2009

2009

பொசன் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

poson_s.jpgபொசன் நிகழ்வுகள் அநுராதபுரம், மிஹிந்தலையில் இன்று ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும்  இணங்கியுள்ளன.

இதேவேளை,  பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சாரசபை மேற்கொண்டுள்ளது. நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மலையகத்தில் இடி, மின்னலுடன் மழை தெலைபேசி, மின்சார உபகரணங்கள் சேதம்

rain.jpgமலை யகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் மின்சார உபரகணங்கள், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடை மழைபெய்து வருவதால் வரட்சியின் போது வற்றியிருந்த மவுசாக்கலை, காசல் ரீ ,கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகின்றது. அத்தோடு புதுவெள்ளம் பாய்ந்து வருவதால் நீர்த்தேக்கங்களின் கரையோரத்தில் மீன் பிடிப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது.

நீதியின் முன் அனைத்து இனமும் சமம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர்

06srilanks_chief_judge.jpgநீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை.” இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது.

சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நேற்றுடன் விடைபெறுவதை ஒட்டி அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் போதிய ஆய்வோ, யோசனை செய்தோ இயற்றப்படவில்லை. இந்திய அரசமைப்பைப் பார்த்து அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்கு இது சரியாக இருக்கலாம். இலங்கைக்கு அது ஏற்புடையதல்ல.

பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கினால் பொலிஸ் மா அதிபர் அதிகாரம் அற்றவராகவே இருப்பார். மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு அவர் சும்மா இருக்க வேண்டும்.

இதேபோல் காணி விவகாரமும் உயர்வானது. மொத்தத்தில் 13 ஆவது திருத்தம் பல ஓட்டைகளைக் கொண்டது. இலங்கையில் மாகாணங்களுக்கு சரியான எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. எல்லைகள் வரையறுக்காமல் எதனையும் செய்யமுடியாது.

சரியான முறையில் எல்லைகள் வகுக்க முறையேதும் இல்லை.

நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை. இலங்கையன் என்றே செயற்பட்டேன். சகல மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்படாவிட்டால் மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை நடமாட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டி வரும்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் ஆயுத கிடங்கு தீப்பற்றியுள்ளது

யாழ்ப் பாணம் மயிலிட்டி பகுதியில் படையினரின் ஆயுதக் கிடங்கு தீப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்தாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜனநாயக அரசியலில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பு தேவை : த.ம.வி.பு. பொதுச் செயலாளர்

“ஆயுதங்களைக் களைந்து விட்டு முழுமையான ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான அறவன் என அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் மட்டக்களப்பு புதுநகரில் நேற்று முன் தினமிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“வன்முறைக் கலாசாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் முழுநம்பிக்கை கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் நாட்டின் எப்பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதே சகல மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

கட்சியின் உறுப்பினர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இருக்கும் நிலையில், அவர்கள் மிகவும் ஈனத்தனமாக படுகொலை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் மக்களுக்கான அரசியல் சார்ந்த சேவைகளை ஆற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. அதுமட்டுமல்ல, பொது மக்கள் மத்தியிலும் ஒருவகை அச்சமும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அறவான் படுகொலையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இவ்வாறான படுகொலைகளை, கட்சி பேதங்களை மறந்து உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.

பயங்கரவாதம் இலங்கையின் ஜனாதிபதியால் அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் தீயசக்திகளின் பின்புலத்தைக் கண்டுபிடிக்க, ஜனநாயகத்தை நாட்டில் ஸ்தாபிக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஒத்துழைப்பினை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக தமது பணியை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்குக் காவல் துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும். நாம் எப்போதும் காவல் துறையினரின் பாதுகாப்பையே முழுமையாக நம்புகின்றோம்” என்றார். 

பிரதம நீதியரசர் பங்குகொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு

06srilanks_chief_judge.jpgநீதி, சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வீ. புத் திரசிகாமணியின், அழைப்பின் பேரில் இன்று தம்புள்ள நீதவான் நீதிமன்றம் காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவினால் திறந்து வைக்கப்படவிருக்கி ன்றது.

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பங்கு கொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டநாள் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் : பான் கீ மூன் எச்சரிக்கை

06bankimoon.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் பெற்ற வெற்றியை கொண்டாடும் நீண்ட நாள் நிகழ்வுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 15 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதைவிட நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதே காலத்தின் தேவையாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாரியார் நேற்று யாழ்ப்பாணம் விஜயம்:

06siranthi.jpgசங்க மித்த பிக்குனி வெள்ளரசு மரக்கிளையுடன் வந்திறங்கிய யாழ்ப்பாணம், வடமராட்சியிலுள்ள தம்பகொலபட்டுன என்றழைக்கப்படும் பகுதிக்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ் நேற்று விஜயம் செய்தார்.

அங்குள்ள தம்பகொலபட்டுன விகாரையில் சங்கமித்த பிக்குனியின் உருவச் சிலையொன்றையும் ஜனாதிபதியின் பாரியார் பிரதிஷ்டை செய்தார். இப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் பாரியார் மற்றும் அவர் தலைமையிலான குழுவினரை வட்டுக்கோட்டைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதகல், பொன்னாலை, காரைநகர் பிரதேசவாசிகளின் பிள்ளைகள் கோலாகலமாக வரவேற்றனர்.

இப்பிரதேச வாசிகளுக்கு ஜனாதிபதியின் பாரியார் தலைமையில் இயங்கும் சிறிலிய சவிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னூறு (300) உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

“இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் வசதிகளையும், உட்கட்டமைப்பு துறையையும் மேம்படுத்தத் துரித நடவ டிக்கை எடுக்கப்படும்” என்று இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் ஸ்தாபகர் நாமல் ராஜபக்ஷ இச்சமயம் உறுதியளித்தார்.

இவ்வைபவங்களில் ஜனாதிபதியின் பாரியாருடன், பிரதமரின் பாரியார் குசும் விக்கிரமநாயக்கா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, திருமதி கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். நயினாதீவு விகாராதிபதி நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ பெளத்த வழிபாடுகளை முன்னின்று நடத்தினார்.

இலங்கை துடுப்பாட்ட அணியை பகிஸ்கரிக்க கோரி பிரித்தானியாவில் தமிழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

20-20landon.jpgபிரித் தானியாவில், மனித உரிமைகளைக் காக்கத் தவறிய நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கிவைப்பது போன்று, இலங்கை அணியையும் விலக்கி வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள் போட்டி ஆரம்ப தினமான நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசினால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றிய விபரங்கள் தற்போது பிரித்தானிய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் 20க்கு 20 துடுப்பாட்ட போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி பிரித்தானியாவிற்கு வந்துள்ளது. மனித உரிமைகளைக் காக்கத் தவறும் நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கி வைப்பது வழக்கம். அது போன்று இலங்கை அணியையும் விலக்கி வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள் நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச படையினர் வென்றது புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல என்பதை உணர்த்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்

அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் தெரிவித்தார்.

கட்டபுலாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்கி ஒடுக்கி விட்டதாக அமைச்சர்கள் மார்தட்டி மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்களையும் மிஞ்சும் வகையில் அதிகாரிகள் எதிர்க்கட்சியினர் மீது குற்றஞ் சுமத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.  ஏதோ ஒரு வழியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால் அந்த வெற்றியை காரணங்காட்டி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பது விவேகமற்ற செயல். அத்துடன் தூர நோக்கின்றி கேளிக்கைகளை முன்னெடுப்பது பாமர மக்கள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பது போன்றது. இது ஆரோக்கியமானதாக அமையாது. மாறாகப் பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.

அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இந்த வேளையில் இந்நாட்டில் இன மோதல்கள், பாரிய யுத்தம், ஆயுதக் கலாசாரம் என்பன ஏற்பட ஆணிவேராக அமைந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப உடனடி அரசியல் தீர்வு காண வேண்டியது தலையாய கடமை.

அந்தக் கடமையிலிருந்து தவறி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் வகையில் செயற்படின் முன்னொருபோதும் ஏற்படாத அளவில் பாரிய இனப்பிரச்சினை வெடித்து இந்நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியையும் கூடப் பறிகொடுக்க நேரிடும்.

இன்று சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அன்றாட அலுவல்களுக்காக வெளியில் நடமாடும் போதும் மானசீகமாக எதிர்நோக்குகின்ற தொல்லைகளும் துயர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்நாட்டில் விதைத்த இனத்துவேச விதைகளினையே அண்மைக் காலத்தில் அறுவடை செய்யப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் நெஞ்சில் நிலைநிறுத்தி மீட்டிப் பார்த்து தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் கௌரவமான அரசியல் தீர்வைக் காணவேண்டும்.

அத்துடன், பேரினவாதிகள் சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு இனவெறியைத் தூண்டும் வ?யில் தமிழ் மக்களை அவமதித்து அவதூறு செய்கின்ற அருவருக்கத்தக்க அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.