2009

2009

ஸ்லோவேனியா டெனிஸ் போட்டி சபீனா சாம்பியன் கிண்ணத்தை வென்றார்

sabeena.jpgரஷ்யாவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை தினாரா சபீனா இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை 6-7,6-1,7-5 என்ற செட்களில் இறுதிப் போட்டியில் போராடி வீழ்த்தி ஸ்லோவேனியா ஓப்பன் டெனிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உலகத் தரவரிசையில் 38 ஆவது இடத்திலும் உள்ள சாரா எர்ரானி, முதல் செட்டில் டைபிரேக் வரை சென்று 7-6 என்று சபீனாவை வீழ்த்தினார்.

மூன்றாவது செட்டில் சாரா எர்ரானி தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க 54 என்று முன்னிலை வகித்தார். ஆனால், அதற்கு அடுத்த தன் சர்வை சபீனாவிடம் இழக்க தோல்வியடைந்தார்.

சனா 172 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்

பாடசாலை மாணவி தற்கொலை : பாடசாலைகளுக்கு மாணவர் கையடக்கத் தொலைபேசி கொண்டுசெல்லத் தடை

0000.jpgகறுவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தற்கொலைக்கு முயற்சிசெய்த மாணவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து பாடசாலைகளுக்குள் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலை வளாகத்துக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

குறித்த மாணவி வைத்திருந்த கையடக்க தொலைபேசி தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையை அடுத்து ஏற்பட்ட மன வேதனையின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒன்பதாம் தரத்தில் கல்வி பயின்றுவரும் 14 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவராவார். குறித்த சம்பவத்தை அடுத்து இவர் சிகிச்சைகளுக்காக பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிகிச்சைகள் பலனின்றி அவர் நேற்று முன்தினம் வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார். இவரது இறுதிக்கிரியைகள் பொரளை பொது மயானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் கறுவாத்தோட்டம் பொலிஸார் குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களையும் பதிவு செய்தள்ளனர்.

இதேவேளை இச்சம்பவத்தையடுத்து பாடசாலைகளுக்குள் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது. இந்தத் தடையையும் மீறி மாணவர்கள் பாடசாலைகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வார்களாயின் அவர்களின் பெற்றோரே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் இலங்கை வந்தார்!

bandaranaikeairport.jpgஇலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜோசுவோ பொக்குடா நேற்று இரவு இலங்கை வந்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இவரை விமான நிலையத்தில் வரவேற்றார். சீகிரியாவில் இன்று இடம்பெறவுள்ள அரும்பொருட் காட்சியகத் திறப்பு விழாவிலும் பொக்குடா கலந்துகொள்ளவுள்ளார்.

இவர் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்  அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படும் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

galle-district.jpgதென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார். கொழும்பு மகவெலி மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.

தென் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டனர் என்றும் அமைச்சர் கூறினார். வடக்கிலும் ஊவா மாகாணத்திலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் முதலாவது சதொச நிலையம் – அமைச்சர் பந்துல இன்று திறந்து வைத்தார்

sathosa-outlet.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் (சதொச) இன்று காலை திறந்து வைக்கப்பட்டதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். வின்சர் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூ.மொ.வி. நிலையத்தை வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன வைபவரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள்,  சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சதொச தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களை விற்பனை செய்வதற்காக 3 கூ.மொ.வி. நிலையங்களை அமைக்க வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள ஏனைய இரு கூ.மொ.வி. நிலையங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

சீகிரிய நூதனசாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு – கலாசார மரபுரிமைகள் அமைச்சு தகவல்

tourism.jpgசீகிரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூதனசாலை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கலாசார மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 480 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலையை இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முற்றிலும் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதலாவது அரும்பொருட்காட்சியமாகக் குறிப்பிட முடியும். இன்று நடைபெறவுள்ள இந்த நூதனசாலைத் திறப்பு விழாவில் ஜப்பானின் பிரதிப் பிரதமர், அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார்

sania-mirza.jpgஇந்தியா வின் டெனிஸ் தாரகையான சானியா மிர்சா ஐ.டி.எப்,சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவுக்கான  சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்.,  சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்;  இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் ஜூலி காயினைத் தோட்கடித்தார்.

முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின்பு சானியா 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த சானியா 6-4 என சுலபமாக கைப்பற்றினார். இதையடுத்து சானியா 7-5, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

நாணய நிதியம் வழங்கவுள்ள கடனில் முதல் தவணை இன்று கிடைக்கிறது

cb-kab.jpgசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் முதல் தவணையாக 322 மில்லியன் டொலர்கள் இன்று (28) இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கவிருப்பதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்றுத் தெரிவித்தார்.

ஏழு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இக்கடன் தொகையின் மூன்று தவணைகளை இவ்வருடத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை இலங்கை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியையும் ஸ்திரத்தன்மையையும் தொடர்ந்தும் பேண முடிவதுடன் ஏனைய நாடுகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை மீது அதி கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது ஊன்றுகோலாக அமைவதாகவும் ஆளுநர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கும் உலக வங்கி உள்ளிட்ட பாரிய நிதி நிறுவனங்களிலிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி சாதகமாக அமைவதுடன் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏனைய உலக நாடுகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த வருடம் சிறப்பாகவிருந்ததாக அறிவித்திருக்கும் பட்சத்தில் எதற்காக தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற வேண்டுமென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஆளுநர் கூறியதாவது:-

கடந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை பார்க்கையில் கடன்பெற வேண்டியது அவசியமில்லை. இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் உலகின் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கும் ஏற்பட்டுள்ளது.  அதனை ஈடு செய்யும் வகையிலும் ஏனைய நாடுகளிடமிருந்து தொடர்ந்தும் கடனுதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘கோட்டா முறை’ மூலம் 1. 9 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்காக 300 பங்குகளையே முதலில் கோரியிருந்தோம். எமது கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு விரும்பினால் மேலும் 100 பங்குகளுக்கு கோரிக்கை விடுக்க முடியுமெனக் கூறியது.

எவ்வளவு நிதியை நாம் கையிருப்பில் வைத்துக்கொள்கிறோமோ அது சந்தர்ப்பத்துக்கு கைகொடுக்கும் என்பதனை உலகப் பொருளாதார நெருக்கடியின்போது நாம் நன்கு கற்றுக்கொண்டோம். தற்போது ஒரு வருடத்துக்கான அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு நாம் செயற்படவில்லை.

ஒரு தசாப்தத்தையே இலக்கு வைத்து செயற்படுகின்றோம். இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதற்காக 400 பங்குகளுக்கு கோரிக்கை விடுத்ததற்கு அமைவாகவே நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களுக்குள் அதாவது 2012 ஆம் ஆண்டுக்குள் இக்கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும். சேவைக்காக வருடந்தோறும் 0.3 சதவீத வட்டியும் 300 பங்குகளுக்கு ஒரு சதவீத வட்டியும் மேலதிக பங்குகளுக்கு 2 சதவீத வட்டி வீதமும் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கை நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா டெலிகொம் தனியாருக்கு விற்க வேண்டி ஏற்பட்டது. இலங்கை காப்புறுதி நிறுவனத்தை தனியார்மயப்படுத்தல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இம்முறை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடன் உதவி கிடைக்கப்பெற்றிருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாணய நிதியம் மத்திய வங்கிக்கே இக்கடன் தொகையை வழங்கியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு இல்லையென வலியுறுத்திய ஆளுநர் இந்நிதி வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தியில் நேரடி பங்களிப்புச் செலுத்தாது எனவும் குறிப்பிட்டார்.

இவ்வருடம் 213 டெங்கு நோயாளிகள் மரணம்

mosquitfora.jpgஇவ் வருடம் நாடு முழுவதிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 213 நோயாளிகள் 26-07-2009 வரை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 19ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கம்பளை, மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமானோர்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசங்களில் நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடந்த வராம் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மடு உற்சவத்துக்கு முன்னர் வீதி புனரமைப்பு – பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை

basil-raja.jpgமடு உற்சவத்துக்கு முன்னர் மடு தேவாலயத்துக்குச் செல்கின்ற வீதி முற்றாகப் புனரமைக்கப்பட வேண்டும் என வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் தலைவரான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ புனரமைப்பு நடவடிக்கைகளை மேறகொள்ளும் உத்தியோகத்தர்களைக் கேட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி மடு உற்சவம் இடம்பெற உள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் 180 நாட்கள் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பஸில் ராஜபக்ஷவின் கணகாணிப்பல் மடு தேவாலயம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பயங்கரவாத நடவடிக்கைகளால் மடு தேவாலயம் சேதமடைந்ததுடன் அதன் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. தேவாலயத்துக்கு அன்மித்த பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அப்புரப்படுத்தி உள்ளது. தற்போது தேவாலயத்துக்குச் செல்லும் வீதியையும் பனரமைத்து பக்தர்களுக்கு சிரமமின்றி மடு யாத்திரையை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மடு தேவாலயத்துக்குப் பிரவேசிக்கினற வீதியின் 10.6 கிலோ மீற்றர் தூரத்தைப் புனரமைக்க 124.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.