லொறிச் சாரதி ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையுமெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர்.
நுகேகொடை – தெல்கந்தை பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகளையே இவ்வாறு கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோமவீர லொக்குகே தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை 4.45 அளவில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை 27ஆந் திகதி மணல் ஏற்றிக்கொண்டு நுகேகொடை – தெல்கந்தையைக் கடந்து சென்ற லொறியைச் சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதியிடம் தேவையான ஆவணங்கள் இருந்தும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதிருக்க இரண்டாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளனர். இதற்கு உடன்பட்ட சாரதி, அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடமே விட்டுவிட்டு நாளை (நேற்று முன் தினம்) வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் சாரதி முறையிட்டிருக்கின்றார்.
அவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4.45 அளவில் குறித்த காவலரணுக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு பொலிஸார் கோரிய பணத்தில் ஆயிரம் ரூபாவை சாரதி கொடுத்துள்ளார்.
அப்போது உடன் சென்றிருந்த அதிகாரிகள் இரு பொலிஸ் உத்தியோகத்தர்க ளையும் கையு மெய்யுமாகப் பிடித்தாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சோமவீர லொக்குகே குறிப்பிட்டார். கைதான இரு பொலிஸ் அதிகாரிகளும் மிரிஹான பொலிஸ் நிலையத் தைச் சேர்ந்தவர்களென்றும் அவர் கூறினார்.