02

02

“ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வன்முறையைத் தான் இந்த உலகம் கட்டவிழ்க்கும்.?” – போப் பிரான்சிஸ்

ஒரு பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம் என போப் பிரான்சிஸ் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று ரோம் நகரில் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய அவ்,

தாய் தான் நமக்கு உயிர் கொடுக்கிறார். பெண் தான் இந்த உலகை இணைத்து வைத்திருக்கிறார். ஆகையால் நாம் அனைவரும் தாய்மார்களை மேம்படுத்தவும், பெண்களை பாதுகாக்கவும் இணைந்து செயல்படுவோம். ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வன்முறையைத் தான் இந்த உலகம் கட்டவிழ்க்கும். ஒரு பெண்ணைக் காயப்படுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம். இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்.

கடந்த மாதம் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், பெண்கள் மீது வன்முறையைக் கடத்துபவர்கள் சாத்தான் போன்றவர்கள் என்றார்.

கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலந்தொட்டு போப் பிரான்சிஸ் குடும்ப வன்முறை குறித்துப் பலமுறை பேசியிருக்கிறார். ஏனெனில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் !

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.

2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பதவி விலகும் விவசாய அமைச்சின் செயலாளர்கள் – காரணம் என்ன..?

விவசாய அமைச்சில் திறமையான, நேர்மையான, சிறந்த அதிகாரிகள் இருந்த போதிலும், ஆலோசகர்கள் என்ற போர்வையில் சில நபர்கள் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சின் புதிய செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் திறமையான செயலாளர்கள் பதவி விலகுவதற்கான முக்கிய காரணம் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

திறமையான அரச ஊழியரான பேராசிரியர் உதித் ஜயசிங்க, அரசாங்கத்தின் பசுமை விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்வமாக இருந்ததுடன், வெளிப்புற தாக்கங்களினால் அவரால் முறையாக செயற்பட இயலாமல் போனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு 28 வயது நபர் பலி – கிளிநொச்சியில் சம்பவம் !

பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது.

குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“உங்களது விடுதலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வேன்..” – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி !

இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை புத்தாண்டு தினமான இன்று சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் கடல் வளத்தினையும் எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கின்ற இழுவை வலைத் தொழில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

இதனை இந்தியக் கடற்றொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். கடல் வளங்கள் அழிக்கப்படுவதனால் இந்தியக் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் உண்மைகள் மறைக்கப்பட்டு தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களும் தமது வாழ்வாதாரத்திற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதை நான் அறிவேன்.

எனவேதான், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதுடில்லி சென்ற போது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்ட வரைபு ஒன்றினை கையளித்திருந்தேன்.

அதன் அடிப்படையில் பரிசீலிக்க இந்தியத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். எனினும் கொரோனா உட்பட பல்வேறு காரணங்களினால் அதனை இன்னும் தொடர முடியவில்லை. எது எப்படியோ, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டு்ள்ள நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும். உங்களுடைய கருத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் முன்வைத்து உங்களது விடுதலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வேன்.

எனினும், உங்களின் முதலாளிமாருக்கு சொந்தமான படகுகள் அரசுடமையாக்கப்படும். அதற்கான சட்டங்கள் கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் விடுதலையாகி நாட்டிற்கு திரும்பியதும் இழுவைமடித் வலைத் தொழிலை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சுமார் 56 இந்தியக் கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அரசுடன் இருப்பதனால் தான் எமது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எழும் போது தடுக்க முடிகிறது.” – எஸ்.வியாழேந்திரன்

“எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை.மேலும் இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிகிறது.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்கீழ் வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 59 குடும்பங்களுக்கு ஆடுகளை வழங்குவதற்கு 18 இலட்சம் ரூபாவும் 12 குடும்பங்களுக்கான வீடுகள் திருத்துவதற்காக 26 இலட்சம் ரூபாவும் மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் 18 குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 12 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் மிகவும் வறிய நிலையில் உள்ள 18 குடும்பங்கள் மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக 04 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நிதிகள் மற்றும் ஆடுகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேசன், அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் நிரோஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர்,

கடந்த மூன்று தசாப்தத்துக்கு மேற்பட்ட காலமாக ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதிகள் இருந்தது என்பது மிகவும் அரிதான விடயமாகும். அதனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகமாகவே நாங்கள் இருந்துவந்துள்ளோம். அந்த அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சமூகம் பல வழிகளில் சுரண்டப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இன்று இரவு பகல் பாராமல் தங்களது வேலைநேரக்கடமைக்கு அப்பால் சென்று விடுமுறைகள் என்று பாராமல் எந்தவித இனவாத, மதவாத நோக்கமில்லாமல் உளச்சுத்தியுடன் கடமையாற்றிவரும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளை அரச பயங்கரவாதம் என்று சொல்கின்ற கீழ்தரமான அரசியலை சிலர் மேற்கொள்கின்றனர். அரசியல் அதிகாரம் என்பது இன்று எங்களது கைகளிலும் இருக்கின்றது. அதன் காரணமாகவே இன்று எமது சமூகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்தி வருகின்றோம். ஆளுந்தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான மூன்று விதமான பிரச்சினைகள் உள்ளன. இந்த மூன்று விதமான பிரச்சினைகக்கும் இராஜதந்திரமான அணுகல்களை மேற்கொண்டு தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதே எங்கள் அரசியல் பயணமாகும். இதில் எந்தவித மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லாமல் மிகவும் தெளிவாகயிருக்கின்றோம்.

இன்று பாதுகாப்பு படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுகின்றது. உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அரசாங்கத்துடன் நாங்கள் இருந்து ஜனாதிபதியுடன் பிரதமருடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் பேசி ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை காத்திரபூர்வமாக முன்னெடுத்து படிப்படியாக மேற்கொண்டுவருகின்றோம். மூன்று தசாப்தமாக விடுவிக்கப்படாத கும்புறுமுலை இராணுவமுகாம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. தமிழ் எம்பிக்கள் 16 பேர் முட்டுக்கட்டை கொடுத்து பாதுகாத்த நல்லாட்சிக்காலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதியை பொதுமன்னிப்பில் விடுவிக்கமுடியவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஒரே தடவையில் 16 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிடுவித்தார்.