2009

2009

ஐ.நா. கூட்டத் தொடர் நாளை ஆரம்பம் – பிரதமர் ரட்னசிறி சனியன்று உரை

1509sri-lankan-prime-minister.jpgஐ. நா. பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் நாளை நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது. இதில் இலங்கையின் சார்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு கலந்துகொள்ளும்.

பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 26ம் திகதி பொதுச் சபையில் உரையாற்றுவார். சர்வதேச சமாதானம்,  பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்துவதும் எனும் தலைப்பில் பிரதமர் உரையாற்றுவார்.

இந்த விஜயத்தின்போது ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசவுள்ள பிரதமர்,  நியூயோர்க்கில் ஆசிய சமூகத்தினரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இலங்கை முன் உள்ள சவால்கள்: புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின் சமாதானத்தை உறுதிப்படுத்துதல் எனும் தலைப்பில் ஆசிய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார். பிரதமருடன் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தின்போது கலந்துகொள்கின்றனர்

விடுதலை கோரி நளினி சாகும் வரை உண்ணாவிரதம்

nalini-111.jpgதன்னை விடுதலை செய்யக் கோரியும், தனது விடுதலை கோரிக்கையைப் பரிசீலிக்கும் சிறை ஆலோசனைக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும் நளினி வேலூர் மகளிர் சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் முருகன் தூக்குத் தண்டனை பெற்று ஆடவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கருணை மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய முறையில் பரிசீலிக்குமாறும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைக்குமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிய ஆலோசனைக் குழுவை அரசு அமைத்தது. ஆனால் அந்தக் குழுவை மாற்றியமைக்க வேண்டும். தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி சிறைக்குள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா

21-somdev.jpgடேவிஸ் கோப்பைடென்னிஸ்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் உலக பிரிவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ்  தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று நான்காவது ஆட்டமான மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.

இதில் முதல் இரண்டு செட்களையும் 3-6, 6-7 என பறிகொடுத்த சோம்தேவ் விடாமல் போராடி அடுத்த மூன்று செட்களையும் 7-6, 6-2, 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 6-7, 7-6, 6-2, 6-4 என்ற செட்களில் வென்றார். கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது. தோல்வியுறும் நிலைக்குப் போய்,  வீறு கொண்டு அடுத்தடுத்து 3 செட்களைப் பறித்த சோம்தேவின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

மற்றொரு போட்டியில் யூகி பாம்பிரி 3-6, 6-3, 6-3 என தென் ஆப்ரிக்காவின் இயான் வான் டெர் மெர்வியை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4-1 என்ற போட்டி கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா  நுழைந்துள்ளது.

ஐ.நா.சபையின் பிரதிநிதி கெலின் நாளை இலங்கை விஜயம்

210909walter-kalin.jpgஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம் நிலைமைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
வவுனியா மெனிக்பாம் உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை அவர் நேரில் பார்வையிடுவார் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது வோல்டர் கெலின் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா தெற்கு 1000 குடும்பங்களைச் சேர்ந்த 5320 பேர் – சொந்த இடங்களில் மீளக் குடியமர்வு – 48 சிங்கள குடும்பங்களும் குடியேற்றம்

210909va-re-set.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5320 பேர் நேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர்.

தமது சொந்த இடங்களில் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டவர்களுள் 489 பேர் வவுனியா வடக்கு பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த சிங்களவர் ஆவர்.  நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 1000 குடும்பங்களும் நேற்று மீள்குடியேற்றத்துக்காக வவுனியா தெற்கு பிரதேச செயலக பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ எம். பி. தலைமையில் நடைபெற்றது. 15 பஸ் வண்டிகளில் இவர்கள் நேற்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வவுனியா சைவப் பிரகாச வித்தியாலய மைதானத்திலிருந்து பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. இவர்களுக்கான உலர் உணவுகளை பசில் ராஜபக்ஷ எம். பி. வழங்கினார்.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் பிரம்மமடு, அருகம்புல்வெளி, பாவற்குளம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த மேற்படி 489 சிங்களவர்களே மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம்

ramadan-mosque.jpgஐக்கியம், சமாதானம், சகிப்புத்தன்மை நட்புறவு என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் நாட்டின் சமாதான முன்னேற்றங்களுக்கான பங்களிப்பையும் நாம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் இன்று பேருவகையுடன் கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு மாதமான ரமழான் மாதத்தின் மிக முக்கியமான மார்க்கக் கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாட்டங்களில் உலகெங்கிலும் வாழும் தமது ஈமானிய சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றார்கள்.  புனித அல்குர்ஆனினதும் இறைத் தூதர் முஹம் மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப ஒரு உயர்ந்த மார்க்கக் கடமையை நிறைவேற்றி முடித்ததன் பின்னர் மகிழ்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் உள்ளது.

இலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிங்களவர்கள், தமிழர்கள், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்த நாட்டை தாய்நாடகக் கொண்டிருக்கும் ஏனைய எல்லா சமூகத்தவர் களுடனும் நட்புறவுடன் வாழ்ந்து வந்துள்ளதோடு, நாட்டின் முன்னேற்றதிற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

கடந்த வருட ஈதுல் பித்ர் கொண்டாட்டத்தின்போது நாம் கிழக்கு மாகாணத்தையும் அங்கு வாழும் பெருந் தொகையான முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்திருந்தோம். இன்று முழு நாடுமே பயங்கரவாத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு வட மாகாணத்தில் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீளச்சென்று சுதந்திரமாக தமது சமய பாரம்பரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு முகாமில் 40 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

தங்கள் மீதான வழக்குகளை விரைவாக முடித்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தொடங்கிய 40 அகதிகளின் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது. இவர்களில் பலரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக 20 அகதிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தங்கள் மீதான வழக்குகளை முடித்து, விடுதலை செய்து பிற முகாம்களில் தங்கியிருக்கம் தங்களது குடும்பத்தினருடன் சேர அனுமதிக்க வேண்டும் என செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள் கோரி வருகின்றனர். சமீபத்திலும் இதுபோன்ற போராட்டம் நடந்தது. இதையடுத்து சிலரை அரசு விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மினி உலககோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று ஆரம்பம்

110909-india.jpgமினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 6 வது சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடப்பதாக இருந்தது.

ஆனால் அங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டு அது இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ந் திகதி வரை நடைபெறுகிறது.

முந்தைய போட்டிகளில் குட்டி அணிகளும் பங்கேற்றன.  ஆனால் தற்போது முதல் முறையாக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்குவதால் ஒவ்வொரு ஆட்டங்களும் விருந்து படைப்பதாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ் தான், நடப்பு சம்பியன் அஸ்திரேலியா, மேற் கிந்திய ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும்.

தற்போதைய நிலவரப் படி ரேங்கில் முதல் 3 இடங்களை வகிக்கும் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுக்கே கோப்பையை வெல்வதில் முன்னணியில் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் யாருமே எதிர்பார்க்காத பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தது போல் மீண்டும் அவை இங்கு அதிசயம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சமீபத்திய தொடர்களில் அடிப்பட்ட நியூசிலாந்து இதுவரை எந்த ஐ.சி.சி. கோப்பையும் வெல்லாத இங்கிலாந்து ஆகிய அணி கள் ஏதேனும் மாயா ஜாலம் காட்டுமா என்பதை பார்க்கலாம். ஒப்பந்த பிரச்சினை தீர்வு காணப்படாததால் கெய்ல், சர் வான், சந்தர்பால், பிரா வோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாம் 2ம் தர அணியாக களம் இறங்கி உள்ள மேற்கிந்திய அணி யின் நிலைமை மட்டுமே இங்கு பரிதாபமாக உள்ளது. ஆனால் இந்த அணி ஏதேனும் வெற்றி பெற்றாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமாக உள்ளது.  இதே போல் இந்தியா- அவுஸ்திரேலியா மோதலிலும் அனல் பறக்கும்.

ஒரு நாள் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பியன்ஸ் போட்டி ஐ.சி.சி. மிகவும் முக்கியமான போட்டியாக கருதுகிறது. இந்தப் போட்டியின் வெற்றி, அதற்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவையே ஒரு நாள் போட்டியின் எதிர்கால தலைவிதியாக அமையும்.

TRO தலைவர் ரெஜிக்கு UK இல் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் : த ஜெயபாலன்

Reggie_TROபுலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெஜியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு கேட்டுள்ளதாக உள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது. சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் ரெஜி இங்கு அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். ஆனால் அவருடைய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்குப் பிறம்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” கவுன்சிலர் போல்சத்தியநேசன் இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்வேயில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ரெஜி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தேசம்நெற்க்கு செய்திகள் கிடைத்துள்ளது. நோர்வெயின் ஆளும்கட்சியில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவருக்கு ஊடாக நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹைமிடம் இந்த தஞ்சக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பாக இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக ரெஜி செயற்பட்டு வந்தார்.

இச்செய்தி தொடர்பாக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதும் தனிப்பட்ட ஒருவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.

Raj_Rajaratnamஇதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். சுனாமியின் போது இலங்கையில் தங்கியிருந்து உயிர் தப்பிய ராஜ் ராஜரட்ணம் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கு 5 மில்லியன் யுஎஸ் டொலர்களை வழங்கி இருந்தார். உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் ராஜ் ராஜரடணம் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவரது மேற்பார்வையில் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட போதும் பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க பிரித்தானியா மறுத்திருந்தது. குறிப்பாக கேணல் கிட்டுவினுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு தாங்கள் கைது செய்து திருப்பி அனுப்புவதற்கு முன்னர் கேணல் கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது. அவ்வாறு கிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை சென்றபோதே சர்வதேச எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்ய முற்படுகையில் தங்களது கப்பலைத் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரித்தானிய உள்துறை அமைச்சு கேணல் கிட்டு தொடர்பாக எடுத்த அதே முடிவையே தற்போது ரெஜி தொடர்பாகவும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.

மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )

தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

”பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். ” எனத் தெரிவிக்கிறார் சட்ட வல்லுனர் அருண் கனநாதன். இவர் இவ்வாண்டு மார்ச்சில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

\Paul_Sathyanesan_Cllrஇது தொடர்பாக தேசம்நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல்கொடுத்து வரும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”ரீஆர்ஓ தலைவர் ரெஜி க்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டது பற்றியோ அல்லது அவரை வெளியேறும்படி கேட்டது பற்றியோ எனக்கு உறுதியாகத் தெரியவரவில்லை” என்றார். ஆனால் ”ரெஜி போன்ற முக்கிய புள்ளிகள் இலங்கைக்கு அனுப்பப்ட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஒன்று அங்கு உள்ளது. மேலும் ரெஜியை திருப்பி அனுப்பும் முடிவு ஏனைய அரசில் தஞ்ச விண்ணப்பதாரிகளையும் திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்” என்றும் கவுன்சிலர் போல் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

”பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சத்தை சட்டவியலின் நுணுக்கத்தில் பார்க்கின்றதேயல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை கையாள்வதில்லை” எனவும் ஆட்சியில் உள்ள தனது கட்சியின் அரசியல் தஞ்சம் தொடர்பான கொள்கையை விமர்சித்தார்.

புரிந்துணர்வு, நட்பு, சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்போம்!- பிரதமர் ரட்னசிறி பெருநாள் வாழ்த்து

210909ramzan.jpgசமூகங் களுக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, நட்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு இந்தப் புனித மிகு நோன்புப் பெருநாளில் அனைவரும் கைகோர்ப்போமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் போன்றே உலகவாழ் முஸ்லிம்கள் ஒருமாத காலம் பகல் நேரங்களில் உண்ணாது குடிக்காது உபவாசம் இருந்ததன் பின்னர் கொண்டாடுகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 இஸ்லாம் என்பது சமாதானத்தைப் பிரதிபலிக்கின்றது. குரோதம், துவேசம் என்பவற்றை அகற்றி ஒரு பொதுவான நோக்கத்தின்பால் ஒன்றுபடுவது முக்கியமானதென இஸ்லாத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த வழியில் சென்று ஒருமாத காலமாக பகல் வேளையில் பசித்திருந்து அனைத்து இனங்களிற்கும் கருணை, இரக்கம் என்பன காட்டி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் இந்த காலத்தை செலவிடுகின்றமை நாம் காணக்கூடிய முக்கிய அம்சமாகும்.

முப்பது ஆண்டுகளின் பின்னர் நாட்டு மக்கள் அச்சம், பயமின்றி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு இடத்திலும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளமையால் இம்முறை நோன்புப் பெருநாளை நாடு முழுவதிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம் மக்கள் மனம் விரும்பியவாறு கொண்டாடுவதற்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

‘ஈதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள்) தாற்பரியங்களின் பிரகாரம் சமூகத்திலே எந்தவொரு பிரிவினரையும் தனிமைப்படுத்தாது சகல சமூகங்களுக்கிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, நடப்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்வோமென புனிதமிகு நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.