September

September

இலங்கை மக்களுக்கு பூஸ்டர் டோஸாக பைசர் !

தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு – மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிறார் எம்.ஏ.சுமந்திரன் !

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

May be an image of 1 person and text that says "வழக்கு எண் SCFR 297/2021 இல் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஆனது தமிழ் அரசியல் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட் டுள்ளது, ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எ சுமந்திரன் மற்றும் சட்டத்தரனி கேசவன் சயந்தன் ஆகியோர் கைதிகள் சார்பில் நீதிமன்றில் ஆயர் ஆவார்கள். MASUNTHIRA #JUSTICE_ THE PEOPL"

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி  எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர்

பொது இடங்களில் புகைத்தல் தொடர்பில் கடுமையான சட்டம் விரைவில் !

சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் ஆகிய பல பிரச்சினைகள் குறித்து கடுமையான புதிய கொள்கையின் கீழ் சட்டத்தைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவர் சமாதி ராஜபக்ஷ மற்றும் அதன் பணிப்பாளர் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன் போது புதிய வரிக் கொள்கையை அமுல்படுத்துவதன் மூலம் சிகரெட் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என  சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவுடனான இயற்கை எரிவாயு ஒப்பந்தம் உட்பட நாட்டுக்கு பாதகமான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன்.” – உதய கம்மன்பில !

அமெரிக்காவுடனான இயற்கை எரிவாயு (LNG) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள 2028 ஆம் ஆண்டு வரை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதால் இலங்கையிலுள்ள எரிவாயுவை ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை  ஈர்ப்பதற்கு ஒரு தடையாக அமையும் என்றும் எரிசக்தி அமைச்சில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

New Fortress Energy நிறுவனத்தின் ஊடாக எரிவாயு 2023 ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு விநியோகிக்கப்படும் அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆண்டு வரை மாத்திரம் விநியோகிப்பார்கள். இந்த ஆண்டின் இறுதியில் ஏலம் நடத்தப்பட்டால், நம் நாட்டில் எரிவாயு உற்பத்தி மூன்று ஆண்டுகளில் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 முதல் 2025 வரை எங்களுக்கு எரிவாயு உற்பத்தியைத் தொடங்கலாம்.

2028 வரை அமெரிக்க நிறுவனம் ஒன்று எங்கள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகித்தால் இலங்கையின் எரிவாயுவை ஆராய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஒரு தடையாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது தொடர்பாக நான் அமைச்சரவைக்கு அவதானிப்புகளை வழங்கியுள்ளேன். இது குறித்து இரண்டு அவதானிப்புகள் செய்யப்பட்டன.

இது பற்றி விவாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும், எங்கள் அமைச்சரவைக்கு எங்கள் அமைச்சகத்தில் இதன் தாக்கம் குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு உற்பத்திக்கான ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் எவ்வளவு காலம் நடத்தப்பட்டன என்பது எனக்கு தெரியாது. எனினும் பல சர்வதேச ஒப்பந்தங்கள் அவசர அவசரமாக கையெழுத்திடப்படுகின்றன. நிபந்தனைகளை முன்வைத்து அரசாங்கம் அவற்றை  ஏற்றுக்கொள்கின்றது.

எவ்வாறாயினும் நாட்டுக்கு பாதகமான எந்ததொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன். தற்போதைய நிர்வாகத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு காவலர்களாக செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தினசரி வீணாக்கப்படும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு !

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றது.

சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப் படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது.

இந்த நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதனை விடவும் தடுப்பூசியால் அதிக ஆபத்து ஏற்படும்.” – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

விஞ்ஞான ரீதியாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் தீர்மானங்கள் மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் தொற்று ஏற்படுவதனை விடவும் தடுப்பூசியால் அதிக ஆபத்து ஏற்படும் என மேற்கத்திய நாடுகளில் கருத்து உள்ளது. ஆகவே வெளிநாடுகளும் இன்னமும் சரியான ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இன்னமும் தீர்மானத்திற்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அனைத்து சுகாதார பரிந்துரைகளையும் ஆராய்ந்து பார்த்து சிறுவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொங்கோ குடியரசில் 9 பெண்களை பலாத்காரம் செய்த 21 உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் !

ஆப்பிரிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 2018-ம் ஆண்டு எபோலா நோய் பரவியது. இதை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் சிகிச்சை குழுக்களை அனுப்பி வைத்தது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும், காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சிகிச்சை அளித்தனர். இவ்வாறு 100-க்கும் மேலான பணியாளர்கள் ஆங்காங்கே சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 2020-ம் ஆண்டு வரை இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதுபற்றிய தகவல் வந்தததையடுத்து தாமஸ் ராய்டர்ஸ் அறக்கட்டளை மற்றும் இன்னொரு அமைப்பு இணைந்து சுதந்திர விசாரணை மேற்கொண்டன.

அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பலாத்காரம் செய்தது உறுதியானது. 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.

இந்த செயல்களில் ஈடுபட்டதாக 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உலக சுகாதார நிறுவனத்தால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காங்கோ அரசும் தெரிவித்துள்ளது.

நானே கடைசி இறைத் தூதர் எனக்கூறிய பள்ளித் தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த பள்ளித் தலைமையாசிரியர் (பெண்) ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் லூகூர் நகரில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் தன்வீர். இவர் முகமது நபிகள் கடைசி இறைத் தூதர் இல்லை என்றும், நானே கடைசி இறைத் தூதர் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மதகுரு ஒருவர் 2003ஆம் ஆண்டு லாகூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் தன்வீர் மீது புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தன்வீரின் வழக்கறிஞர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தொடர்ந்து வாதாடி வந்தார். எனினும் அரசுத் தரப்பு வழக்கறிஞர், தன்வீரின் மனநிலை நலமாக இருப்பதாக சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

இதன் காரணமாக தற்போது மதநிந்தனை வழக்கில் தன்வீருக்குத் தூக்கு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மன்சூர் அகமத் தீர்ப்பு வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை மதநிந்தனை  தொடர்பான மத விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக மத விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன. 1987ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1,800க்கும் அதிகமானவர்கள் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனால், தனிப்பட்ட விரோதங்களுக்குப் பழிவாங்குவதற்காக மத நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா !

ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார்.

2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார்.

முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது.

“சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்யப்போவதில்லை.” – மஹிந்தானந்த அளுத்கமகே

சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்யப்போவதில்லை என, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரும்போக நெல் உற்பத்திக்காக, முன்னதாக சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக சில பசளை மாதிரிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த பசளை மாதிரிகள் தொடர்பில் விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், குறித்த பசளை இலங்கையின் மண்வளத்துக்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி நிறுதப்பட்டால், பெரும்போக நெல்லுற்பத்திக்காக பசளையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, விவசாயத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.