2009

2009

நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரம் அவசியம் – அமைச்சர் மைத்திரிபால

பயங்கரவாதத் திலிருந்து நாட்டைப் பாதுகாத்ததைப் போல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் இன்னும் சிறிது காலத்திற்கு நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புலிகளைத் தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானகரமான போராட்டத்தின் வெற்றிக்குக் காரணியாக அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாகவும் சேனாதிபதியாகவும் இருந்தமையே என்று தெரிவித்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, உள்ளூர், வெளிநாட்டு அழுத்தங்களைத் தோல்வியுறச் செய்து இறுதிக் கட்டப் போரை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதியிடமிருந்த அதிகாரங்களே வழிவகுத்தது.

சிலவேளை இந்த அதிகாரம் இல்லாதிருந்தால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சிக்கலாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்ததன் பின்னர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டை முன்பு தாம் கொண்டிருந்த போதிலும், மாறிவரும் நிலைமைகளுக்கேற்பவும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களுக்கமை யவும், பழைய கருத்தியலில் தங்கியிருப்பது நடைமுறைச் சாத்தியமான அரசியலாகாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை

dimujayarathna2222.jpgஇலங் கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தரம் குறைந்த தேயிலை உற்பத்தியால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலையில் தரம் குறைந்த தேயிலையை கலப்பதால் சந்தைவாய்ப்பில் தடை ஏற்படுகிறது என்றும் அதனால் தரம் குறைந்த தேயிலை உற்பத்தி தொடர்பான முறையான திட்டம் ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனுமதிப் பத்திரம் பெற்ற 275 தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதேவேளை தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அனுமதிப்பத்திரம் இன்றி தரம்குறைந்த தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை சுற்றிவளைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்தவைச் சித்திரித்து – திரைப்படம்

filmstrip.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க அரச தொலைக்காட்சிக் கூட்டுத்தா பனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஏற்பாடு செய்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு முன்னோடியாக இரண்டாம் இராஜசிங்க மன்னனை ஒத்த கதாபாத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவைச் சித்திரித்து இறுவட்டு தயாரிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறியவந்தது.
இத்திரைப்படத்திற்கு 90 கோடி ரூபா செலவிடப்படும் என்றும் மேலும் அறியமுடிகிறது.

லொறிச் சாரதியிடம் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

லொறிச் சாரதி ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையுமெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர்.

நுகேகொடை – தெல்கந்தை பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகளையே இவ்வாறு கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோமவீர லொக்குகே தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை 4.45 அளவில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக அவர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை 27ஆந் திகதி மணல் ஏற்றிக்கொண்டு நுகேகொடை – தெல்கந்தையைக் கடந்து சென்ற லொறியைச் சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதியிடம் தேவையான ஆவணங்கள் இருந்தும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதிருக்க இரண்டாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளனர். இதற்கு உடன்பட்ட சாரதி, அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடமே விட்டுவிட்டு நாளை (நேற்று முன் தினம்) வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் சாரதி முறையிட்டிருக்கின்றார்.

அவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4.45 அளவில் குறித்த காவலரணுக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு பொலிஸார் கோரிய பணத்தில் ஆயிரம் ரூபாவை சாரதி கொடுத்துள்ளார்.

அப்போது உடன் சென்றிருந்த அதிகாரிகள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்க ளையும் கையு மெய்யுமாகப் பிடித்தாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோமவீர லொக்குகே குறிப்பிட்டார். கைதான இரு பொலிஸ் அதிகாரிகளும் மிரிஹான பொலிஸ் நிலையத் தைச் சேர்ந்தவர்களென்றும் அவர் கூறினார்.

சந்திராயன்- இஸ்ரோ தகவல் தொடர்பு துண்டிப்பு

29-chandrayaan.jpgஇந்தியா வின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திராயன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திராயனுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திராயன். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திராயன். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும் இது என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் சந்திராயனின் பயணத்தால் பெருமிதம் கொண்டிருந்தனர். நிலவை வலம் வந்து கொண்டிருந்த சந்திராயன் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. சந்திராயன் விண்கலம் என்ன ஆனது என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் சந்திராயன் ஏற்கனவே தனது பணிகளை நிறைவேற்றி விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவை அடைவது மற்றும் நிலவு குறித்த புகைப்படங்களை அனுப்புவது ஆகிய முக்கியப் பணிகளை சந்திராயன் ஏற்கனவே முடித்து விட்டதாக இஸ்ரோ கூறுகிறது.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வையும் சந்திராயன் மேற்கொண்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சந்திராயன் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சூடு ஆகிய பிரச்சினைகளைச் சந்தித்தது. இந் நிலையில் தற்போது சந்திராயனுக்கும், இந்தியாவுக்குமான ததகவல் நின்று போய் விட்டது. விண்வெளியில் 312 நாட்களை முடித்துள்ளது சந்திராயன். நிலவைச் சுற்றிலும் மொத்தம் 3,400 முறை வலம் வந்துள்ளது.

கிரிக்கெட் உலக கிண்ண பிரச்னைக்கு தீர்வு – ஐ.சி.சி. – பாகிஸ்தான் சமரசம்

icc_dd.jpgபாகிஸ் தானில் அடுத்த உலகக் கிண்ண கிரிக்கடெ; போட்டிகள் சிலவற்றை நடத்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டமை தொடர்பான பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் பாகிஸ்தானுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவுள்ளதோடு ஐ.சி.சி. க்கெதிரான சட்டபூர்வ நடவடிக்கையை கைவிட பாகிஸ்தான் தீர்மாணித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்; 2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கடெ; தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ளது. இதில், பாகிஸ்தானில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாட அவுஸ்திரேலியாää நியூசிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான அணிகள் மறுத்தன. இந்தச் சுழலில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, பிரச்னை பெரிதானது.

வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பாகிஸ்தானில் 2011ல் உலக கோப்பை போட்டிகளை நடத்த ஐ.சி.சி,  உரிமை மறுத்தது. இங்கு நடக்க இருந்த 14 போட்டிகள் இந்தியா,  இலங்கை,  வங்கதேசத்தில் நடக்கும் என அறிவித்தது. தவிர உலக கோப்பை தலைமையகத்தை லாகூரில் இருந்து மும்பைக்கு மாற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுத்தது. லாகூர் கோர்ட்டில் ஐ.சி.சி.,  மீது வழக்கு தொடுத்தது. பின்னர் பிரச்னைக்கு கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முடிவு செய்தது.

இது தொடர்பாக துபாயில் நேற்று ஐ.சி.சி,  தலைவர் டேவிட் மோர்கன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி.) தலைவர் இஜாஸ் பட் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.  இதன்படி போட்டியை நடத்துவதற்கான உரிமை தொகை சுமார் ரூ. 50 கோடி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். தவிர பாகிஸ்தான் மண்ணில் போட்டியை நடத்தாததால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட போதுமான தொகையை அளிக்க ஐ.சி.சி. முன்வந்தது. இதை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான், ஐ.சி.சி. மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற் சம்மதம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்ததில் ஐ.சி.சி. மற்றும் பி.சி.பி. அதிகாரிகள் கைகெயழுத்திடுகின்றனர். இதன் மூலம் உலக கிண்ண தொடரை நடத்துவதில் இருந்த சிக்கல் முழுமையாக தீர்ந்துள்ளது. 

கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படை உலகில் சக்திவாய்ந்தது – கோத்தாபய

29-sayura00.jpgதாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து வெற்றி கொண்டதைப் போன்று இலங்கையின் கடற்பரப்பை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல்வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை செயலிழக்கச் செய்து கடல் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். படை நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் சகல செயற்பாடுகளுக்கும் விசேட பங்களிப்புக்களை வழங்கிய ஜி623 என்ற தாக்குதல் கப்பல் ‘சயுரல’ என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் நேற்று உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தலைமையில் நேற்றுக் காலை திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கடற்புலிகளையும் அதன் தலைவர்களையும் கடற் படையினர் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை பயன்படுத்தி தாக்கியழித்த பெருமை கடற்படையைச் சாரும்.

பலமான வளங்களையும் நவீன வசதிகளையும் கொண்ட நாடுகள் இலங்கை கடற் படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருப்பது இலங்கை கடற்படையின் பலம் மேலும் உறுதியாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவினால் வழங்கப்பட்ட 74.1 மீற்றர் நீளமும், 11.4 மீற்றர் அகலமும் கொண்ட ஜி623 கப்பல் வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் ஆழ் கடல் ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தக் கப்பலை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சயுரல என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பிரகடனத்தை வழங்கியுள்ளார். கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சுமித் ஆனந்த வீரசிங்கவிடம் பாதுகாப்புச் செயலாளரினால் பிரகடனம் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன.கப்பலைச் சென்று பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் அங்கு வழங்கப்பட்ட மரி யாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.படை நடவடிக்கையின் போது ஈடுபடுத் தப்பட்ட சகல தாக்குதல் படகுகளும் கப்பல்களும் அணிவகுத்து சென்றன. அதனைத் தொடர்ந்து சயுரல கப்பல் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது.

வெற்றியை நோக்கி இலங்கை அணி

srilanka0000.jpgகொழும் பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இன்று 157/2 என்று துவங்கிய இலங்கை அணியில் சங்கக்காராவும்,  ஜெயவர்தனேயும் மேலும் 105 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஓட்ட எண்ணிக்கை 262ஆக உயர்ந்தபோது இலங்கை கேப்டன் சங்கக்காரா 109 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக முதல் இன்னிங்ஸில் சதம் எடுத்த சமரவீரா 25 ஓட்டங்கள் எடுத்து வெட்டோரி பந்தில் ஆட்டமிழந்தார். 96 ஓட்டங்கள் எடுத்திருந்த ஜெயவர்தனே,  ஓ’பிரையன் பந்தில் ஆட்டமிழந்தபோது சங்கக்காரா இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். நியூஸீலாந்து அணியில் வெட்டோரி, படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

இன்றைய தினம் நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 6.
விக்கட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது.  நாளை ஆட்டத்தின் 5-வது நாள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார். – சிவாஜிலிங்கம்

29-sivajilingam.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.

இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.

பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை  அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.

நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.

மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல்  நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

நடிகர் விஜய் காங்கிரசில் இணையக் கூடாது : கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிக்கை

rahul_vijay.jpgநடிகர் விஜய் காங்கிரசில் இணையக்கூடாது. அவ்வாறு அவர் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.” இவ்வாறு கனடா, டொரன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,

“தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன.  இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் – அப்படியொரு முடிவு எடுத்தால் – அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் – திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் இலங்கையில் வரலாறு காண முடியாத போர் அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது.

இம்மாதம் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர்இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச துரோகம் என்றே நாம் கருதுகிறோம். எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் நாம் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.