12

12

தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயார் : ரணில்

unp_logo_.jpgஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தனது தலைமைத்துவம் குறித்து கவலையடைந்தால் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்தியாவுக்கு திங்கட்கிழமை பயணமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னராக இதனைக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ரணில் கூறியிருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன. “உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிடின் தான் பதவி விலக விரும்புவதாக சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரிடம் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஆயினும் இதுவரை எவரும் அதுதொடர்பாக பதில் அளிக்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

20 தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்துள்ள ஐ.தே.கட்சி தற்போது தலைமைத்துவம் தொடர்பாக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க பதவியைத் துறந்து புதிய தலைவருக்கு வழிவிட வேண்டுமென்று ஐ.தே.க.வின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர உட்பட ஐ.தே.க. உறுப்பினர்கள் கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகளை முன்வைத்தள்ளனர்.

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் குழுக்கூட்டம் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொகுதி அமைப்பாளர்களின் குழுக் கூட்டம் இந்தவார இறுதியில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவின் செயற்பாட்டுக்காகவே இக்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புக் குழு ஜூலையில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளதால் அக்குழுவின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் வகையிலேயே பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்த முடிவினைக் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தொகுதி அமைப்பாளர்களுக்குக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருக்கிறார்.

ஆயுதங்களுடன் இருவர் கைது

ஆயுதங்களுடன் பயணம் செய்த இருவர் ஆனமடுவ பகுதியில் வைத்து பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.  இவர்கள் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எம். 16 ரக தன்னியக்க துப்பாக்கியொன்றும் 30 ரவைகளும் மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குருணாகல்- புத்தளம் வீதியினூடாகப் பயணித்த வேன் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோதே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களுடன் குறித்த வேனும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் 5 பிரதேசங்களில் 1838 பேர் நேற்று மீள்குடியேற்றம் – முல்லையில் இன்று 479 பேர் குடியேற்றம்

srilanka-war.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 1838 பேர் நேற்று (11) கிளிநொச்சி மாவட்டத்தின் 5 பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் கூறியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இன்று (12) 155 குடும்பங்களைச் சேர்ந்த 479 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமல்டா சுகுமார் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னேரிக்குளம் அக்கராயன், கந்தபுரம், கண்ணகிபுரம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளிலே நேற்று 1838 பேர் மீள் குடியேற்றப்பட்டனர். இவர்கள் செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலிருந்து விசேட பஸ்கள் மூலம் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இன்று (12) முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டிச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 கிராமசேவகர் பிரிவுகளில 479 பேர் மீள்குடியேற்றப்படுகின்றனர்.

இதேவேளை சுமார் 35 ஆயிரம் பேரே தற்பொழுது வவுனியா நிவாரணக் கிராமங்களில் மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியது. சுமார் 30 ஆயிரம் பேர் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். இவர்களும் துரிதமாக மீள்குடியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளருடன் நட்புறவைப் பேணி பணியாற்றுவதே எனது நோக்கம் – அமைச்சர் கெஹலிய

keheliya-rambukwella.jpgஓர் அமைச்சராக அல்லாமல் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதே எனது நோக்கமாகுமென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டை வெற்றியடையச் செய்யும் பயணத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று (11) விஜயம் செய்திருந்த அமைச்சர் ரம்புக்வெல்ல, நிறுவனத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார பதவியேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சருடன் தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகலவும் கலந்து கொண்டார்.

நிறுவனத் தலைவர் பத்மகுமார, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘அமைச்சர், தலைவர் என்ற அடிப்படையில் அல்லாமல் சுமுகமான உறவைப் பேணி செயற்படவே விரும்புகிறேன். பெரிய அளவில் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட சுமுகமாகத் தீர்த்துவிடலாம். திறந்த மனசுடன் வெளிப்படையாகப் பணியாற்றுவதே எனது நோக்கம். நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பாரிய பொறுப்பு நமக்குண்டு. அதனை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும். எவர் எதைச் செய்தாலும் இறுதியில் அனைத்துப் பொறுப்பும் அமைச்சரின் மீதுதான் சுமத்தப்படும்.

எனவே, புரிந்துணர்வுடன் செயற்பட்டால் நாம் நீண்ட தூரம் பயணிக்க முடியும். பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளராக இருந்தபோது நான் அதனைத் தொழிலாகவோ, கடமையாகவோ அன்றி எனக்குச் சரியெனப்பட்டதைச் செய்தேன். பயங்கரவாதம் நாட்டுக்குத் தீங்கானது என்பதை உணர்ந்து செயலாற்றினேன். அதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானேன். ஆனால் ஈற்றில் நான் சொன்னதுதான் உண்மையானது” என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபையில் ஐ.தே.க பிளவுபடும் நிலை – தலைமை மீது உறுப்பினர்கள் சீற்றம்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் புதிய தலையிடி உருவாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக கே. கே. பியதாசவை ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கு எதிராக மத்திய மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர்களை கொழும்பு சிறிகொத்தா தலைமையகத்திற்கு வருமாறு அழைத்துவிட்டு அவர் வெளிநாடு பயணமாகி விட்டதால், கட்சி அங்கத்தவர்கள் மத்தியிலும், மாகாண சபை உறுப்பினர்களுக் கிடையிலும் கடும் அதிருப்தியான நிலை உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான ஒருவரை எவ்வாறு தலைவராக ஏற்றுக் கொள்வது என்ற நிலை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும், பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் இப்பிரச்சினையை சமரசப்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. பியதாசவை தலைவராக நியமித்ததாகவும் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு இவர்கள் கோரியதோடு தலைவரின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இழுபறி நிலை மத்திய மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என்றும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஐ. தே. க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபை உறுப்பினர் கே. கே. பியதாசவை நியமித்த போதிலும் அதனை மாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்தே இந்த இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் மத்திய மாகாண சபைக்கு எதிர்க்கட்சி தலை வரை மாகாண சபையின் தலைவரே சிபார்சு செய்து ஏற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.