February

February

உக்ரைனில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதும் இராணுவ தாங்கி – வைரலாகும் வீடியோ !

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது இராணுவ தாங்கி ஒன்று ஏறிய வீடியோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இராணுவ தாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷ்யாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் உக்ரைன் நாடாளுமன்றிலிருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த இராணுவ தாங்கி வேகமாக மோதியது. இதில், இராணுவ தாங்கிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக்கொண்டார்.

அதன்பின்னர், சில வினாடிகள் கழித்து இராணுவ தாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இராணுவ தாங்கி ஏறியதில் கார் உருக்குலைந்தபோதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இராணுவ தாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு – அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி வந்த கட்டளை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை தற்போது இல்லை.
இந்நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டிய  நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இனி உக்ரைன் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். தலைநகரை கைப்பற்றுவதற்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டன தீர்மானம் – வீட்டோ மூலம் தோற்கடித்தது ரஷ்யா !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும், ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்துஇ ராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜேர்மனி, நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

ரஷ்ய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் திடீர் விஜயம் – போரை உடனே நிறுத்துமாறு வேண்டுகோள் !

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை கைவிடுமாறு உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. ஆனால் அதை ரஷ்யா ஏற்கவில்லை.
இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோமில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு திடீரென்று நேரில் சென்றார்.
அப்போது அங்கிருந்த தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை தெரிவித்தார். போரை உடனே நிறுத்துமாறு அவர் தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ரஷிய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் நேரில் சென்றதை வாத்திகான் அதிகாரிகள் உறுதி செய்தனர். போப் ஆண்டவர் சிறிய வெள்ளை காரில் ரஷ்ய தூதரகத்துக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவரின் இந்த போர் நிறுத்த முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யா செல்லும் சரக்குக் கப்பலை இடைமறித்த பிரான்ஸ் கடற்படை !

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும் சரக்குக் கப்பலை, ஆங்கில கால்வாய் வழித்தடத்தில் பிரான்ஸ் கடற்படை இடைமறித்துள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகள், புதிய ஐரோப்பிய ஒன்றியத் தடைகளுக்கு இணங்க கப்பல் இடைமறிக்கப்பட்டது என்றும், அது வடக்கு துறைமுகமான பவுலோன்-சுர்-மெர்க்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடான போர் – 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு !

 

உக்ரைன் மீது ரஷியா இன்று 2-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீயூவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக துணை மந்திரி ஹன்னா மால்யார் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்.” – ரஷ்யா திடீர் அறிவிப்பு !

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறது. போர் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்னும் தொடுக்கப்படவில்லை. உக்ரைனில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் உலக நாடுகள், இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்டவைகளை உறுப்பு நாடாக கொண்டுள்ள நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவை எதிர்த்து நேட்டோ நாடுகள் தாக்குதல் நடத்துமா.? என்ற கேள்வி சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர்.

இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவியதை அடுத்து தலைநகர் கீவுக்குள்ளும் படைகள் நுழையும் நிலையில் உள்ளன. இதனையடுத்து செய்வதறியாது கையைப் பிசையும் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைநகர் கீவின் மேல் வான் தாக்குதல் சைரன்கள் அலறியவண்ணம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டு கட்டிடம் ஒன்றினுள் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் சுற்றுப்புறப்பகுதியில் ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன, அடுத்து தலைநகருக்குள்ளும் ஊடுருவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர். 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன.

அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பதாக புதின் கருதும் உக்ரைனைக் கைப்பற்றி அரசாங்கத்தை கவிழ்ப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்தது ரஷ்யா – நூற்றுக்கும் அதிகமானோர் பலி !

ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது.
ரஷிய போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரஷியாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் ராணுவம் தரப்பில் 40 பேர், பொதுமக்களில் 10 பேர் இறந்ததாகவும், ரஷிய கிளர்ச்சி படையைச்சேர்ந்த 50 பேரை உக்ரைன் ராணுவம் சுட்டுக்கொன்றதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.
இடைவிடாமல் வான் தாக்குதலுக்குப் பிறகு, ரஷிய படைகள் தலைநகர் கீவில் நுழைந்தன. கீவ் நகரின் வடக்கு பகுதியில் ரஷிய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி செல்கின்றன. உக்ரைன் நாட்டின் போர் விமானத்தையும் ரஷிய படை சுட்டுவீழ்த்தியதாகவும் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனின் உளவுத்துறை தலைமையகத்தை தகர்த்தது ரஷ்யா !

உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய படை பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷிய படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு அசோவ் கடற்பகுதியில் தங்களது 2 சரக்கு கப்பல்களை ஏவுகணை மூலம் உக்ரைன் தாக்கியதாக ரஷியா புகார் தெரிவித்துள்ளது.

 

இதே நேரம் ரஷ்யாவின் பல அமைப்புகள் பொருளாதார தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் சமாதானம் பேச முயற்சி செய்தனர்.
அமெரிக்கா போர் தொடுக்கமாட்டோம் என ரஷியா உறுதி அளித்தால் பேச்சுக்கு தயார் என்றது. ரஷியா நேட்டோ உறுப்பினராக உக்ரைனை சேர்க்க மாட்டோம் என்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என பதிலடி கொடுத்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
நேற்று இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்குள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள புதினுக்கு ரஷியா நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இதனால் இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுக்க புதின் உத்தரவிட, விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன. இன்று போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி7 நாடுகள் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தடை விதிக்கும் என ஜெர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

போரை ஆரம்பித்தது ரஷ்யா – ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என அறிவித்துள்ள  உக்ரைன் ஜனாதிபதி !

உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்.  ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, லிதுவேனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கிடானஸ் நௌசேடா தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடைகள் ரஷ்யா மட்டுமல்லாமல்  அந்த நாடு 30,000 துருப்புகளைக் குவித்துள்ள பெலாரஸ் மீதும் விதிக்க வேண்டும் என்றும் நவுசேடா கூறினார். அந்த நாட்டிலிருந்து தான் (பெலாரஸ்) அத்துமீறல் நடத்தப்படுகிறது என்றும் நவுசேடா குறிப்பிட்டார்.