2009

2009

யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

00jaffnabus.gif
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு வழிபடுவதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கான தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  பேருந்துகளில் புறப்பட்டு வந்த இவர்கள், வவுனியாவுக்கு வடக்கே ஏ9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பயண அனுமதி மறுக்கப்பட்ட தாங்கள் தங்குமிட வசதிகளின்றி சிரமப்பட்டதாக அந்த யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வந்திருந்தவர்களில் சுமார் 400 பேர் வரையில் வவுனியா மடுக்கந்தை பெளத்த விகாரையில் நேற்றிரவு தங்கியிருந்தார்கள். ஏ9 வீதி ஊடாக பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரலாம் என ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளையடுத்தே தாங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காகப் புறப்பட்டு வந்ததாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து கெப்பிட்டிகொல்லாவ, ஹொரவப்பத்தானை வழியாக வவுனியாவை வந்தடைந்ததாக இந்த யாத்திரிகர்களை ஏற்றிவந்த பேருந்துகளின் சாரதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாது என ஓமந்தையில் வைத்து திருப்பிவிடப்பட்டதை அடுத்து, மடுக்கந்தை விகாரையில் நேற்று முன்தினம் இரவைக் கழித்துவிட்டு, மதவாச்சி ஊடாக அனுராதபுரத்தி்ற்குச் செல்வதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் இதனால் வவுனியாவில் இருந்து தாங்கள் மீண்டும் திருகோணமலை வீதிவழியாகவே செல்ல வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கிய குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

rajanikanth.jpgரஜினி காந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கியதாக இலங்கையின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள தமிழர் ஒருவரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் ரஜினிகாந்தின் படங்களை தயாரிப்பதற்கு நிதி வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் குசேலன் மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற எந்திரன் ஆகிய படங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரிசாட் பதியுதீன் லண்டன் தமிழர் என குறிப்பிட்டிருந்த லண்டன் கருணாஸ் ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் குசேலன் திரைப்படம் கே. பாலசந்தர் அஸ்வின் டட் மற்றும் ஜீ. பீ. விஜயகுமார் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பிலேயே உருவாகியிருந்தமையை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரோபோ என்று முன்னர் பெயரிட்பட்டு பின்னர் எந்திரன் என பெயர் மாற்றப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்தப் படமும் சன் டீவியினால் தயாரிக்கப்பட்டுவருகிறது. அது ஐங்கரன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்தாலும் பின்னர் அது கைமாறி தற்போது சன் டீ வி நிறுவனத்தின் கைகளில் தயாரிப்பில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குற்றச் சாட்டு ஆதரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

சயீட் அன்வரின் சாதனையை சமன்செய்த கொவென்ட்ரி தரவரிசையில் முன்னேற்றம்

17-charles-coventry222.jpgஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சயீட் அன்வரின் சாதனையை சமன் செய்த சிம்பாப்வே வீரர் சால்ஸ் கொவென்ட்ரி ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பங்களாதேஷடனான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 194 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த 26 வயதான கொவென்ட்ரி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறினார். இதன்படி 103 ஆவது இடத்தில் இருந்த கொவென்ட்ரி 83 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது தவிர, பங்களாதேஷடனான ஒருநாள் தொடரில் சோபித்த சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புரா ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சீன் வில்லியம்ஸ் 9 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தையும் சிகும்புரா 6 இடங்கள் உயர்ந்து 50 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த இருவரும் மாத்திரமே ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் சிம்பாப்வே வீரர்களாவர்.

அதேபோன்று சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இரண்டு இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தை இழந்தார். சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இதனால் நியூஸிலாந்து வீரர்களான கைல் மில்ஸ் மற்றும் டானியல் விட்டோரி ஆகியோர் முறையே 2, 3 ஆவது இடங்களுக்கும் முன்னேற்றம் கண்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க வீராங்கணை ஆணா பெண்ணா?

0000semenyabesar.jpgஜெர்ம னியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில் மகளிர் பிரிவின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யாவிடம் அந்தப் பதக்கம் தங்கியிருக்குமா என்பது குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அவரிடம் நடத்தப்படவுள்ள பாலியல் பரிசோதனையில் அவர் பெண் அல்ல என்று கண்டறியப்படால் அவர் பதக்கம் இழக்க நேரிடும். பெர்லினில் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்தப் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்டன் செமென்யா எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அற்புதமான அவரது சாதனையும் அவரது உடல் தோற்றமும் பெரிய அளவில் சர்ச்சையை ஈர்த்துள்ளன. போட்டியில் பங்கு பெறும் வீரர்களும், போட்டி அதிகாரிகளும் அவர் ஒரு பெண் தான் என்பதனை நிரூபிக்குமாறு கோரியுள்ளனர். எனவே 18 வயதான இந்த தென் ஆப்பிரிக்கர் சிக்கலான பல பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

பொது மருத்துவ வல்லுநர், மகப்பேற்று மருத்துவ வல்லுநர், ஒரு உளவில் நிபுணர் மற்றும் பாலியல் சோதனை வல்லுநர் ஆகியோர் அந்த வீராங்கணையை சோதித்து அறிக்கை வழங்குவார்கள்.  எனினும் இது தொடர்பிலான முடிவு வருவதற்கு பல வாரங்களாகும். மேலும் இந்தப் பிரச்சினையில் தற்போது அரசியல் கலப்பும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா- யாழ் ரயில் மீளமைப்புக்கு 42 கோடி ரூபா நிதி கிடைத்துள்ளது

26parliament.jpgவவுனியா விற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் நிலையங்களை மீளமைப்பதற்காக 42 கோடி ரூபா உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘உதுரு மிதுரு’ திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ‘உதுருமிதுரு’ திட்டத்திற்கான பிரசாரப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டதாக ஜே.வி.பி. எம்.பி.

ஒருவர் பாராளுமன்றத்தலி பொய்யான தகவலொன்றை தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பிரசாரப் பணிகளுக்கு ரயில் திணைக்களத்தினூடாக 10 இலட்சம் ரூபா கூட செலவிடப்படவில்லை. எனது நேரடிக் கண்காணிப்பின் கீழே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தவறான செய்திகளை பரப்பி சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்த வேண்டாமென கோருகிறேன்.

மோதல் காரணமாக சேதமான ரயில் நிலையங்களை மீளமைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக நிதியமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ரயில் பாதைகளை மீளமைக்க 42 கோடி ரூபா அனுசரணை கிடைத்துள்ளது என்றார்.

262 கோடி செலவில் ரயில் பெட்டிகள்

மற்றொரு வாய்மூல வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் என்பன கொள்வனவு செய்வதற்கு 262 கோடி ரூபா செலவிடப்பட்ட தாகவும் இந்தக் காலப்பகுதியில் 100 ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் மற்றும் சிற்றுண்டி கூட பெட்டிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதில் 57 மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் 24 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 6 சிற்றுண்டி கூட பெட்டிகளும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

ஊவா முதல்வராக சசீந்திர சத்திய பிரமாணம்: செந்தில் உட்பட 4 அமைச்சர்களும் பதவியேற்பு

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர குமார ராஜபக்ஷ, நேற்று ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சசீந்திர குமார ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரக்கன் நிற சால்வை ஒன்றையும் அணிவித்தார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாகாண ஆளுநர் நந்தா மெத்யூவ் ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதே நேரம் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சகலரும் இவ் வைபவத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கூட்டாக சத்தியப் பிரமாணம் செய்தனர்.

*  சசீந்திர குமார ராஜபக்ஷ முதலமைச்சர், நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி மன்றங்கள், கலாசார விவகாரம், போக்குவரத்து, காணி, நீர்ப்பாசனம், பொருளாதார மேம்பாடு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* செந்தில் தொண்டமான் – இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமூக சேவைகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மின்சக்தி, எரி சக்தி, புடவைக் கைத்தொழில், சிறு கைத் தொழில்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஏ.எம். புத்ததாச – சுகாதாரம், உண்ணாட்டு வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு, நன்நடத்தை, மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* அனுர ரவீந்திர விதான கமகே – விவசாயம், கமநல அபிவிருத்தி, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீனவ கைத்தொழில், சுற்றாடல் மற்றும் சுற்றுலா ஆகியதுறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஆர்.எம். குமாரசிறி ரத்நாயக்கா – நெடுஞ் சாலை அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், நுகர்வோர் விவகார, கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்.

இதேவேளை மாகாண சபை உறுப்பினர்களான டாக்டர் ரோகண புஷ்பகுமாரவை சபைத் தலைவராகவும், சாலிய சுமேதவை உப தலைவராகவும், ஆளும் கட்சி பிரதம கொறடாவாக ராஜா பந்துசேனவையும், சபை முதல்வராக விஜித பேருகொடவையும் மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இவ் வைபவத்தின் போது ஆலோசனை முன் வைத்தார்.

வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் மூன்று மாதத்தினுள் மீள்குடியேற்றம்

26parliament.jpgதிருகோண மலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மூன்று மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத், சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வை.எம்.நவரட்ன பண்டா எழுப்பிய, வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பில் பா.உ.நவரட்ன பண்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத், இந்த ஆண்டில் 2,88,938 பேர் இடம்பெயர்ந்ததாகவும், இதுவரை 59,600 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் 98% நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மட்டக்களப்பில் 35,766 குடும்பங்களும், திருகோணமலையில் 22,068 குடும்பங்களும், மன்னாரில் 669 குடும்பங்களும் அம்பாறையில் 51 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் 1054 குடும்பங்களும் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30ற்கு வழமைக்கு மாறாகப் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்னவின் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார சபா பீடத்திற்கு வருகை தந்தார்.

அமைச்சரின் பதிலுக்குப் பின்னர், துணைக் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, ‘சம்பூரில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் வாழ்விடத்தில் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பாமல் தொடர்ந்து இரண்டு வருடமாக ஐந்து முகாம்களில் உள்ளனர்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வேறு இடங்களில் குடியமர மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். சொந்த இடங்களுக்குச் செல்வதானால், பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நானறிந்தவரை சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை” என்றதுடன்,

அதேநேரம், எதிர்க்கட்சிகளுக்கு நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிமல் மெத்திவக்க நியமனம்

nimal_madiwaka.jpgபொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண இவருக்கான பதவி நியமனத்தை நேற்று வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கு மேலதிகமாக ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இதுவரை கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர இவ்வாரம் முதல் ஓய்வுபெறுகின்றார். ஊடகப் பேச்சாளராக நீண்டகாலம் பொறுப்பிலிருந்த இவர் ஊடகத்துறைக்கு செய்தி வழங்குவதில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபராகவும் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையின் முதலாவது காற்றாடி மின் உற்பத்தி நிலையம் புத்தளத்தில்

wind_powerss.jpgகாற்றாடி மூலம்  மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு நிலையங்கள்  புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதிக்காக இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி முகாமையாளர் டட்லி பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்படும் காற்றாடி மூலமான முதலாவது மின் உற்பத்திததிட்டம் இதுவாகும். இத்திட்டத்திற்கு 4255 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 மெகாவொட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதன் நிர்மானப்பணிகள்  இரு உள்நாட்டு நிறுவனங்கள மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஸ்பைன் நாட்டில் இருந்து தருவிக்கப்படவுள்ளது. காற்றாடி மூலம் மின் உற்பத்தி செய்யும் 25 டேபைன்கள்  இங்கு பொருத்தப்படவுள்ளன.    

சர்வதேச தரமுடையதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின்  உதவி முகாமையாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.