பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண இவருக்கான பதவி நியமனத்தை நேற்று வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கு மேலதிகமாக ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இதுவரை கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர இவ்வாரம் முதல் ஓய்வுபெறுகின்றார். ஊடகப் பேச்சாளராக நீண்டகாலம் பொறுப்பிலிருந்த இவர் ஊடகத்துறைக்கு செய்தி வழங்குவதில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபராகவும் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.