கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தியின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில், அதன்மேல் விடுதலைப்புலிகளின் தேசியக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் படம் இருக்கக் காணப்பட்ட சம்பவத்தால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14 ம் திகதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவத்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு பக்தவத்சலம் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதன் மீது விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் பிரபாகரன் படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
சுதந்திர தின விழா நடைபெறுவதால், தாமதமாக பொலிஸாருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிஸார் நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடி எரிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.