2009

2009

இலங்கை-பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு – வெளிவிவகார அமைச்சு தகவல்

bangladeshi_fm.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி டிபு மொனி இன்று பிற்பகல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது இணையத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குமிடையிலான இச்சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் சார்க்நாடுகளின் சிறுவர் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் எனக் கூறினார்.

இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியா செயலகத்தில் நிலுவையாக உள்ள பணத்தைத் தாமதமின்றி வழங்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா செயலக வளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவு பெறப்பட்டு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டு வந்தது.  சுமார் 4 மாதங்கள் இவ்வாறு சமைத்த உணவு வழங்கப்பட்டதாகவும், நாளொன்றுக்கு, ஒருவருக்கு 130 ரூபா பெறுமதியான 3 வேளை உணவு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டு, அதற்காக ஒரு தொகைப் பணம் தங்களுக்கு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் தற்போது நிலுவையாக உள்ள பணத்தில் முழுச்சாப்பாடு 100 ரூபாவாகவும் அரைச்சாப்பாடு 80 ரூபாவாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது உடன்பாட்டுக்கு விரோதமானது என்றும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  தங்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதனை வழங்குவதற்கு தற்போது அதிகாரிகள் சாக்கு போக்குகள் கூறுவதாகவும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரச சுற்று நிருபத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணத்தின்படியே கொடுப்பனவுகளை வழங்க முடியும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. சமைத்த உணவு வழங்கிய வகையில் சுமார் 250 மில்லியன் ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதில் ஒரு பகுதி நிதி தற்போது கிடைத்திருப்பதாகவும், இதனை வழங்குகையிலேயே ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவுக்கான கட்டணம் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கொலை மற்றும் தலையை வெட்டிக் கொல்ல முற்பட்ட 10 பேருக்கு சிறைத் தண்டனை!!!

Murder_Weaponநோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.

ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Murder_Weaponசம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Yogarajah_Balasinghamஇம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.

தனது குழந்தைகளைக் கொலை செய்த பின் தற்கொலை செய்ய முயன்ற தாய்

Rita Ariyaratnam with her childrenஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இத்துயர சம்பவத்தில் ஏழு மாத இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர். மகப்பேற்றுக்குப் பின்னான மனஉளைச்சலுக்கான மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட நிலையில் தாயும் குழந்தைகளுக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஆபத்தான நிலையைக் கடந்து உடல்நிலை தேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிழக்கு பேர்த் பகுதியில் உள்ள குளோவர்டேல் பகுதியில் வாழும் செல்வின் அரியரத்தினம் எனபவரின் குடும்பத்திலேயே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. யூலை 6ம் திங்கட்கிழமை மாலை 3:30 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய அரியரத்தினம் அவரது குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் மனைவி றீட்டாவும் வரவேற்பறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவர்களுக்கு அருகில் றிட்டாவுக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மனஉளைச்சலுக்கான மாத்திரைப் போத்தலும் காணப்பட்டது.

உடனடியாக ‘000’ அவசரசேவைக்கு அவசர அழைப்புவிடுத்தார். மருத்துவ வண்டி வரும்வரை றீட்டாவின் இதயத்தை தொடர்ந்தும் இயக்குவதற்கான செயன்முறைகளை தொலைபேசியில் வழங்க அரியரத்தினம் அதனை மேற்கொண்டார். மருத்துவ வண்டி வந்தடைந்ததும் றீட்டா றோயல் பேர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் இருவரும் பிறின்சஸ் மார்கிரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனையை அடைகையில் உயிரிழந்தனர்.

குழந்தைகளின் தாயார் றீட்டா பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட அழுத்தக் குறைவு காரணமாக பல நாட்களாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் என்று நெருங்கிய உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். குழந்தைகளின் பெற்றாரான இளம் தம்பதியர் எதுவித பிரச்சினைகளுமின்றி திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்று இக்குடும்பத்தின் நெருங்கிய நண்பி ஒருவர் தெரிவித்தார்.

Twins_Ariyaratnamஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகளுடன் திருப்திகரமாக வாழ்ந்து வரும் இக் குடும்பத்தின் இளம் தாயார் நீண்ட காலமாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் என்றும் இது தற்செயலாக ஏற்பட்ட கர்ப்ப தரிப்பு அல்ல என்றும் அந்த குடும்ப நண்பி மேலும் கூறினார். தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட திருமதி றீட்டா அரியரத்தினம் ஒரு அன்பான தாய் என்றும் அவருக்கு அழுத்தக் குறைவு நோய் ஏற்பட்டதும் இதற்கு சிகிச்சை பெற்றதும் அவ்வேளையில் தமக்கு தெரியாது என்றும் அந்த நண்பி கூறினார்.

அவருக்கு டாக்டரினால் வழங்கப்பட்ட மருந்துகள் வீட்டில் காணப்பட்டன என்று சிரேஷ்ட பொலிஸ் சார்ஜன்ட் மார்க் ஃபை தெரிவித்துள்ளார். எந்த விதமான மருந்துகள் என்று தெரிவிக்காத அவர் மருந்தை அளவுக்கதிகமாக அவர் உட்கொண்டிருப்பாரென தாம் கருதுவதாகவும் கூறினார்.
குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை தம்மால் கூற முடியாதிருக்கிறது என்று தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தாய் தனது குழந்தைகளை கொலை செய்து தன்னையும் அழித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் இது முதற்சம்பவம் அல்ல. கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. கடந்த ஆண்டு லண்டனிலும் இவ்வாறான ஒரு துயரம் நிகழ்ந்தது. (அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன், கனவிலும் தோண்றாத கொடூரம் – தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!) வேறு வேறு நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்களிலுமே இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். தாய்மார்களின் தற்கொலை முயற்சி தோல்வியடைந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மன உளைச்சல் போன்றவற்றின் தாக்கம் முழுமையாக உணரப்படவில்லை. குறிப்பாக பெண்கள் மத்தியில் அவர்களது பிரசவத்திற்கு முன் பின்னாக இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஒரு-பால் உறவு குற்றமாகாது என்ற தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

gayrightcelectration.gifஇந்தியா வில் பரஸ்பர சம்மதத்துடன் ஒரு பால் உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு்ள்ளது.

இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஒரு பால் உறவினரின் உரிமைகளுக்குப் போராடும் நாஸ் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுரேஷ் குமார் கெளஷல் என்ற ஜோதிடர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சார்க் சிறுவர் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட 4வது மாநாடு இன்று ஆரம்பம் – தலைமைப்பொறுப்பு அமைச்சர் சுமேதாவுக்கு

sumeda.jpgதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான நான்காவது சிரேஷ்ட உயர் அதிகாரிகள் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை ஆரம்பமான இந்த மாநாட்டின் போது இலங்கைக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷில் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாக கலந்து கொண்ட நேற்றைய மாநாட்டிற்கு இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம். சுமனதாச தலைமை வகித்தார். சார்க் அமைப் பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சார்க் நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான நான்காவது மாநாடு இன்று ஆரம்பமாகிறது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் அமைச்சர்கள் மட்ட மாநாட்டின் தலைமை பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜீ. ஜயசேன தலைமை வகிக்கவுள்ளார்.

இன்றைய தினம் இந்த மாநாட்டில் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் சிறுவர் விவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 13 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்ற இந்த மாநாட்டின் போது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

மட்டு. நகரில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம் : பயணிகள் மகிழ்ச்சி

sri_lankan_policeman.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பிரதான நெடுஞ்சாலைகளிலுள்ள அநேகமான வீதித் தடைகளும் பொலிஸ் சோதனைச் சாவடிகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் பயணங்கள் கடந்த காலங்களை விட இலகுவாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு – கொழும்பு பயணத்தின் போது மட்டக்களப்பிலிருந்து மன்னம்பிட்டி வரை 7 சோதனைச் சாவடிகளும் 10இற்கும் மேற்பட்ட வீதித் தடைகளும் அமைந்திருந்தன.

சோதனைகளின் போது பயணிகள் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாமதங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இவை அகற்றப்பட்டுள்ளதாலும், சோதனைச் சாவடிகளில் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பயணங்கள் இலகுவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

“ஏற்கனவே இந்த வீதித் தடைகளினாலும், சோதனைச் சவடிகள் காரணமாகவும் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான பயணத்திற்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. இப்போது 7 முதல் 8 மணித்தியாலங்கள் போதுமானது” என தெரிவிக்கின்றனர்.  இருப்பினும் ஓட்டமாவடி-மன்னம்பிட்டி ,வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிகளில் வாகன இலக்கங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றது

“மட்டக்களப்பிலிருந்து வெளியிடங்களுக்கான பயணங்கள் தற்போது இலகுவாக இருந்தாலும், வாகனத்திற்கு இன்னமும் பொலிஸ் பாஸ் பெற வேண்டும் என்ற நடை முறை அமுலிலிருப்பதால் அதனையும் நீக்க வேண்டும்”  அதே வேளை மட்டக்களப்புக்கு வடக்கே பயணங்கள் இலகுவாக இருந்தாலும் தெற்கே வீதி தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் இன்னமும் காணக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையிலான 43 கிலோ மீற்றர் தூரத்திற்குள் மட்டும் ஓந்தாச்சி மடம், கல்லாறு ,நீலாவணை ஆகிய இடங்களிலுள்ள சோதனைச் சாவடிகளில் தொடர்ந்தும் சோதனைகள் இடம் பெறுகின்றன.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு!

aedes_aegypti.jpgநாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளதென டெங்கு நோய் தடுப்புப்பிரிவு தெரிவிக்கின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 08-07-2009வரை இந்த எண்ணிக்கை நிலவியதாகவும் இதேகால எல்லையில் டெங்கு நோயால் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கடந்த வாரம் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 569 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொழும்பு,  கண்டி,  கேகாலை,  ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். ஏனைய மாவட்டங்களில் நோய் பரவும் நிலை சற்று குறைந்து வருகின்றது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 237 பேர் டெங்கு நோயினால் பீடிக்க்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் நுளம்புகளை ஒழிப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது. நுளம்புகளை அழிப்பதற்கான பற்றீரியாக்கள் கூடுதலான நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலேயே பயன்படுத்தப்படுவதால் ஏனைய பகுதிகளில் நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் பணிகளை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென  டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது.

வெளிநாட்டு பௌத்த கல்வி நிறுவனங்களுக்கு சலுகைகள்

susil1111.jpgஇலங்கை பௌத்த மத குருக்களால் இந்தியாவிலும் நேபாளத்திலும் நடத்தப்பட்டு வரும் பௌத்த கல்வி நிறுவனங்களுக்கு இலங்கையின் பிரிவெனா கல்விச் சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும் சகல சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்திருந்தார். இதன்படி 1979 /64ஆம் இலக்க பிரிவெனா கல்விச் சட்டமூலத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவி,  பாடசாலைப் புத்தகங்கள்,  சீருடைகள் மற்றும் போதனாசிரியர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பை ஒழுங்கமைப்பது எப்படி?: சேனன்

• 20ம் நூற்றாண்டில் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுத்தத்துக்குப் பலியாகியுள்ளனர். இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து 4 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்கள் அநாவசியமாக அழிக்கப்பட்டுள்ளன. கொங்கோவில் 2 மில்லியன் ஈராக்கில் ஒரு மில்லியன் என்று விரியும் உயிரிழப்புகளில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் உயிர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

• இந்த அக்கிரமங்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் உலகின் பெரும்பான்மை மக்கள் இந்தக் கொடூரத்துக்கு எதிராக ஒருங்கிணையவில்லை. ஒரு சிறுபான்மையினரே உலகெங்கும் இதற்கெதிரான எதிர்ப்பைச் சரியான வழியில் முன்னெடுத்து வருகிறார்கள். பெரும்பான்மை மக்கள் ‘சுயநலமானவர்கள்’ என்பதல்ல அதன் அர்த்தம். ஆளையாள் அடித்துச் சாக்காட்டிகொண்டு பெரும்பான்மை மக்களைப் பட்டினிபோட்டுச் சித்திரவதை செய்துகொண்டு – படுமோசமான பேய்க்காட்டல்களை அரசியலாகப் புலுடாவிட்டு – அடக்குமுறைகளை அநியாயங்களை ஜனநாயகமாகப் பாவனை காட்டி, உலகு ஒழுங்கமைக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்று யாரும் நம்புவதில்லை. அடக்கும் வர்க்கத்தின் அரசியல் இந்த ஒழுங்கமைப்புக்கு வெளியே மாற்று இல்லை என்பதை நிறுவுவதன் மூலம் அடக்குவோர் ‘சுய நலன்களைத்’ தற்காத்துக் கொள்கிறது. ஒடுக்குவோர் நலன்சார் கலாச்சாரக் கட்டமைப்புக்களை அதிகாரமயப்படுத்தி-முதன்மைப்படுத்தி –அதையே நியாயமான வழியாகக் காட்டுகிறார்கள்.

• இதனாற்தான் ஒடுக்கப்படுவோர் உலக வழிமுறைகளை கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது. தற்காலக் கலாச்சார-அரசியல் கட்டமைப்புக்குப் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் அந்த எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்படுவதில் பல்வேறு சிதறல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. மக்களின் பன்முகத்தன்மை அதற்குக் காரணமல்ல. மாறாகப் பன்முக வித்தியாசங்களைக் கூர்மைப்படுத்தி எதிர்ப்பின் ஒழுங்கமைவை உடைப்பதில் அதிகாரம் கட்டமைக்கும் விழுமியங்கள் இயங்குவதை நாம் அவதானிக்க வேண்டும். அதனாற்தான் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முன்வருபவர்கள் எதிர்ப்பின் வடிவங்களை சிந்திக்கவேண்டியது மிக முக்கியமானதாக இருக்கிறது.

• புனிதமான வழிமுறைகள் என்று எதுவுமில்லை. ‘சமூக விஞ்ஞானம்’ கணித முறை விதிகளுக்குள்ளால் இயங்குவதில்லை. நேர்கோட்டுச் சிந்தனை முறை சமூகத்தைப் புரிவதற்கோ எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கோ உகந்ததல்ல.

• நீண்டகால மனித வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஏராளமான அறிதல்கள் உண்டு. மனித-சமூக இயல்புகள் பற்றிப் பல அறிதல்களை நாம் வசப்படுத்தியுள்ளோம். அடக்குமுறைக்கு உட்படும் மக்கள் அதற்கெதிரான எதிர்ப்பைச் செய்வர் என்ற அடிப்படை அறிதலும் வரலாறும் எமக்குக் கற்று கொடுத்த ஒன்றே. எதிர்ப்பு பலவந்தமாக முடக்கப்பட்டாலும் அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பு இருக்கும் என்பது கேள்விக்கப்பாற்பட்டது. சில சமூக அறிதல்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று குறிப்பதன் மூலம் நாம் அவற்றை பொதுமைப்படுத்தப்பட்ட சமூக நிறுவல்களாக – சமூக விஞ்ஞானமாக புரிந்து கொள்கிறோம்.

• இதுபோன்ற சமூகம் சார்ந்த பரந்த அறிதலுக்கு மார்க்;சியம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. மார்க்சிய அறிதலை பயன்படுத்துபவர்கள் அடக்கு முறைக்கு எதிரான பெரும் சவாலைக் கட்டி மாற்று சமுதாயம் பற்றி சிந்திக்கிறார்கள். மார்க்சியம் போல் ஒடுக்குதலுக்கு எதிர்ப்பை பலப்படுத்திய உத்திகள் போல் பலம்வாய்ந்த உத்திகள் வரலாற்றில் இல்லை என்பதை உலக வரலாற்றை மேலோட்டமாக அறிந்தவர்களாலேயே உணர்ந்துகொள்ள முடியும். தற்போதய சமமற்ற உலகின் அதிகாரத்துக்கு பெரும் சவாலாக மக்களை திரட்டி பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தது மார்க்சியம்தான் என்பதை தெரிந்து கொள்வது கடினமானதல்ல.

• மார்க்சியம் வழிநடத்தும் எதிர்ப்பு வெற்றிகளை ஈட்டிதருவதாக இருப்பதால் அதிகாரம் தமது முழுபலத்தையும் கொண்டு மார்க்சியர்களை ஒடுக்குவதை நாமறிவோம். ஒடுக்குமுறைக்கு எதிரான நியாயமான எதிர்ப்பை செய்ய விரும்பும் ‘நேர்மையான’ நோக்குடையவர்கள் மார்க்சியத்தை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாதது. எதிர்ப்பைச் சிதறடிக்கும் அடக்குமுறை கடந்த நூற்றாண்டில் மார்க்சிய எதிர்ப்பை முறியடிக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ளது. இருப்பினும் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தமாக நகர்ந்துகொண்டிருக்கும் உலகவரலாற்றில் ஒடுக்கப்படும் மக்கள் மார்க்சியத்தை மீண்டும் மீண்டும் கண்டெடுத்து எதிர்ப்பை வடிவமைப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களுக்கு தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டித் தந்துகொண்டிருக்கிறது.

• வறுமைக்குள் வீழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த ரஸ்ய மக்களை விடுதலை செய்த ரஸ்ய புரட்சியின் வெற்றிகளை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். இருப்பினும் ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுதலை செய்தல்நோக்கி ரஸ்யப் புரட்சியின் வெற்றிகள் தொடரவில்லை. அதேபோற்தான் மாபெரும் சீனப்புரட்சியும் அடிமைகளாக மிருகங்களாக மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுத்தது. கியூபா, சிலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கங்கேரி, ஈரான், கானா என்று சமூகம் விடுதலை நோக்கி நகர்ந்த உதாரணங்கள் உலகெங்கும் பரவிகிடக்கின்றன. இந்த நகர்வுகள் எல்லாம் வீணாய்ப் போன நடவடிக்கைகள் என்று அதிகாரம் வெற்றிப் பெருமிதத்திற் பூரித்துப் பம்மாத்து விடுவதை ஏற்றுகொள்ள முடியாது. எதிர்காலத்து எதிர்ப்புகளை முறியடிக்க இறந்தகால மக்கள் எழுச்சிகளை கேவலப்படுத்துவது அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. ஆனால் அந்த எழுச்சிகள் மூலம் ஊருப்பட்ட(ஏராளம்) ஜனநாயக உரிமைகளை மக்கள் வென்றெடுத்துள்ளார்கள். எழுச்சிகளைக் கிண்டலடிக்கும் அதே தருணம் வென்றெடுக்கப்பட்ட இந்த உரிமைகளை மக்களிடமிருந்து மீண்டும் பறிக்க அதிகாரம் திணறிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

• இந்த உலகநியதியின் அடிப்படையிற்தான் சரியான எதிர்ப்பைச் சிந்திப்பவர்கள் சில தீர்க்கமான அறிதல்களை ஏற்றுகொள்கிறார்கள். வலதுசாரி அரசின் நலன்கள் ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் மக்கள் நலன்களில் இருந்து மாறுபட்டது என்பதை வரலாறு நமக்கு கற்று தந்துள்ளது. அதிகாரம் எந்த நலன்சார்ந்து இயங்குகிறது? -அது எவ்வாறு தனது நலன்களை நிலைநாட்டுகிறது? என்ற ஆழமான அறிதல் இன்றி அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்பைக் கட்டுவது கடினமானது. அதிகாரத்தை அடையாளப்படுத்தி அதிகாரம்சார் நலனில் இயங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு எதிர்ப்பை வடிவமைக்காமல் எப்படிப் போராடுவது? எதிரி யார் என்று தெரியாமல் எப்படி எதிர்ப்பைச் செய்வது?

• எதிரி யார்? என்பதன் விடை சுலபமானதல்ல. அதிகாரத்தை குறிவைத்து அதன் நலன்சார் அமைப்புகளைத் தகர்ப்பதற்கு எதிர்ப்பை ஒன்றிணைக்கும் மார்க்சியம் அதிகாரத்தை எல்லாத் தளங்களிலும் எதிர்க்கும் உத்தியாகிறது. அதனாற்தான் மார்க்சியம் எப்பொழுதும் ஒடுக்கப்படுபவர் நலன்சார்ந்து சிந்திப்பதாக இருக்கிறது.

• ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பலப்படுத்துவது எவ்வாறு? ஏதோ ஒரு வகையில் ஒடுக்குமுறைகளை செய்துகொண்டிருக்கும் அதிகாரங்களுடன் நட்பை பேணுவதன் மூலம் நாம் எமது எதிர்ப்பை பலப்படுத்தலாம் என்று நினைப்பது முட்டாள்தனமானது. காஸ்மீரில் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஒடுக்கும் இந்திய வலதுசாரி அரசு இலங்கை தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்ப்பது சரியா? தமிழரின் சுய நிர்ணய உரிமை வழங்கப்படுவதன் மூலம் இந்திய அதிகாரத்தின் பல்வேறு நலன்கள் திருப்திப்படுத்தப்படும் என்று காட்டுவதன் மூலம் இந்திய அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்திய அதிகாரத்தின் நலம் என்று நாம் எதைச் சொல்கிறோம்?. இந்தியாவில் பெரும்பான்மை மக்களை வறுமைக்குள் புரட்டி சுரண்டித் தள்ளிக்கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு இலங்கையின் வடக்கு –கிழக்கை மேலதிக சுரண்டலுக்காக நாம் திறந்து விடுவதன் மூலம் மக்களுக்கு விடிவு வரும் என்று நினைப்பது முட்டாள்தனமானதல்லவா? அடிமைச் சங்கிலியை உடைப்பதற்கு பதிலாக எந்த சங்கிலியால் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்று நாமாகத் தீர்மானிக்கும் உரிமை போதும் என்று சொல்வது போன்ற முட்டாள்தனமது.

• சில உரிமைகளை விட்டுகொடுத்துச் சில உரிமைகளை வெல்லும் உலகில் நாம் இல்லை. விட்டுகொடுக்கும் உரிமைகளை நாம் மீண்டும் பெற நாம் மீண்டும் பெரும்போர் செய்யவேண்டியிருக்கும். வென்றெடுக்கப்பட்ட எந்த உரிமைகளையும் நாமாக விட்டுகொடுக்க நாம் ஒருபோதும் முன்வரக்கூடாது.

• ஒடுக்கப்படுபவர்கள் ஒன்றுபடுவதுதான் அதிகாரத்துக்குக் கிலி உண்டாக்கும் விடயம். காஸ்மீரில் மற்றும் உலகெங்கும் ஒடுக்கப்படுபவர்கள் இணைவதுதான் எதிர்ப்பைப் பலப்படுத்த சிறந்த வழி. அதிகாரம் எம்மைவிட பலமாக இருக்கிறது என்பதற்காக நாம் அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும் என்ற அவசியமில்லை. எதிர்ப்பு ஏதாவது ஒரு அதிகாரத்தின் உதவியுடன்தான் நிகழவேண்டும் என்று நினைப்பது மடத்தனமானது.

….தொடரும்.