வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள 60,000 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், பாடநூல்கள் மற்றும் பாடசாலை உடைகளுடன் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையிலான அதிகாரிகள் குழு எதிர்வரும் ஜூன் 5ம் திகதி வவுனியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளது.
இம் மாணவர்களுக்கான க. பொ. த. சாதாரணதர பரீட்சை, ஐந்தாமாண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது-
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தயாராகி வரும் நிலையில் உடனடித் தேவைகளைக் கருத்திற்கொண்டு சீருடை நிறத்திலான டீ சேர்ட், காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கான உடைகளும் இவ்விஜயத்தின் போது பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று வன்னி சென்று நலன்புரி நிலையங்களில் உள்ள மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நிலை குறித்து ஆராய்ந்துள்ளதுடன் அவர்களுக்கான உடனடித் தேவைகளைக் கண்டறிந்துள்ளது.
நலன்புரி நிலையங்களில் வாழும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உடனடி உபகரணத் தேவைகள் குறித்தும் அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் முதற் கட்டமாக மாணவர்களுக்கு சீருடையை ஒத்ததான 25,000 உடைகள், 500 மேசைகள், 500 வாங்குகள், மேலதிக வாசிப்புக்கான ஐந்து இலட்சம் பாடநூல்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் எதிர்வரும் ஜூன் 5ம் திகதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.