என்பது மிகைப்படுத்தப்பட்டதென்று நாம் நம்புகின்றோம்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்படுவது மற்றும் காயமடையாமல் பொதுமக்கள் இறப்புக்கள் ஏற்படுவதாக சொல்லப்படுவது சாத்தியமற்றதொன்றாகும்.

சுயாதீன ஊடகங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தமிழ் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கமுடியாது அதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவிலுள்ள இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நிலையங்களுக்கு உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்கள் பலதடவை செல்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியது.

3 இலட்சம் பேர் மோதல் பகுதிகளில் இருப்பதாக தமிழ் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. புள்ளிவிபரம் தொடர்பாக மூன்று வித்தியாசமான தொகைகள் பற்றி குறிப்பிட்டிருப்பதை தமிழ் கூட்டமைப்பு ஒத்துக்கொண்டுள்ளது. கடந்த மாதம் 56 ஆயிரம் பேர் வரை வெளியேறிவிட்டனர். அங்கு பட்டினியால் மரணமடைந்திருப்பதாக கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் போதியளவு உணவருந்தியிருப்பதாக தோன்றுகிறது. அங்கு உணவுத்தட்டுப்பாடு இல்லை என அப்பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இந்த வருடம் மாத்திரம் 3 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தமிழ் கூட்டமைப்பு கூறுகிறது. அரசு ஒருபோதும் உணவு, மருந்தை யுத்தத்திற்கான ஆயுதமாக பயன்படுத்தவில்லை.

ஆயுதக் குழுவொன்றுக்கு உணவு, மருந்து வழங்கும் ஒரேநாடு உலகில் இலங்கை மட்டுமேயாகும். மேலும் கொல்லப்படுவோர், காயமடைவோர் தொடர்பான எண்ணிக்கையை எவராலும் உறுதிப்படுத்த முடியாது. புலிகள் பொதுமக்கள் மத்தியில் சீருடையின்றி கலந்திருக்கும்போது இதனை கூறமுடியாது அத்துடன் புலிகள் பலவந்தமாக ஆட்களைத் திரட்டுகின்றனர்.

வடக்கில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்பதில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். யாழ் குடாநாட்டில் சாத்தியமான அளவுக்கு துரிதமாக உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் தமது நோக்கம் குறித்து தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.புளொட் தலைவர் த.சித்தார்த்தனின் யோசனைக்கு பதிலளித்த ஜனாதிபதி, வவுனியா மாவட்டதிலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் சாத்தியம் குறித்து கவனத்தில் கொள்வதாக கூறியுள்ளார். வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமான முறையில் தெரிவுசெய்வதே தமது விருப்பம் என்றும் அவர் தெரிவித்திருப்பதுடன் குறுகிய தனிப்பட்ட அல்லது கட்சி நிகழ்ச்சித் திட்டங்களை நிராகரித்துவிட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் வடக்கு, கிழக்கு மக்களின் நிலையை மேம்படுத்த அரசுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில்,

அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் படையினரின் வான் மற்றும் ஷெல் தாக்குதல்களில் தினமும் 50 பொதுமக்கள் வரையில் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை

மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர். மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கப்படுகின்றது.

இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர். ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக பொய் கூறுகின்றது .

எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழக்கின்றனர்.

இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.

எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது. இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும்,

போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்,

ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்”

என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று யோசனைகள் இல்லாமல் அரசுடன் கூட்டமைப்பு பேச மறுத்தது சரியானதே -மனோ கணேசன் எம்.பி.

மாற்று அரசியல் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது மிகச் சரியான அரசியல் முடிவாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டின் கட்சிப் பிரதிநிதிகள் குழு நடத்தியுள்ளது. இக்குழுவில் 90 வீதமான விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறிவருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. அடிப்படை விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு சர்வகட்சிக் குழுவில் கிடையாது.

இந்நிலையில், முந்தைய ஆண்டில் இக்குழுவினால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு ஒரு மாற்றுத் திட்ட யோசனை அறிக்கையைத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளித்தது. இந்தக் குழுவிலே தமிழ், முஸ்லிம்களைவிட சிங்கள அங்கத்தவர்களே அதிகம் இருந்தார்கள். இருந்தாலும், இந்தக் குழு வெளியிட்ட யோசனைகள் வரவேற்கத்தக்கவை. இந்த யோசனைகளை தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் அச்சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்திருந்தது. இதற்கான உறுதிமொழி புதுடில்லியில் வைத்து இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினால் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இந்த உண்மையை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனால், கொழும்பு திரும்பியவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தீவிரவாதக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டது.

இன்று பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாகக் குறைந்தபட்சம் இந்த யோசனைத் திட்டங்களையாவது அறிவித்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இது சம்பந்தமாக இந்திய அரசாங்கமும் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து வெளியிடுவதைத் தவிர எதுவுமே செய்வதாகத் தெரியவில்லை.

இந்த யோசனைகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக அறிவிக்குமானால் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு அரசுடன் கட்டாயமாகப் பேச வேண்டுமென நாம் கூறவரவில்லை. இதுபற்றிய முடிவைக் கூட்டமைப்பே எடுக்க வேண்டும். அதைப் பரிசீலிக்க வேண்டுமென்றே நாம் கூறுகிறோம்.

ஆனால், 20 வருடங்களுக்கு முன்னாலேயே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை வட, கிழக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசிய சிக்கலுக்குத் தீர்வாக திணித்துவிடலாம் என்ற அபிப்பிராயத்தைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

“வணங்காமண்” 31 ஆம் திகதி இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படுகின்றது. வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை

vanangamanship.jpg வன்னியில் அவலப்படும் மக்களுக்கு அவசர உதவியாக 400 மெற்றிக் தொன் மருந்து மற்றும் உணவுப் பொருள்களுடன் “வணங்கா மண்” கப்பல் எதிர்வரும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வன்னி நோக்கிப் புறப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை அனுப்பும் அமைப்பான “ஏசிரி”யின் பணிப்பாளர் கிரஹாம் வில்லியம் சன்ஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி மத்திய இலண்டனில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வை அடுத்து “வணங்காமண்” முதலாவது பயணத்தை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஆரம்பிக்கும். இந்த நிகழ்வில் புலம் பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆண், பெண் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கப்பல் பயணத்தை ஆரம்பித்து வைப்பார்கள் எனத் தெரிய வருகிறது.

இதேவேளை, மனிதாபிமான உதவிப் பொருள்களை எடுத்து வரும் கப்பல் முல்லைத்தீவுக்குச் செல்ல வசதியாக அது சென்றடையும் நாளில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் (சர்வதேச மட்டத்திலான) கோரிக்கை ஒன்று விடுக்கப்படும். கப்பல் பிரிட்டனிலிருந்து புறப்படும் வேளையில் அந்தச் சர்வதேசக் கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதுபெரும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் கௌரவிப்பு

batt.jpgமுதுபெரும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் கிழக்கிலங்கை மனித பொருளாதார அபிவிருத்தி(எகெட்) நிறுவனத்தின் 30 வருட நிறைவு தின வைபவத்தில் விருது வழங்கி கௌரவிக்கபப்ட்டுள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடை பெற்ற இவ் வைபவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை துணை ஆயர் வண. ஜோசப் பொன்னையா ஆண்டகை இந்த விருதை கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு வழங்கினார் .

இந்நிகழ்வில் செடெக் மற்றும் ஹரித்தாஸ் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளரான அருட் தந்தை டொமினியன் பெர்னான்டோவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருதை மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.வாசுதேவன் வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை ஆயர் வண.பொன்னையா ஜோசப் ஆண்டகை, “யுத்த சூழ்நிலை முடிந்தாலும் மக்களின் தேவைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை.மனிதாபிமான பணிகள் மேலும் தொடர் வேண்டும்” என்றார்.

இந்தோனேஷியா – இலங்கை நாளை விசா தவிர்ப்பு ஒப்பந்தம்

hasan.jpgஇந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜுதா இன்று இலங்கை வருகிறார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இவர், அமைச்சர் ரோஹித போகொல்லா கமவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரை நாளை 30 ஆம் திகதி இவர் சந்தித்துப் பேசவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விசா தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.

இதேவேளை, இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், “இந்தோனேஷிய வெளிவிவகாரக் கொள்கையும் ஏசியானும், “எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்துவார். கொழும்பு, சர்வதேச உறவுகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இந்த சொற்பொழிவு இடம்பெறும்.