2009

2009

இலங்கைக்கு கடன் வழங்கும் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் பரிசீலனைக்கு எடுக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி தொடர்பாக நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இறுதிச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த விடயத்தில் “சர்வதேச சமூகத்தின் சகல அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நாணய நிதியப் பெண் பேச்சாளர் கரோலின் அட்கின்சன் கூறியுள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பியிருந்தது. வடக்கில் செலவிடப்படும் நிதியானது இந்த மக்களை சிறையில் வைத்திருப்போருக்காக செலவிடப்படுவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நாணய நிதியத்தின் பதில் என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. அதிகாரிகளுடன் சிறப்பான முறையில் கலந்துரையாடல்களை நாணய நிதியம் மேற்கொள்வதாக அட்கின்சன் பதிலளித்தார். ஆனால், எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் அறிக்கைகளை எடுத்திருந்தனர். இலங்கையின் விண்ணப்பமானது முன்னகர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது. ஒபாமாவின் நிர்வாகமானது ஊடகங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றது. ஜூலை 13 இல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்பக்க செய்தியாகவும் மறுநாள் ஆசிரியர் தலையங்கமாகவும் இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கான 1.9 பில்லியன் கடனுக்கு இப்போது சாத்தியம் குறைவாகவே காணப்படுவதை இந்தப் பத்திரிகையின் செய்தியும் ஆசிரியர் தலையங்கமும் சுட்டி நிற்கின்றன.

அடிக்குறிப்பு: ஐ.நா. பொதுச் சபை ஆவணத்தில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விமர்சனம் மற்றும் புவியியல் ரீதியான சமநிலை என்பன தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. நாணய நிதியத்தின் நிலுவையாக இருக்கும் கடன் விண்ணப்பங்கள் தொடர்பான கேள்விகளை தடைசெய்தல் தொடர்பாகவும் கேள்வியெழுப்பப்பட்டது. உதாரணமாக இலங்கைக்கான கடன் வழங்குவது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர நேரடியான பதில் கிடைக்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

பாக்கு நீரிணை மீது பாலம் குறித்து மீண்டும் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணையூடாக பாலமொன்றை நிர்மாணிக்கும் யோசனை குறித்து கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் ஆராயப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமால் குமாரகே கூறியுள்ளார்.

இந்தப் பாலமானது இலங்கையானது பிராந்தியத்தில் தனது அடையாளத்துவத்தை மீளப்பெறவும் கண்டத்தில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் உதவியாக அமையுமென்றும் அவர் கூறியுள்ளார். மணல்மேடுகளை உள்ளடக்கியதாக தற்போது இருந்து வரும் ஆதாம் பாலத்தின் மீது இந்தப் பாலம் அமைவது இரு நாடுகளுக்குமிடையில் கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவை ஏற்படுத்தும் விடயமாக அமையுமென்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் தரைவழி தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொண்டால் பயணத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியதாக அமையுமென்று கைத்தொழில் நிர்மாண சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில் அமால் குமாரகே கூறியுள்ளார். இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலத்தை நிர்மாணிக்க குறைந்தது 10 வருடங்களாவது எடுக்குமென்று தெரிவித்த குமாரகே இதனை நீண்டகால திட்டமாக கருதி செயற்படவேண்டுமென்று குறிப்பிட்டார்.

அடுத்தவாரம் கொழும்பில் தெற்காசிய போக்குவரத்து அமைச்சர்கள் ஒன்றுகூடவுள்ளனர். அச்சந்திப்பின்போது இலங்கை இந்திய பாலம் அமைக்கும் விடயம் ஆராயப்படுவது நிகழ்ச்சிநிரலில் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த யோசனையின் ஆரம்பகட்டத்தில் வீதி, பாலம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இப்போது புகையிரதப்பாதை அமைப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கப்படுகிறது.தூரத்தைக் கவனத்தில் கொண்டால் உபகண்டத்தை இலங்கையுடன் போக்குவரத்திற்கு இணைப்பதில் புகையிரதப்பாதை சிறந்த விடயமாக காணப்படுகிறது. குறுகியகால அடிப்படையில் இரு நாடுகளும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் அதிவேகப்படகு சேவைகளை மேற்கொள்ளமுடியுமென்றும் குமாரகே கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு கோரி போராட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினர் இம்மாதம் முதலாம் தேதி முதல் மட்டக்களப்பு நகரில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்தப் போராட்டத்தில் இன்றுடன் 19 வது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த 4 வருடங்களாக தங்களைப் போல் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் இது வரை நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டும் இப்பட்டதாரிகள், தங்களுக்கு வேலை வாயப்பு கிடைக்கும் வரை இப்போராட்டததை தொடர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக சுட்டிக் காட்டும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரான குமாரசாமி ஜெயராஜா எதிர் வரும் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சாதகமான முடிவொன்றை தாம் எதிர் பார்ப்பதாகவும் கூறுகின்றார்.

கிராண்ட்பாஸில் சூட்டுக்காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கியால் சுடப் பட்டு இறந்தவர்கள் இருவரின் சடலங்களை நேற்றுக் காலை (18) பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் நேற்றுக் காலை 7.30 அளவில் இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

22 வயதான ஹில்ஹான், 51 வயதான மொஹமட் மர்சூக் ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பால்மா பக்கட்டுக்களின் விலைகள் – ஒரு கிலோ-ரூ. 37, 400 கிராம்-ரூ. 15 குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் நாளை முதல் குறைக்கப்படுமென நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதன்படி, ஒரு கிலோ பால் மா பக்கட்டின் விலை 37 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 637 ரூபாவுக்கு விற்ற ஒரு கிலோ பால்மா பக்கட்டின் விலை 600 ரூபாவாகவும் 260 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பக்கட் டின் விலை 245 ரூபாவாகவும் விற்கப்படும். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மா நாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை நேற்று அறிவித்தார்.

அரசியல் இராஜதந்திர வழிமுறை ஊடான முன்னெடுப்பு ஏன்?: செ.பத்மநாதன் விளக்கம்

அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் இன்று சனிக்கிழமை அவர் எழுதியுள்ள வலைப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதனை இந்த வாரம் நோக்கலாம் எனக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். இக் காலகட்டத்தினை எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திப்பதற்கு தாயகத்தின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களும் விபரங்களும் முக்கியமானவை.

தற்போது தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் மூர்க்கமான முறையில் சிங்கள தேசியவாத அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது. வன்னி மண்ணிலிருந்து சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டு அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளு வேலிக்குள் மக்கள்

இதனை விட மேலும் மூன்று லட்சம் மக்கள் ஏனைய தமிழர் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை இழந்து மிகுந்த துயருடன் அல்லலுற்று வாழ்கின்றனர்.

மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்பட்டும் வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எதுவித நீதி கோரும் உரிமைகளும் அற்று அநாதரவாகவுள்ளனர்.

வறுமையும், மோசமான வாழ்க்கைச் சூழலும்

மக்களின் பொருளாதார, கல்வி மற்றும் பிற வாய்ப்புக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடி நிவாரணங்கள், மத்திய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் எதுவுமற்ற சூழல் நிலவுகின்றது. இது வறுமையையும், மோசமான வாழ்க்கைச் சூழலையும் தமிழ் மக்களிற்கு ஏற்படுத்துகின்றது.

இதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளினையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களினையும் உதவிகளினையும் திரட்டுவதில் இலங்கை அரசு கொள்கையளவில் வெற்றி பெற்று வருகிறது.

அந்த வளத்தினைக் கொண்டு புனர்வாழ்வு புனரமைப்பு செயற்பாடுகளினை முன்னெடுப்பதாக கூறுவதன் மூலம் தமிழ்மக்களின் நலன்களில் சிங்கள அரசு மிகுந்த அக்கறை கொண்டிருப்பது போல் காட்டித்தான் மேற்கொண்ட தமிழின அழிப்பு பழியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழிதேடுகின்றது.

தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் சிவில் நிர்வாக இயந்திரத்தின் கீழ் மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும் என்ற பெயரில் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற சிங்கள அரசு முனைகிறது.

தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் இலங்கையின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களினையும் சிங்கள அரசு முன்நகர்த்தியுள்ளது.

தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசு குறியாகவுள்ளது.

இது மட்டுமன்றி இலங்கை அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து ஒரு நாடு, ஒரு மக்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்களை சிங்கள ஆதிக்கத்துக்குள் சிறைப்பிடிக்கவும் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இன பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

இத்தகைய ஒரு சூழலில், நாம் எவற்றையும் நமது தாயகத்தின், நமது தாயக மக்களின் இன்றைய யதார்த்த நிலையிலிருந்து சிந்திக்க தொடங்குவதுதான் நேர்மையானதும் சரியானதுமாகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில், இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களது நலன்களைப் பேணுதல், மக்களைத் தத்தமது வாழ்விடங்ககளில் இயன்றளவு விரைவாக குடியமரச் செய்தல், மக்கள் தமது இயல்பு வாழ்விற்குத் திருப்புவதற்கு ஆதரவாகவும் ஆதாரமாகவும் செயற்படுதல், போரில் தமது அவயங்களை இழந்து அங்கவீனமாகி நிற்கும் நமது மக்களுக்கும் போராளிகளுக்கும் புதுவாழ்வளித்தல் போன்ற அடிப்படை புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை தமிழர் நலன் என்ற நோக்கு நிலையிலிருந்து எவ்வாறு கையாளப் போகிறோம் என்கின்ற மனிதாபிமான விடயங்கள் முதற்கொண்டு தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுத்தல் என்பது வரையாக நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை மிக நீண்டதும் சவால்கள் நிறைந்ததுமாகும்.

இத்தகைய ஒரு சிக்கலான ஒரு காலகட்டத்தில், மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுகிறோம்.

இந்த அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப் பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகத் தொடரும் என்கின்ற நிலைப்பாட்டினை விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துள்ளது.

இது நமது அடுத்தகட்டப் போராட்டம் குறித்த முக்கியமான ஒரு அரசியல் நிலைப்பாடு.

ஏனைய விடயங்கள் குறித்து நாம் அடுத்த வாரம் (25.07.2009) நோக்குவோம்.

என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இவற்றில் பொருத்தமானவற்றைப் இப்பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.

உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com

நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்
கே.பி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் 40 லட்சம் ஸ்டேர்லின் பவுண் உதவி : உயர் ஸ்தானிகர்

வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டேர்லிங் பவுண் உதவியை வழங்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ் தெரிவித்தார்.

“கிழக்கின் பாதுகாப்பு நிலைமை தற்போது நல்ல நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. சோதனைச் சாவடிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் சுமுகமாக ஈடுபடக் கூடிய சூழ்நிலை காணப்படுவதுடன் மக்கள் மத்தியல் ஒரு நம்பிக்கையும் காணப்படுகின்றது” என தனது கிழக்கு மாகாண விஜயம் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும், “நாட்டில் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் ,ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் துன்பங்களுக்கு உள்ளாதல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

தமிழ் மக்கள் மத்தியில் அரசு தொடர்பான நம்பிக்கை, அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்கும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன இருப்பதான உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இது தொடர்பாக ஜனாதிபதி அவ்வப்போது பேசி வருவதை நான் கௌரவிக்கின்றேன்.

பயங்கரவாதம், மோதல் நிலைமை தற்போது முற்றுப் பெற்றுள்ள நிலையில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமல்ல பிரித்தானிய முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.

கிழக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணிகள் நேற்றுடன் நிறைவு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கான தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களை மூடிவிடத் தீர்மானித்திருந்தது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிராந்திய காரியாலயங்களையும், மூதூர் மற்றும் அக்கரைப்பற்று உப அலுவலகங்களையும் இம்மாதத்துடன் மூடி விட்டு கிழக்கிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளது. நேற்று முதல் மக்களுக்கான சேவைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சங்கத்தின் திருகோணமலை மாவட்ட பிராந்திய செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் சகல அலுவலகங்களும் மூடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறவினர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்துதல், மருத்துவ சேவை, கப்பல் பயணத்திற்கான வழித்துணை உட்பட பல்வேறு வகையில் மக்களுக்கான சேவைகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு ஒழிப்பு: இலங்கையில் பக்டீரியா பயன்பாடு; 175 பேர் பலி; 6979 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டில் பயன்படுத்தப்படும் பக்டீரியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கு அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் இருவர் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு வருகை தருகின்றனர்.

இம்மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடியதும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய பக்டீரியா நுண்ணங்கியை இலங்கைக்குக் கொண்டு வருவதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகே நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டில் பி. ரி. ஐ. என்ற பக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலமான பயன்கள் தாக்கங்கள் குறித்து இலங்கை வரும் கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்படும். அக்கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு குறித்த பக்டீரியாவைத் துரிதமாக இலங்கைக்குக் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, சுகாதார பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால குறிப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் 14 ஆம் திகதி வரையும் டெங்கு காய்ச்சலுக்கு 17 ஆயிரத்து 860 பேர் உள்ளாகியுள்ளனர். இக்காய்ச்சல் காரணமாக இற்றைவரையும் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடத்தில் ஜூன் மாதத்தில் தான் இந்நாட்டில் அதிகளவானோர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளனவர்களாக இனம் காணப்பட்டனர் என்றாலும் இப்போது இக்காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. ஜூன் மாதத்தில் 6979 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்ட போதிலும், இம்மாதத்தின் முதல் 14 நாட்களிலும் 1904 பேரே இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

இக்காய்ச்சல் கொழும்பு, கண்டி, கம்பஹா, கேகாலை, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே தீவிர நிலையில் காணப்படுகின்றது. இக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சு விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

A(H1 N1) பாதிக்கப்பட்டோர் தொகை 40 ஆக அதிகரிப்பு – வெளிநாடுகளிலிருந்து வருவோரிடமிருந்தே தொற்று

புதிய இன்புளுவென்ஸா ஏ(ஏச் 1 என் 1) என்கிற பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இலங்கையில் 40 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் இனம் காணப்பட்டுள்ள சகலரும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருப்பவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, ஹொங்கொங், சவூதிஅரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் :-

இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த 28 பேரும், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த 5 பேரும், அமெரிக்காவிலிருந்து வந்த 4 பேரும், ஹொங்கொங்கிலிருந்து வந்த இருவரும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி நிலையம் இவர்கள் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருகை தரும் சகல பயணிகளும் தேர்மல் ஸ்கேனரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இப்பரிசோதனை மூலம் காய்ச்சலுக்கு உள்ளாகி இருப்பவர்கள் இனம்காணப்பட்டதும் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று நோய்கள் தவிர்ப்பு ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆறாயிரம் பயணிகள் வந்து செல்லுகின்றனர். இங்கு புதிய இன்புளுவென்ஸா பரிசோதனையில் டாக்டர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதற்குத் தேவையான மருந்துகள் எம்மிடம் கையிருப்பில் உள்ளன என்றார். இக்காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 708 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 546 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சல் 143 நாடுகளில் காணப்படுகின்றது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கூறினார்.