2009

2009

இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

 sarathfonseka.jpgயுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று முதல்முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார் யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மென்டகு சமரசிங்க இராணுவத்தளபதியை வரவேற்றார். பின்னர் அங்கு இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை பொன்சேகா ஏற்றுக்கொண்டார்.

 குடாநாட்டில் பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராய்ந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் மனிதாபிமான செயற்பாடுகள் கண்ணிவெடி அகற்றல் பயிற்சிகள் ஆகியவற்றில் படையினரின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கமளித்தார எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகம் திருகோணமலையில்

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின அலுவலகம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்  தென்னக்கோன் தொரிவித்துள்ளார்.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வலுவலகம் திறக்கப்படவுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தின் குடிவரவு குடியகல்வு பணிகளை இதுவரை பொலிஸ் தினைக்களமே மேற்கொண்டு வந்;தது. எனினும் அப்பணிகளை தமது திணைக்களம் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் மேலும்  தொரிவித்துள்ளார்

இலங்கை அரசு, வணங்கா மண் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றியமை சர்வதேச விதிகளுக்கு மாறானது: கப்டன் முஸ்தபா

_vanankaman-captionali.jpgஇலங்கை சென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கோல்கட்டா செல்கிறோம் என்றார்.

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, “வணங்கா மண்’ கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

தற்போது கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கொல்கத்தா செல்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து, “வணங்கா மண்’ கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, கன்டெய்னர்களில் ஏற்றப்படுகின்றன.

இவை, வழக்கமாக செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு நாட்களில், இந்த பணிகளை முடித்து, நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது

மீள்குடியேற்ற இடங்களுக்கு அதிகாரிகள் விஜயம்

வடக்கே வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மீள்குடியேற்ற பகுதிகளுக்கு உயர்அதிகாரிகள் புதன்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் குழு கனகராயன்குளத்திற்கும், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் குழு பாலமோட்டை நவ்வி போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தனர்.

அரச அதிகாரிகள் சென்று தமது கடமைகளை செய்யக்கூடிய சாதகமான நிலை உள்ளதா என்பதை அறியவே இவர்களுடைய விஜயம் அமைந்திருந்தது. புதைந்துள்ள வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வெடிபொருட்கள் இல்லை என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டவேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்ற இந்திய கண்ணி வெடி அகற்றும் நிபுணர் குழுவினர் இங்கு வரவுள்ளனர்.இதற்கிடையே விடுவிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தில் பல கிராமங்களில் அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தேசிய சாகித்திய விழா பொலன்நறுவையில்

mahinda_yapa_abeywardene.jpgஇவ் வருடத்துக்கான தேசிய சாகித்திய விழாவை பொலன்நறுவை, ரோயல் கல்லூரியில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான பிரேரணையை கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்திருந்தார்.

இந்த விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த விழாவுடன் தொடர்புள்ள சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களும் இதற்குப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இருவருட பயிற்சிக்காக சென்றுள்ள ஆசிரியர்கள் தமது பயிற்சியைத் தொடர அனுமதிக்கப்படுவர்

இருவருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றுள்ள மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தமது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவரெனவும் இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெற்று உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரிக்குச் சென்ற மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண தோட்டப் பாடசாலைகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு சப்ரகமுவ மாகாணசபை இருவருட உள்ளகப் பயிற்சிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. வழங்கப்பட்ட நியமனத்தில் மோசடிகள் காணப்படுகின்றன. இதனால் இவ்வாசிரியர்களுக்கு மீள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லையெனவும் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பயற்சிகளுக்கு செல்லமுடியும் எனவும் மாகாணசபை அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிலருக்கு இருவருட உள்ளகப் பயிற்சிகளை தொடர சில கல்லூரி நிர்வாகங்கள் அனுமதியளித்துள்ளன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தமது பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களும் உடனடியாக தாம் கடமை செய்த பாடசாலைக்குத் திரும்பவேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலருக்கு வலயக்கல்விப் பணிமனையூடாக இது குறித்து அறிவித்து வருகின்றது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் முறையிட்டனர். உடனடியாக இது குறித்து மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இதற்கான உறுதிமொழியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

2008-2009: வெட்டுப்புள்ளிகள் வெளியாகின: 20,270 மாணவர் பல்கலைக்கழக அனுமதி

visvawarnapala.jpg2008 – 2009ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென 20,270 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வெட்டுப் புள்ளிக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 620 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2008 – 2009 ஆம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்தபட்ச தகமைகளை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 236 (1,30,236) பேர் பெற்றிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 010 (46,010) பேர் விண்ணப்பித் திருந்தனர். இவற்றில் 20 ஆயிரத்து 270 பேர் அனுமதி க்கப்படவுள்ளனர்.

19,340 பேர் வழமையான அனுமதி நடைமுறைக்கமையவும், மிகுதியுள்ள 930 மாணவர்கள் விசேட நடைமுறைக்கமையவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவம், கலை, பொறியி யல் உட்பட 86 வகையான பாடநெறிகளுக்கே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3724 மாணவர்கள் கலைத் துறைக்கும், 3139 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கும், 1718 மாணவர்கள் பெளதீக விஞ்ஞான துறைக்கும், 1196 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், 1140 மாணவர்கள் மருத்துவ துறைக்கும் மற்றும் 1110 மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானத் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 86 பாடநெறிகளுக்கு 19,340 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2008 – 2009 கல்வி ஆண்டிற்கென ஐந்து புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக விஞ்ஞானம் மற்றும் மீன்பிடி (Animal Science & Fisheries), ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் நீரியல் வள தொழில் நுட்பம் (Aquatic Resources Technology and Value Addition), தெங்கு மற்றும் அதனுடைய லேடெக் தொழில் நுட்பம் (Palm and Latex Technology and Value Addition), உபசரிப்பு, சுற்றுலா மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவம் (Hospitality, Tourism and Events Management) வயம்ப பல்கலைக்கழகத்தில் உணவு தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவம் (Food Production and Technology Management) ஆகிய பாடநெறிகளே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாடநெறிகள் ஒவ்வொன்றுக்கும் ஆரம்ப கட்டமாக 50 மாணவர்கள் வீதம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனரென்றும் அமைச்சர் விஸ்வவர்ணபால மேலும் தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் வியூகம் எதிர்க்கட்சி கூட்டமைப்பு ஆராய்வு

ஐக்கிய தேசியக் கட்சி மேலக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் றெரஸிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மக்கள சமரவீர ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.  இதேநேரம், இந்த கூட்டமைப்புக்கான இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கென ஐ.தே.க. அரசியல் குழுவினரால் நியமிக்கப்பட்ட அக் கட்சியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இக்குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் குழுவினால் ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்திடம் அனுமதி பெறப்படுமென அக் கட்சியின் தவிசாளரான காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.

இதேநேரம், இந்த அறிக்கையூடாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையே கூட்டமைப்பின் கொள்கை அறிக்கையாக இருக்குமென மனோகணேசன் எம்.பி.கூறினார்.

வன்னி முகாம்களிலுள்ள மாணவர்க்கு விசேட வகுப்பு

schoolgirls-sri-lanka.jpgவன்னி இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மாணவர்களின் நலன்கருதி விசேட வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மற்றும் உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விசேட உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகவும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்ற மாணவர்களை அடையாளப்படுத்தி ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்தார். மேலும், அம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

இந்த உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரபல தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் உதவியைப் பெற்று மேலதிகமான வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் லால் நோனீஸ் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் மேற்படி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எகிப்தில் இந்தியப் பிரதமரை ஜனாதிபதி சந்திப்பார்

he_president.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம் மாத நடுப்பகுதியில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவிருப்பதாக அறியவருகிறது.  எகிப்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. எகிப்தின் சார்ம் எல்ஷெய்க் நகரத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் அணிசேரா அமைய நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவரும் சந்தர்ப்பத்திலேயே இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாக இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த அவரை சந்திக்கும் முதலாவது சந்திப்பாக இது அமையும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் அணிசேரா இயக்க நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாடு நிகழ்வுகள் முதல் 4 நாட்களுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்கள் நடைபெறவுள்ளன இறுதி இரு தினங்களான 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடைபெறவிருக்கிறது.

இதில் கலந்துகொள்வதற்கென ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அடங்கலான உயர்மட்ட தூதுக் குழு எகிப்து செல்லவிருக்கிறது.

இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள வரும் இந்தியப்பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புக்கு இலங்கை சார்பில் அனுமதிகோரப்பட்டிருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் யுத்தத்தின் பின்னரான, அரசாங்கத்தின் தற்போதைய மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த செயற்பாடுகள் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடனான இந்த நேரடி சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளக்கமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இநேநேரம், அணிசேரா இயக்க நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புகளுக்கும் இலங்கை அனுமதி கோரியிருப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.