2009

2009

மேற்கு வங்கத்தில் பெரும் புயல் கடும் சேதம், 45பேர் பலி

rain.jpgகொல்கத்தா வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அய்லா புயல் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கக் கடலில் மேற்கு மத்திய பகுதியில் ஒரிசாவின் பாரதீப துறைமுகத்திலிருந்து தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று முன்தினம் காலை பிரதீப்பின் தென் கிழக்கே 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.

அது மேலும் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து சாகர் தீவில் இருந்து 100 கிலோமீட்டர் கிழக்கே மேற்கு வங்காளம்- வங்காள தேசத்துக்கு இடையே நேற்று மாலை கரையை கடக்கலாமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் அய்லா புயல் கொல்கத்தாவை நெருங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

இலங்கையை ஆதரிக்கும் சீனா- இந்தியா

இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் இந்த மனித உரிமை பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் (UNHCR ) இன்று ஜெனீவாவி்ல் நடக்கிறது.

இலங்கையில் இடம் பெயர்ந்து ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இலங்கை ராணுவத்தினரால் தமிழர்கள் பெரும் கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தி்ல் சேர்க்க ஆரம்பித்துள்ளனர் என்று கூறியுள்ளது.

இந் நிலையில் இந்த அமைப்பில் உள்ள 47 நாடுகளில் 17 நாடுகள் உடனே இதன் கூட்டத்தைக் கூட்டி தமிழர்கள் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளன. இந்தக் கோரிக்கையை விடுத்த நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் ஆகியவை அடங்கும்.

மேலும் இந்த அமைப்பு இரண்டு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கவுள்ளது. முதலாவது தீர்மானம் ஸ்விட்சர்லாந்து முன் மொழிந்ததாகும்.

இதன்படி இடம் பெயர்ந்து அரசு முகாம்களில் வசித்து வரும் தமிழர்களுக்கு உதவ சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்பதாகும். இதை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆதரித்துள்ளன.

இந்த அனுமதியை இலங்கை அரசு தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது தீர்மானம் இலங்கை அரசே முன் மொழிந்ததாகும். இதன்படி தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும் இதற்கு ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த நிவாரணப் பணிகளுக்காக உலக நாடுகள் இலங்கைக்கு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான சீனா இந்தியாவும் ஆதரிக்கிறது.

இஸ்ரேலின் யோசனை தோற்கடிப்பு; சர்வதேசத்தில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி

nimal-siriiii.jpgஉலக சுகாதார ஸ்தாபன அமர்வில் இலங்கைக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டதாக சுகாதார போஷாக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் இலங்கை சார்பாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துகொண்டார்.

நேற்று முன்தினம் (24) மாலை நாடு திரும்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த அமர்வில் உலக சுகாதார ஸ்தாபன தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக் கருதி இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென இந்த அமர்வின் போது இஸ்ரேல் யோசனையொன்றை முன்வைத்தது. ஆனால், சக நாடுகளின் உதவியுடன் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவி எனக்குக் கிடைத்தது இலங்கைக்கு கிடைத்த கெளரவமாகும்.

இதற்கு முன் இலங்கையர் எவரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது கிடையாது. உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவிக்கு எனது பெயர் சிபார்சு செய்யப்பட்டுள்ளதை அறிந்தது முதல் ஜெனீவா உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு முன்பாகவும் ஐ. நா. முன்பாகவும் பெருமளவு புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல நாடுகள் இலங்கைக்கு இந்தப் பதவி கிடைப்பதை தடுக்க முயன்றன. இறுதியில் அந்த நாடுகளுக்கும் எமக்கு ஆதரவு வழங்க நேரிட்டது என்றும் அவர் சொன்னார்.

புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தது போல புலிகளின் கருத்துக்களை உலக சுகாதார ஸ்தாபனத்தினுள்ளும் தோற்கடிக்க முடிந்தது. காஸாவிலுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் காஸாவுக்கு உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் அனுப்பப்பட்டது போல இலங்கைக்கும் அனுப்ப இஸ்ரேல் முயன்றது. இலங்கை மனித உரிமைகளை மீறும் நாடு என்ற கருத்தை பரப்ப அந்த நாடு முயன்றது என்றும் அவர் கூறினார்.

ஆனால் சகல நட்பு நாடுகளுக்கும் நான் இலங்கை தொடர்பான உண்மை நிலைவரத்தை விளக்கினேன். ஐ. நா. செயலாளர் நாயகம் இலங்கை வருவதற்கு முன்னதாக நான் அவருடன் அரை மணி நேரம் பேச்சு நடத்தினேன். அவருக்கும் இலங்கையின் உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறினேன். இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது சர்வதேச ரீதியில் எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இலங்கையின் உண்மை நிலைவரம் குறித்து தொடர்ந்து வெளிநாடுகளையும் வெளிநாட்டு தூதுவர்களையும் அறிவூட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய நினைவு சின்னம் பரிசு

russuia-2.jpgஇலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளது.

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்குச் சென்ற ஹெல உறுமய பிக்குமார் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் அந்த நினைவுச் சின்னத்தை கையளித்தனர். இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு உதவியமைக்காக ரஷ்யாவுக்கு பிக்குமார் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான பிக்குமார் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்ட 580 குடும்பங்களுக்கு அடுத்த வாரம் வீடு

images-house.jpgதிரு கோணமலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 580 குடும்பங்களுக்கு அடுத்த மாதம் நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவி ருத்தி அதிகார சபை, ஜாதிக சவிய திட்டத்தின் கீழ் 86.27 மில்லியன் ரூபா செலவில் இந்த வீடுகளை நிர்மாணித் திருக்கிறது.

வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃபின் ஆலோசனையின் பேரில் நிர்மாணி க்கப்பட்டிருக்கும் இந்த வீடுகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம். பி. யின் வழிகாட்டலின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப் படவிருக்கிறது.

இவ் வீடமைப்புத் திட்டங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் தெமட்டவெவ, கோணமரியாவ, கீரலகம ஆகிய இடங்களிலும், திருமலை மாவட்டத்தில் கல்யாணபுர, மொரவெவ, கல்கடுவெவ, இந்திகட்டுவ ஆகிய இடங்களிலும், மொனறாகலை மாவட்டத்தில் கேவனப்பிட்டிய, காண்டுகல ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடமைப்பு திட்டங்களில் வீதி, குடிநீர் வசதி உட்பட பொது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

துவக்குச் சூட்டில் வர்த்தகர் படுகாயம்

Gun 01திருக்கோவில் கோளாவில் 3 இல் நேற்றுத் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாகம வீதியிலுள்ள இவரது வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற ஆயுதபாணிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

மார்பில் படுகாயமடைந்த நிலையில் இவர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான நா.லிங்கராசா (55 வயது) என்பவரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒத்தி வைக்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம்- நாளை மறுதினம்

pm-manmogan.jpgகடந்த வெள்ளிக்கிழமை மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. திமுகவுடன் ஏற்பட்ட பதவி ஒதுக்கீடு குழப்பம் தொடர்பாக 19 கேபினட் அமைச்சர்கள் மட்டும் பிரதமருடன் பதவியேற்றனர்.

இந் நிலையில், திமுகவை சமரசப்படுத்த முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக அமைச்சரவையில் சேர திமுக சம்மதம் தெரிவித்து விட்டது. அக்கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் தரப்படவுள்ளன.

இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இது நாளை மறுதினம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் பாடநூல்கள் -சுசில் தலைமையிலான குழு 5இல் வவுனியா பயணம்

susil_prem_minister.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள 60,000 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், பாடநூல்கள் மற்றும் பாடசாலை உடைகளுடன் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையிலான அதிகாரிகள் குழு எதிர்வரும் ஜூன் 5ம் திகதி வவுனியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளது.

இம் மாணவர்களுக்கான க. பொ. த. சாதாரணதர பரீட்சை, ஐந்தாமாண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது-

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தயாராகி வரும் நிலையில் உடனடித் தேவைகளைக் கருத்திற்கொண்டு சீருடை நிறத்திலான டீ சேர்ட், காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கான உடைகளும் இவ்விஜயத்தின் போது பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று வன்னி சென்று நலன்புரி நிலையங்களில் உள்ள மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நிலை குறித்து ஆராய்ந்துள்ளதுடன் அவர்களுக்கான உடனடித் தேவைகளைக் கண்டறிந்துள்ளது.

நலன்புரி நிலையங்களில் வாழும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உடனடி உபகரணத் தேவைகள் குறித்தும் அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் முதற் கட்டமாக மாணவர்களுக்கு சீருடையை ஒத்ததான 25,000 உடைகள், 500 மேசைகள், 500 வாங்குகள், மேலதிக வாசிப்புக்கான ஐந்து இலட்சம் பாடநூல்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் எதிர்வரும் ஜூன் 5ம் திகதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

ஐந்து நிவாரணக் கிராமங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம் – அடிப்படை வசதிகளை கவனிக்கவும் அதிகாரிகள் நியமிப்பு

Wanni_War_Welfare_Campவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடையின்றி துரிதமாக சகல வசதிகளையும் வழங்குவதற்காக 5 நிவாரணக் கிராமங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடைய தேவைகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தமைலமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி உணவு, நீர் வசதிகளுக்கு ஒரு அதிகாரியும், பராமரிப்பு, நலன்புரி நடவடிக்கைகளுக்கு ஒரு அதிகாரியும், ஆற்றல் அபிவிருத்திக்கென ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

இது தவிர ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராம உத்தியோகத்தர், கள அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரும் நியமிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவை அமைச்சு தெரிவித்தது.

இந்த உயர்மட்ட மாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, நீர், மின்சாரம், பராமரிப்பு பணிகள், தங்குமிட வசதி, கல்வி நடவடிக்கை என்பன குறித்து முக்கியமாக ஆராயப்பட்டன. மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இதன் போது வவுனியாவில் இயங்கும் சகல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினதும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை துரிதமாக வழங்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கேட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை 5 நிவாரணக் கிராமங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறும் இடம்பெயர்ந்த மக்களுக்கு துரிதமாக உரிய வசதிகளை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொலைபேசி வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இந்தக் கூட்டத்தில் திட்ட மற்றும் செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளர் லலந்த அபேகுணவர்தன, பிரிகேடியர் சி. சி. பெரேரா, அரச, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், நீர்ப்பாசன, மின்சார சபை பிரதிநிதிகள் உட்பட பல அரச நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

டெங்கு நோயை பரப்பக்கூடிய சூழலை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக ஜூன் முதல் அபராதம்

mosquito_preventionss.jpgடெங்கு நோயை பரப்பக் கூடிய சுற்றுச் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அபராதம் அறவிடவும், தண்டனை விதிக்கவுமுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை தண்டமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயினால் கூடுதலானோர் பாதிக்கப்பட்டனர். கடந்த வருடம் 27 பேர் டெங்கினால் இறந்ததோடு கடந்த 5 மாதத்தில் மாத்திரம் 70 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து டெங்கு நோய் தொடர்பாக சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் மக்களை தெளிவுபடுத்தி வருவதோடு பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. டெங்கு நுளம்புகளை பெருக்கக் கூடிய இடங்களை வைத்திருக்கும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றுக்கு எதிராகவும் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்.