புரிந்துணர்வு, நட்பு, சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்போம்!- பிரதமர் ரட்னசிறி பெருநாள் வாழ்த்து

210909ramzan.jpgசமூகங் களுக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, நட்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு இந்தப் புனித மிகு நோன்புப் பெருநாளில் அனைவரும் கைகோர்ப்போமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் போன்றே உலகவாழ் முஸ்லிம்கள் ஒருமாத காலம் பகல் நேரங்களில் உண்ணாது குடிக்காது உபவாசம் இருந்ததன் பின்னர் கொண்டாடுகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 இஸ்லாம் என்பது சமாதானத்தைப் பிரதிபலிக்கின்றது. குரோதம், துவேசம் என்பவற்றை அகற்றி ஒரு பொதுவான நோக்கத்தின்பால் ஒன்றுபடுவது முக்கியமானதென இஸ்லாத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த வழியில் சென்று ஒருமாத காலமாக பகல் வேளையில் பசித்திருந்து அனைத்து இனங்களிற்கும் கருணை, இரக்கம் என்பன காட்டி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் இந்த காலத்தை செலவிடுகின்றமை நாம் காணக்கூடிய முக்கிய அம்சமாகும்.

முப்பது ஆண்டுகளின் பின்னர் நாட்டு மக்கள் அச்சம், பயமின்றி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு இடத்திலும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளமையால் இம்முறை நோன்புப் பெருநாளை நாடு முழுவதிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம் மக்கள் மனம் விரும்பியவாறு கொண்டாடுவதற்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

‘ஈதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள்) தாற்பரியங்களின் பிரகாரம் சமூகத்திலே எந்தவொரு பிரிவினரையும் தனிமைப்படுத்தாது சகல சமூகங்களுக்கிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, நடப்பு மற்றும் சகோதரத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்வோமென புனிதமிகு நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *