December

December

2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்

Sambanthan_R இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் BBC க்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப் பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை; வெள்ள நிலை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையால் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், மேற்படி இரு மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாக பிரதேச செயலகங்கள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நலகிரிக்குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது. இருந்த போதும், முகத்துவாரம் வெட்டப் பட்டுள்ளதால், ஆற்றுநீர் முகத்துவாரம், கல்லாறு வாவிகள் ஊடாக கடலில் சங்கமமாகின்றது. கிராமங்கள், வீதிகளில் வடிகான்கள் இன்மையால் வெள்ள நீர் தாழ் நிலங்களில் தேங்கிக் கிடப்பதால், பல வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று, மண்முனை, தென் எருவில்பற்று, பட்டிப்பளை, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுகள் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, பழம்தோட்டம், எருவில, மகிளூர், மகிளூர்முனை, நாகபுரம், குறுமண்வெளி, பட்டிருப்பு, களுதாவளை, போரதீவு, முனைத்தீவு, வெல்லாவெளி, அம்பலாந்துறை, வேத்துச்சேனை, ஆணை கட்டியவெளி, ராணமடு, சின்னவத்தை, பலாச்சோலை, இருதயபுரம், மஞ்சந் தொடுவாய், காத்தான்குடி, ஆரையம்பதி, புதூர், கல்லடி மற்றும் செங்கலடி போன்ற கிராமங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் காரணமாக, வேத்துச் சேனை, காக்காச்சிவட்டை கிராமங்களில் ஐவர் விசப்பாம்புகளின் கடிக்கு இலக்காகினர். வெள்ளத்தின் காரணமாக களுவா ஞ்சிக்குடியில் துவிச்சக்கரவண்டி பழுது பார்க்கும் கடை ஒன்றும், வேத்துச் சேனைக் கிராமத்தில் நான்கு வீடுகளும் விழுந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணி வரை ஆகக் கூடுதலான 18.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பாளர் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக் காலை 8.30 மணி வரை 20.7 மில்லி மீற்றர் மழை மட்டக் களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளதுடன் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை 794.8 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கு வதற்கான உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களே நேற்று வரை அறிக்கை செய்தனர். இதற்கேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் இடம் பெயரும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர்களின் தகவல்களை அடிப் படையாகக் கொண்டு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 5016 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென 100 கூடாரங்களை சர்வோதய நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் வீசிய சுழல் காற்றின் காரணமாக சென்றல் கேம்ப் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை, கடை என்பவற்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள 1000 ற்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள கல்முனை – சென்றல்கேம்ப் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை செப்பனிட்டு வருகின்றது.

சுனாமி இலங்கையை தாக்கி இன்றுடன் ஐந்தாண்டு பூர்த்தி

tsunami.jpgசுனாமி பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தப் பேரலைகள் இலங்கையின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்களின் உயிர்களைக் காவு கொண்டதுடன், கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் அழித்தன.

இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும், ஆராதனைகளும் விசேட பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. அன்னதானங்களும் வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் கையளிப்பு

முல்லைத்தீவு கரச்சி மற்றும் மல்லாவி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு 150 சைக்கிள்களையும், முல்லைத்தீவு வலய கல்வி அலுவலக அலுவலர்களுக்கு 5 மோட்டார் சைக்கிள்களையும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

முல்லைத்தீவு கரச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது மாணவ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் வழங்கினார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வின்போது அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் ஆளுநர் வழங்கினார்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 02 -புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

இலங்கையில் ஜனாதிபதிப் பதவி பதவிக்காலத்துக்கு முன் வறிதாகினால் (வெற்றிடமாகினால்)…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன் வறிதாகினால் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ம் உறுப்புரை,  40ஆம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ஆம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் ஜனாதிபதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும் பிரதமரினால் பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுகவீனம் காரணமாக,  இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும்,  பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி என்ற பதவியில் பிரதமரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் (ஜனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன்,  அத்தகைய காலத்தின்போது பிரதமர் என்ற பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம். (இச்சந்தர்ப்பத்தில் பிரதமர், பதவி வறிதாகியிருப்பின் அல்லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின்போது ஜனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும்,  புரிவதற்கும்,  நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்)

37ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்காலிக ஏற்படாகும்.

1993 மே 1ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தி பின்வரும் சூழ்நிலைகளில் ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ) அவர் இறப்பதன் மேல்
ஆ)அவர் இராஜினாமாச் செய்வதன் மேல்
இ) அவர் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும்போது
ஈ) தமது பதவிக்காலம் தொடங்கியது முதல் ஒரு மாதத்துக்குள் பதவி ஏற்காவிடில்
உ) 38(2) படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்
ஊ) 130(அ) படி அவரது தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்
 இந்நிலையில் ஜனாதிபதியின் பதவி வறிதாகும்.

இந்நிலையில் (ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினருள் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40ம் உறுப்புரையில் (1) அ,  ஆ,  இ பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப் பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி வறிதாகிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின் இயன்றளவு விரைவாகவும், எச் சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். நாடாளுமன்ற சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியதான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரணப் பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.

அரசியலமைப்பின் 40(1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்திற்கும், புதிய ஜனாதிபதிப் பதவி ஏற்கின்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தின் போது ஜனாதிபதிப் பதவியில் பிரதமர்  பதிற் கடமையாற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர்  பதவி, வறிதாக இருக்குமெனின் அல்லது பிரதமர் பதிற் கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனின் ஜனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதிற் கடமையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அவர்களின் மறைவையடுத்து மேற்படி ஏற்பாடுகளுக்கமைய (அரசியலமைப்பின் 37(2), 40 (1) (இ) 1993 மே 01ம் திகதி இலங்கையின் பிரதமர் திரு. டி.பி. விஜயதுங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின்படி பதில் ஜனாதிபதிக்கு 1 மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும். இதற்கிடையில் 40ம் உறுப்புரைப்படி நாடாளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) நாடாளுமன்ற சட்ட மூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகி 3 தினங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் 48 மணிநேரத்திற்குள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை (நாடாளுமன்ற அங்கத்தவர்களிடமிருந்து) கோரப்படுவதுடன் வேட்புமனு பெறும் காலம்,  நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தினுள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக பாராளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்.

இத்தகைய தேர்தலின்போது கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறைகள் சாதாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்புமனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப் பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டிகள் இல்லாதிருப்பின் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் ஏகமனதாக இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவிப்பார். அதையடுத்து ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து ஏற்கனவே பதவி வறிதான ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்வார்.

இதன்படி 1993-05-07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பதில் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு (திரு. விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்.) வழிமொழியப்பட்டு (திரு. ஏ.ஸீ.எஸ். ஹமீட் வழிமொழிந்தார்) எதிரப்பிரேரணைகள் இல்லாதிருந்தமையால் ஜனாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். (இவரின் பதவிக்காலம் 1995-01-02 உடன் முடிவடையும். (1988-01-02ஆம் திகதியன்று ரணசிங்க பிரேமதாஸ பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையவது 1995-01-02 ஆகும்)

ஜனாதிபதிக்கெதிரான  குற்றப்பிரேரனை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டு வரக் கூடிய சந்தர்ப்பங்கள்:

ஜனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி நோக்குமிடத்து,  யாப்பில் 38ம் உறுப்புரையின்படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

38(2)அ – பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது ஜனாதிபதி பின்வருவனவற்றைப் புரிவதற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.

1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்
2. தேசத்துரோகம் புரிந்த குற்றம்
3. இலஞ்சம் பெற்ற குற்றம்
4. தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் து~;பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழல் குற்றம்
5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறு.

மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்தும்படி உயர்நீதிமன்றத்தைக் கோர நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுகள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3 குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 2 /3க்குக் குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 1/2 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் முறை

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டிய தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியைக் குறித்து தேர்தலை நடாத்துவார். தேர்தல் ஆணையாளரின் அதிகாரப்படி ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி 2010 ஜனவரி 26ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அபேட்சகர்:-

1. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினூடாக அல்லது
2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராயிருப்பின் அல்லது இருப்பவராயிருப்பின் சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பின்வரும் தகைமையீனங்களுள் எதற்கேனும் உட்பட்டவராகயிருத்தலாகாது என்று யாப்பின் 92ம் உறுப்புரை எடுத்துக் கூறுகிறது.

தகைமையீனங்கள் 31(1)

அ)  முப்பது வயதையடையாதவராக இருத்தல்
ஆ)  91ம் உறுப்புரை (1)ம் பந்தியின் ஈ,  உ அல்லது எ எனும் உற்பத்தியின் கீழ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமை அற்றவராக இருத்தல்
இ) ஜனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருத்தல்
ஈ) 38ம் உறுப்புரையின் 2ம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருத்தல்

தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் கோரப்பட்டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும். கட்டுப்பணமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாகப் போட்டியிடுவதாயின் 50, 000வும், சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் 75, 000வும் செலுத்தல் வேண்டும்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2010 ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு,  தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக வேட்பு மனுத்தாக்கல்; செய்யப்பட்ட தினமான 2009 டிசம்பர் 17ம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் குழுக்களின் ஊடாக 23 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

2009 டிசம்பர் 17ம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிடுவார். இதற்கிணங்க இம்முறை மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுவொன்று மற்றுமொரு வேட்பாளரான சரத் கொங்காஹே மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.  மேற்படி மனுவை சமர்ப்பித்தவர் “சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும்” குறிப்பிட்டிருந்தார். உரிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையாளர் கோரினார். ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறித்த ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுடன் மனுதாரர் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில் அவர்களுக்கெதிரான ஆட்சேபனை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர்,  ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இம்முறையே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசுரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (தேசிய அபிவிருத்தி முன்னணி)
ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத முன்னணி )
ராஜபக்ஸ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாகு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம். இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.பி.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மாயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருகுணு மக்கள் கட்சி)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக நீளமான வாக்குச் சீட்டு இத்தேர்தலின் போது வழங்கப்படவுள்ளது. வாக்குச் சீட்டின் நீளம் 22 அங்குலமாகும். அதாவது 56 செ.மீற்றர்களாகும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் அபேட்சகர்களின் பெயர்கள் சிங்கள அகர வரிசைக்கிணங்க மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். அபேட்சகர்களின் பெயருடன் கட்சியின் சின்னம் அல்லது அபேட்சகருக்கு வழங்கப்பட்ட சின்னம் இரண்டாம் கட்டத்தில் அச்சிடப்பட்டிருக்கும். 3ம் கட்டத்தில் வாக்களிப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்களிக்கும் போது ஏனைய தேர்தல்களைப் போல “புள்ளடி” ( X ) யிடத் தேவையில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளரின் விருப்பத்திற்கமைய 1ம்,  2ம்,  3ம்,  4ம்….. விருப்பங்களைப் பதியலாம். இத்தேர்தலில் பிரதம வேட்பாளராகளாகக் கருதப்படும் சரத் பொன்சேக்காவின் சின்னம் அன்னப் பறவையாகும். மஹிந்த ராஜபக்ஸவின்  சின்னம் வெற்றிலையாகும். வாக்குச் சீட்டின் நகல் அமைப்பின் பிரகாரம் சரத் பொன்சேக்காவின் பெயர் 9வது இடத்திலும், மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் 22வது இடத்திலும் அச்சாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. 

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம்,  2ம் விருப்பங்களையும்,  மூவருக்கு மேல் போட்டியிடின் 3ம்,  4ம் விருப்பங்களையும் வழங்குமாறு வாக்காளர் கேட்கப்படுவர். வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் புள்ளடி இட்டால் அந்தப் புள்ளடி உரிய வேட்பாளருக்கான விருப்பத் தெரிவாகக் கொள்ளப்படும். மாறாக ஒரே வாக்குப் பத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு புள்ளடி இடப்பட்டிருப்பின் அந்த வாக்குப் பத்திரம் நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்.

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

வேட்பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு பதியப்படும். இக்கணிப்பீட்டின்படி பின்பும் 50 சதவீதம் பெறாவிடின் 3ம்,  (4ம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 32ம் உறுப்புரையின் 1ம் பந்திக்கிணங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தியம் செய்து கீழ் ஒப்பிடுவதன் மேல் பதவியேற்றுக் கொள்வார்.

அடுத்த வாரம் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறிப்புகள் இடம்பெறும்.

Dec 20 -இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் – 01 : பீ.எம். புன்னியாமீன்-

‘பொன்சேகாவின் பொறுப்பற்ற கூற்றுக்கு அரசே பதிலளிக்கும் நிலை’ – யாப்பா

anura-priya.jpgசரத் பொன்சேகா படை வீரர்கள் தொடர்பாக பொறுப்பற்ற கூற்றை கூறினாலும் அதற்கு பதில் கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கே ஏற்பட்டுள்ளது. எனவே, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் உரிய பதில் கொடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அது தவறாக கூறப்பட்டவை என்று பொன்சேகா கூறினாலும் ஐ. நா. சபை இது தொடர்பில் அரசிடமே விளக்கம் கோரியுள்ளது. எனவே, தகுந்த ஆதாரங்களுடன் உரிய பதில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. அமைச்சர் யாப்பா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், ஒரே கூற்று தொடர்பாக மூன்று சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று முரணான சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் விளக்கம் கோரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்ற சமயம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதன் மூலம், இதன் பின்னணி என்னவென்பது தெளிவாக தெரிகின்றது.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக இதுபோன்ற கீழ் தரமான செயற்பாடுகளை செய்யவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறான செயலை அரசாங்கம் ஒருபோதும் செய்யப்போவ தில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை சி. என். என். பி.பி.சி, தமிழ் நெட், இன்டசிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொன்சேகாவே பதில் கூறவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தான் அவ்வாறு கூறவில்லை என்று பொன்சேகா இதுவரைக் கூறவில்லை. தான் கூறிய கருத்துக்கள் தவறாக கூறப்பட்டுள்ளது என்றே கூறியுள்ளார்.

அதே சமயம், இராணுவத் தளபதி பதவியிலிருந்து தான் விலகியமைக்கான காரணத்தை அவர் மூன்று ஊடகங் களில் ஒன்றுக் கொன்று முரணான விதங்களிலேயே கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவின் ஒழுக்கம் தொடர்பாக அமைச்சர் இந்த மாநாட்டின்போது கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்த பொன்சேகாவை அமெரிக்கா அழைத்தபோது இப்பொழுது நான் என்ன செய்வது என்று ஜே. வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொன்சேகா கேட்டார் என்று ரின்வின் கூட்டம் ஒன்றில் கூறியதை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ரில்வியின் அந்த கூற்றுக்கு பொன்சேகா எந்தவித மறுப்பையும் விடுக்கவில்லை. பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற பதவிலிருக்கும் ஒருவர் மூன்றாம் நபரிடம் இது தொடர்பில் கேட்க முடியும் என்றும். இதுவா பொன்சேகாவின் ஒழுக்கம் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோம்

mahinda0.jpgநமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோ மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சமாதானத்தின் இளவரசரான இயேசு நாதரின் பிறந்த நாளை முழு உலகமும் பேருவகையுடன் கொண்டாடும் இவ்வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தலை விட்டும் நீங்கிய ஒரு நாட்டில் இவ்வருட நத்தார் பண்டிகையை கொண்டாடக் கிடைத்தமை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகின்றது.

நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் அன்பு, கருணை, கொடை என்பதாகும், இது கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை அம்சமான அன்பு பற்றிய போதனையை தன்னுடன் கொண்டுவந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்களின் சிதைந்துபோன வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி, எமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்து ணர்வு, சகிப்புத்தன்மை என்ற புதிய பாலங்களைக் கட்டியெழுப்பும் இந்த அன்பையும் கருணையையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்.

பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்ல வேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.

நத்தார் பண்டிகையின் நாதஒலி நல் உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை பரப்புகின்றது.

பொன்சேகாவை கண்டித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

colombo.jpgசரத் பொன்சேகா வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற் சங்க தலைவர்களும்- அரசியல்வாதிகளும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் நேற்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அன்று யுத்தத்துக்கு எதிராக பல்வேறு பொய்யான பிரசாரங்களை வெளியிட்ட குறிப்பிட்ட ஊடகம், பொன்சேகாவின் கூற்றுக்கு அதனைவிட அதிக அளவிலான பிரசாரத்தை தமது வெப்தளத்திலும் வேறு ஊடகங்களிலும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் கவனமும் திரும்பியுள்ளதால் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொன்சேகா வெளியிட்ட கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. செயற்பட்டுள்ளது.

இவ்வாறான கூற்றை வெளியிட்ட பொன்சேகா தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கவும், ஐ.நா. அமைப்பின் அழுத்தங்களுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பியதை காண முடிந்தது.

வடக்கு கிழக்கின் ஏழு மாவட்டங்களில் 34 ஆயிரம் கண்ணிவெடிகள் வெடிபொருட்கள், மீட்பு

வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இராணுவத்தினர் மாத்திரம் இதுவரை 45 கோடி 4 இலட்சத்து 2 ஆயிரத்து 744 சதுர மீற்றர் (450,402,744) நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட் களை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து படையினர் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் பார்ப்பற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் அங்கு அழைத்துச் செல்லப்பட்டது.

பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள், நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் துரித மீள்குடியேற்றத்திற்காக படையினர் மற்றும் ஏனைய அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஊடகவியலாளர் குழுவினர் காண முடிந்தது.

பரிய தம்பனை, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் எப்.எஸ்.டி.யினால் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை காண முடிந்தது. இதன் போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளரு க்கு கருத்து தெரிவித்த பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை அரசாங்கத்தின் வேண்கோளுக்கிணங்க படையினரும், பல்வேறு வெளிநாட்டு நிபுணத்துவ அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

2002ம் ஆண்டு முதல் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை இராணுவத்தின் மீட்டெடுத்துள்ளனர். 17,323 கண்ணிவெடிகள், 19 யுத்த தாங்கி ஒழிப்பு கண்ணிகள் 16,994 வெடிபொருட்கள் இவற்றில் அடங்கும் என்றார்.

சுவிஸர்லாந்தை தளமாகக் கொண்ட (பெடரே ஷன் சுவிஸ் டீமைனில்) எப்.எஸ்.டி. என்ற அமைப்பு பெரிய தம்பணை, பெரிய பண்டிவிரிச்சான் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இப் பிரதேசத்தில் 2 கோடி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 571 சதுர மீற்றர் (20,274,571) நிலப்பரப்பிலிருந்து பெருந்தொகையாக கண்ணிவெடிகளையும் பல்வேறு வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக எப்.எஸ்.டி.அமைப்பின் பிரதிநிதியான இந்திய நாட்டைச் சேர்ந்த மேஜர் ராஜு தெரிவித்தார்.

அடர்ந்த காடுகளும், பாலடைந்த பிரதேசங்களாகும். இருப்பதால் பல்வேறு நவீன இயந்திரங்கள், உத்திகள் இதற்கு பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடி அகற்றும் இராணுவ படைப்பிரிவின் பொறுப்பாளர் கேர்ணல் பிரசந்த விமலசிறி உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நீதியும் சமாதானமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்: சரத் பொன்சேகா நத்தார் செய்தி

pr-can.jpgநீதியும், சமாதானமும் நிறைந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தமது நத்தார் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். அச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், பாவ சாபத்தில் இருந்து மீட்கும்படியாகவும் சிலுவையில் தன்னைத் தானே ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும்படியாக இந்தக் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட எனக்குக் கிடைத்த பாக்கியத்திற்காக நன்றி கூறுகிறேன்.

2009 ஆம் ஆண்டு எனக்கு விசேடமான வருடம். எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொண்டுவந்த வருடம். அதாவது, இவ்வருட நத்தார் சந்தோஷத்தோடு சமாதானம் நிறைந்த ஒரு சமூகம் ஒன்று உருவாவதற்கு நான் வழிநடத்திச் சென்ற உறுப்பினர்கள் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை அனைத்து மக்களுக்கும் உரித்தான கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு செல்லத் தடைசெய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலமாகிய மருதமடு மாதா தேவாலயத்திற்கு மறுபடியும் கத்தோலிக்கர்கள் சுற்றுலாச் சென்று பயமின்றிச் சுதந்திரமாக வணங்கி வரக்கூடியதாயிருக்கின்றபடியால் இன்று எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவிருக்கிறது.

கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் மத வழிபாடுகளுக்காக அந்த உன்னதமான பூமியை மீட்டெடுப்பதற்கு போராட்டத்தில் உயிர்நீத்த சகல மக்களையும் அதேபோல் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் சிவில் படையினரையும், எல்லாப் படையணிகளையும் இங்கு நான் நினைவு கூருகிறேன்.

பல மதத்தவர்களும் வாழ்கின்ற இந்த நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வரவேற்கும் இந்த நத்தார் மிக முக்கியமானதாகும். சிங்களம் மற்றும் தமிழ் பேசும் கத்தோலிக்க மதத்தவர்களைப் போன்றே பௌத்த, இந்து, முஸ்லிம் மதத்தவர்களுக்கும் இன்று ஓர் புதிய இலங்கை ஒன்றை அதாவது, ஒற்றுமையான சமாதானத்தின் முன் அநீதியான காரியங்களை அகற்றி, சாதாரணமான கீரிடத்தை தரித்துக்கொள்ளவும் மத வாழ்க்கை உயர்வாக எண்ணும்படியுமான இலங்கையை நிர்மாணிக்கும் பொறுப்பு உண்டு. இந்த படிப்பினையை ஒட்டி கத்தோலிக்கர்களைப் போன்று அனைத்து மதத்தவர்களும் நடப்பதற்கு பிரதிக்ஞை செய்துகொள்ளவேண்டும்.

பௌத்தர்கள், இந்து மத குருமார்கள் போதித்தவையும் இயேசு கிறிஸ்து போதித்தவையைப் போன்றவைதான்.  நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே இங்கு மிக முக்கியமானது. பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழியில் இவ்வாறு கூறப்படுகிறது:
உத்தம மனுஷன் தேவனுடைய கிருபையைப் பெறுவான். தீய எண்ணங்கள் உள்ளவனை நியாயம் தீர்ப்பார். மனுஷன் துன்மார்க்கத்திலே நிலைத்திருப்பதில்லை.
நீதிமானின் வேர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

அந்த உன்னதமான இயேசு கிறிஸ்துவின் நத்தார் பிறப்பைக் கொண்டாடும் நாம் நீதிமிக்க மனுஷராக, நீதிமிக்கதான ஒரு சமூகத்தையும் உண்டாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அந்தப் பரிசுத்தர் காட்டிய உன்னதமான வழி இதுவே.

சகல கத்தோலிக்க மதத்தவர்களுக்கும் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த நத்தாரைப் பிரார்த்திக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.