2009

2009

நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கு யாழ்.மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் – அர்ஜுன ரணதுங்க தகவல்

arjuna-ranatunga.jpgயாழ். மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கு ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விளையாட்டு துறையினருடனான சந்திப்பில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பாடசாலைகளின் விளையாட்டு துறை ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற இச்சந்திப்பு யாழ்ப்பாணம் புளுஹவன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது இச்சந்திப்புக்கு மின்சக்தி பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமைதாங்கினார்.

பிரதி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கு தொடர்ந்தும் கூறுகையில்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான நிதியினை விளையாட்டு அமைச்சு ஒதுக்கவுள்ளது இதற்கான இடம், வரைபடம், திட்டவரைவுகளை விளையாட்டுத்திணைக்களம் உடனடியாக வழங்க வேண்டுமென வேண்டுகிறேன். பாதுகாப்புக்காரணங்களுக்காக பருத்தித்துறை காட்லிக்கல்லூரி தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி, யூனியன் கல்லூரிகளின் விளையாட்டுமைதானங்கள் பாவனையில் இல்லாமல் உள்ளது. இவற்றை மீண்டும் மாணவர் பயன்படுத்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்படுமென்றார்.

படகில் நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 32 பேர் கைது

ranjith-gunasekara.jpgநியூ ஸிலாந்துக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்வதற்கு முயன்ற 32 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சீதுவ பகுதியிலிருந்து மீன்பிடிப் படகு மூலம் இவர்கள் செல்வதற்கு முயற்சித்த போது புதன் கிழமை பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

முகவர் ஒருவருக்கு தலா 3 இலட்ச ரூபாவை இவர்கள் கொடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டவிரோதமான பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் கைதாகவில்லை.

கியூபா மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம்

mosquitfora.jpgடெங்கு காச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. என்கின்ற பக்ரியா நுண்ணங்கியை பாவிப்பதற்குரிய கியூப மருத்துவ நிபுணர்களின் சிபார்சுகள் அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சளைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபாவில் பயன்படுத்தப்படும் பி.ரி.ஐ. என்கிற பக்ரியா நுண்ணங்கியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இந்த நுண்ணங்கியை பயன்படுத்துவதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை பெற்றுக் கொடுக்கவும் கியூபா முன்வந்துள்ளதுடன் இரு மருத்துவ நிபுணர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.

இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பி.ரி.ஐ.யை பாவிப்பது தொடர்பான கள ஆய்வை பூர்த்தி செய்ததும் தங்களது சிபார்சுகளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு சமர்ப்பிப்பர் என்றும் டாக்டர் மஹீபால கூறினார்.

இம்மருத்துவ நிபுணர்கள் இருவரும் ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வை ஏற்கனவே மேற்கொண்டனர். கண்டி மாவட்டத்தில் தங்கி இருந்து மேற்கொண்ட கள ஆய்வை முடித்துக் கொண்டு இன்று கொழும்புக்கு வருகை தரும் இவர்கள் அடுத்துவரும் ஐந்து நாட்கள் கொழும்பு மாவட்டத்தில் ஆய்வை மேற்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் கைத்தொழில் ஊக்குவிப்பு: குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க நடவடிக்கை

உள்ளூர் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க வங்கிகளின் உயரதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தொழிலை காத்திரமானதாக முன்னெடுத்துச் செல்ல இது பெரிதும் உதவுமெனவும் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். தற்போது லங்கா புத்ர வங்கியின் மூலம் சில பகுதிகளில் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெறக்கூடியதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கைத்தொழில் துறைகளை மீள்கட்டியெழுப்பும் வகையில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்கள் மறந்த மறக்கடிக்கப்பட்ட கதை : அழகி

srilanka-refugees.jpgஇலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் நாம் கேட்டு வளர்ந்த வார்த்தைகள் சுயாட்சி, சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது, இன்னும் ஒருபடி மேல் போய் ஈழ விடுதலை, தமிழ் ஈழம் என இப்படியே பலர் எம்மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றனர். முதற் கூறிய சுயாட்சி, சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அன்றைய தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டவை.  அன்றைய அரசியல்வாதிகள் இளையோர் மற்றும் பொது மக்களைக் கொல்லவில்லை. 

1980ம் ஆண்டு தொடக்கத்தில் தமது சுய தேவைகளுக்காக தமிழ் மக்களை  பிழையான பாதையிலே வழி நடத்தி பாரிய கொலைகளையும் கொள்ளைகளையும இந்த விடுதலை அமைப்புக்கள் நடத்தி ஏறக்குறைய  100 000 தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

யார் இவர்கள்? எப்படித் தோன்றினார்கள்?  இவர்கள் பின்னணி என்ன? கொஞ்சமேனும் தமிழினம் சிந்திக்க தவறி விட்டது. ஏன்? எதற்காக?

சுருக்கமாக எமது இன மக்களை கூறுவதானால் ஏனைய சமூக மக்களிடம் இருந்து வேறுபடுகிறார்கள். முதலில் எமது சமுதாயத்தில் எது சரி எது பிழை என்பதை பிரித்துப் பார்ப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒரு நல்ல சமுதாயமாக முதலில் உருவெடுக்க வேண்டும்.  பின்புதான் எமது விடுதலையைப் பற்றிப் பேச வேண்டும்.

குறிப்பாக LTTE, PLOTE, TELO  உட்பட விடுதலை என்ற பெயரில் அமைப்புக்கள் செய்த கொடூரங்கள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும். தமது மக்களுக்கு அவர்கள்  எந்த கொடுமைகளும் செய்யாத மாதிரி அடுத்த கட்டத்திற்கு தாவ முற்பட அனுமதிக்கக் கூடாது. இப்பொழுது இருக்கும் தலைவர்களுக்கு விசாரணைகளின் பின் குற்றவாளிகளாக காணுமிடத்தில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

எவ்வளவோ உன்னத சிந்தனையுடனும் தியாக மனப்பாங்குடனும் இந்த அமைப்புக்களுக்குள் சென்ற எத்தனையோ போராளிகள்  இந்த இயக்கங்களின் தலைவர்களின் சுயநல சுகபோகங்களுக்கு இடைஞ்சலாக இருந்தபடியால் கொன்று ஒழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானவர் பிரபாகரனே!

மேலும் புலம் பெயர் நாடுகளில் இயங்கும் தொலைக்காட்சிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.  குறிப்பாக தீபம், ஐரிவி ஆகியவை  பிரபாகரன் தமிழ் மக்களுக்கு செய்த கொடூரங்களையும் துரோகங்களையும் மூடி மறைத்து இன்று வரை ஐரோப்பா வாழ்  தமிழ் மக்களை பிழையான பாதையில் இட்டுச் செல்லுகின்றன. இவர்கள் யார் ஏன் எதற்காக இப்படி நடந்து கொள்ளுகிறார்கள்?  இவர்கள் பத்திரிகை துறை தொடர்பாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆதலால் ஒரு ஊடகம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்;, எப்படி மக்களை வழி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உயிரை அழித்தவனை விட  சமுதாயத்தை முன்னேற விடாமல்;, உண்மைகளை மக்கள் முன் கொண்டு செல்ல தயாராக இல்லாத மோசமான கருத்துக்களைப் பரப்புரை செய்த இந்த தொலைக்காட்சி சேவையை நடத்துபவர்கள் முதன்மையான குற்றவாளிகளாவர்.

பத்திரிகைத் துறை என்றால் இந்த ஐரோப்பாவில் இந்த நாடுகளை  அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டி செவ்வனே நடத்துவதற்கு உதவி வருகின்றன. அமைதியும் அபிவிருத்தியும் கண்டு மேலும் முன்னேறி வருகின்றன. நடுநிலை, உண்மைகளை வெளிக் கொண்டு வருதல், துரோகத்தனத்தை எதிர்தல் என மக்களை நல்வழிப்படுத்துவதே சிறந்த பத்திரிகையாளனுக்கு அழகு. அதுவே பத்திரிகைத் துறையின் மக்கள் பணி! ஆனால் தீபமும் ஐரிவியும் புலம்பெயர் மக்களுக்கு ஆற்றிய பணிகளினால் அங்குள்ள மக்களும் இங்குள்ள மக்களும் இன்று நடுத் தெருவில் நிற்கிறார்கள்!

மேலும் ஆங்காங்கு தலைவர்கள் முளைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் உருப்படியான, தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களை காணவில்லை. தனது குடும்பம் – எப்படி காசு அடிக்கலாம் – எப்படி அண்டிப் பிழைக்கலாம் போன்ற எண்ணங்களுடனேயே  தலைவர்கள் முளைக்கிறார்கள்.

தமிழ் மக்களே!! உசாராக இருக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாதீர்கள். நல்ல தலைவன் ஒருவனை தேட வேண்டும். செயற்பட வேண்டும்.  முகத்தை மூடி மறைக்கும் பத்மநாதன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமையை வழங்க முடியாது. பத்மநாதன்  பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுக்கப் போவதாக கூறுகின்றார். பிரபாகரன் கொலைகள் மீது கொண்ட அடங்காத தாகத்ததால் எண்ணுக்கணக்கற்ற அப்பாவி இளைஞர்கள்;, யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இந்த தமிழினத்தின் வரலாற்றில் இப்படியொரு கற்பனைக்கெட்டாத  கொடூரமான அழிவை பிரபாகரனைத் தவிர வேறெவராலும் நடத்திக் காட்டியிருக்க முடியாது. மீண்டும் ஒரு பிரபாகரன் வாரிசாக வரும் பத்மநாதனை முளையோடு கிள்ளி எறியுங்கள். (KP இன் கைதுக்கு முன் ஓகஸ்ட்/ 1 /2009 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.)

தமிழ் மக்களே! இப்பொழுது மிக மோசமான இனப்படுகொலை நடந்து முடிந்து உள்ளது. தயவு செய்து இதை மறக்க வேண்டாம். இந்த இனப் படுகொலையை எப்படியாவது சர்வதேச  உலகத்திற்கு வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாக ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். உதாரணத்திற்கு யூதர்கள் தங்களுடைய இனப்படு கொலையை  எப்படி வெளிக் கொண்டுவந்து வருடா வருடம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதே போல் எமது உடன்பிறப்புக்கள் பல உருத் தெரியாமல் அழிந்து விட்டார்கள். இதை ஒவ்வொரு தமிழனும் தமது மூச்சுக் காற்றுடன் சேர்த்து நினைவு கூருதல் வேண்டும். வருடா வருடம் தமிழர்கள் அழிக்கப்பட்ட நாள் எமது விடுதலையின் தொடக்கமாக தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். தமிழர்களுடைய தாயகம் மலர வேண்டும்.

உலகம் முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு 1154 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்

ah1n1.jpgஉலகம் முழுவதும் 168 நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி இருப்பதாகவும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 1154 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்து உள்ளது.

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 1008 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு பரிசோதனைக் கூட ஆய்வின் மூலம் மட்டும் உலகம் முழுவதும் 1 இலட்சத்து 62 ஆயிரத்து 380 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து இருப்பதாகவும் கூறி உள்ளது.

வட கிழக்கு ஆசியாவில் 65 பேரும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 39 பேரும், ஐரோப்பாவில் 41 பேரும் பன்றி காய்ச் சலால் உயிர் இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் உலக தமிழர் ஒற்றுமை மாநாடு

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் அமைப்பாளர் வா.மு.சேதுராமன் சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது, உலக தமிழுறவு மன்றத்தின் சார்பில் 6வது உலக தமிழர் மாநாட்டை உலக தமிழர் ஒற்றுமை மாநாடு என்ற பெயரில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

ஈழம் மற்றும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அண்ணா கவி அரங்கம், உலகளவில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முன்னாள் மலேசிய மந்திரி டத்தோ சாமிவேலு மற்றும் மலேசிய மந்திரிகள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழக துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி, மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோருக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு வா.மு. சேதுராமன் கூறினார்.

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே. திருவள்ளுவர், காப்பாளர் மாம்பலம் சந்திரசேகர், வழிகாட்டும் குழுவினர் செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா. கணேசன் உட்பட மன்றத்தின் நிர்வாகிகள் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

குடும்பிமலையில் தங்க நகைகள், பெருமளவு பணம் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg குடும்பி மலை (தொப்பிகல) நரகமுல்லை பிரதேசத்திலிருந்து 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு, புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 1.5 மில்லியன் ரொக்கப் பணம், தங்க மோதிரங்கள் – 2, தோடு – 2, வளையல் மற்றும் மாலைகளையே மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, சினைப்பர் துப்பாக்கி – 01, கிளேமோர் குண்டுகள் – 03 மற்றும் பல்வேறு வகையான ரவைகளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க உதவிபுரிய கூடாது’

r-b0000.jpgநாட்டில் இனியொரு போதும் இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு மீள்குடியேறும் மக்கள் உதவிபுரிந்துவிடக் கூடாது என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அடக்கி ஆளும் நிலைக்கு இனியும் நாம் இடமளிக்கக் கூடாது என்று வவுனியாவில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்து முகமாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிசாட், “இடம்பெயர்ந்த மக்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட பிரசாரம் செய்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர் ஒருவர் முன்பே இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டு உயிர்கள் அழிந்திருக்கா! புலிகளின் தளபதிகள் இன்று ஜனநாயக வழிக்கு வந்து மக்களுக்கு சேவைசெய்வதற்கு ஜனாதிபதியின் செயற்பாடுகள்தான் காரணம்.

இந்த நாட்டில் இனவாதத்தைப் பூண்டோடு இல்லாது அழிக்கவேண்டும். அது தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதமாக இருந்தாலும் சரி இனியொருபோதும் இடமளிக்கக்கூடாது ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஒரு சிறந்த நிர்வாகி. நாட்டின் விபரங்களை விரல் நுனியில் வைத்துச் செயற்படுகிறார். கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் எத்தனை குளங்கள் உள்ளனவென்பதை அவர் ஆராய்ந்து வைத்து அவர் செயற்படுகிறார். ஓர் அரசாங்க அதிபரைவிட பசில் ராஜபக்ஷவுக்குத் தகவல்கள் தெரியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“பஸ் கட்டணம் குறித்து அடுத்தவாரம் தீர்மானம்’

bussss.jpgதனியார் பஸ் சங்கங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் சந்திப்பை அடுத்து பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு கூறினார்.

“”பஸ் கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தச் சங்கத்திற்கும் பஸ் கட்டணம் பற்றி தீர்மானம் எடுக்க முடியாது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே இது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

அடுத்தவாரம் தனியார் பஸ் சங்கங்களுடன் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. அதன் பின்னர் பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்படும்’ என்றும் அவர் இதன்போது கூறினார்.