December

December

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு

mu-siva.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதென அதன் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நேற்றுத் தெரிவித்தார். இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. கா.வின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இவ் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. காங்கிரஸின் நிலைப்பாட்டை பற்றி பல விதமான ஊகங்களை பலர் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பெருந்தோட்டப் பகுதி வைத்தியசாலைகள் அரச வைத்திய சாலைகளாக மாற்றம்பெற்றன.

3179 பேருக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 500 பேருக்கு தொடர்பாடல் உத்தியோகமும் 300 பேருக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வித் துறையிலும் பாரிய வெற்றியை பெற உதவியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் பத்து வருட வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டப் பகுதியில் அமுல்படுத்த உள்ளோம். இதற்கு வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்படும். இதற்கான தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி வழங்கி, அனுமதி வழங்கி உள்ளார்.

200 வருட பின்புல சரித்திரத்தைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் இ. தொ கா. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று இந்த அரசாங்கத்தில் இணைந்தமையின் பயனாகவே லயன்முறை அழிக்கப்பட்டு தனி வீடுகள் பெருந்தோட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

பாதைகள் திருத்தப்பட்டு காபட் போடப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி மலையக பகுதியில் செயல்படுத்த உள்ளார். எமது மக்களின் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டம் என அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மலையகத்தில் பெரும் வாக்குகளால் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.

அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே! : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)

Eachchilampatai_Studentsஆரம்ப காலங்களில் இருந்து நடந்தது என்னவென்றால் எமது மக்களுக்காக போராட புறப்பட்ட எல்லோரும் நாம் எதைநோக்கி புறப்பட்டோம் என்பதற்கு கொடுத்த நேரத்தைவிட உட்கட்சிப் போராட்டத்திற்கு கொடுத்த நேரம் அதிகம். இது அமிர் – இராசதுரை, உமா – பிரபா, உமா –மாணிக்கதாசன், ரட்ணா – சங்கர்ராஜி, வரதர் – டக்ளஸ், பொபி – தாஸ், பிரபா – கருணா, கருணா – பிள்ளையான், சம்பந்தர் – சங்கரி, உருத்திரகுமார் – நெடியவன் இப்படியே நீண்டு செல்கிறது.
 
இவர்கள்தான் இப்படியென்றால் இவர்கள் கட்சிகள் அதையும்மீறி TELO – சிறீTELO, EROS – EROS (பிரபா), EPRLF – EPRLF(நாபா) எனப் பிரிந்துள்ளது. இது EPRLF(நா),  EPRLF(பா) என்று முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. கொஞ்சம் நிறுத்துங்கள்.
 
தீர்வுவை தீர்வுவை இல்லாட்டி வோட்டு போட மாட்டோம் என்று 50 வருடமாக தீர்வு கேட்கிறோம் அவர்களும் தாற மாதிரித் தெரியவில்லை. நாங்களும் விட்டமாதிரித் தெரியவில்லை. தந்தை செல்வா தொடங்கி தனயன் பல்லி வரை தீர்வு கேட்கிறோம் என்னய்யா தீர்வு.. வட்டுக்கோட்டையா? ஈழமா? தமிழ்ஈழமா? நாடுகடந்த தமிழ் ஈழமா? தேசியமா? சுயநிர்ணய உரிமையா?……

இப்போது 50 வருடம் கழித்து இவ்வளவு உயிர்களையும் சொத்துக்களையும் பறிகொடுத்தபின் ஆரம்பித்த வட்டுக்கோட்டைக்கே வந்து நிற்கிறோம். வெட்கமாக இல்லையா? நோர்வேயில் வோட்டுப் போட்டால் நீர்வேலியில் வாழை குலை போடாது.
 
உண்மையான தீர்வு வந்த நேரத்தை நழுவ விட்டுவிட்டு இப்ப ‘தீர்வுவை தீர்வுவை. இல்லாட்டி வோட்டு போடமாட்டம்’ என்றால் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு பெரிய நாட்டின் மத்தியஸ்தத்தோடு இலங்கை – இந்திய ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையையும் தமிழ்த் தாயகமாக இணைத்து அதிகார பரவாலாக்கல் மூலம் என்று  தீர்வு வந்ததே அதை கோட்டை விட்டுவிட்டு இப்ப வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைத்துக்கொண்டு ‘தீர்வுவை’ என்றால் என்ன நிலை.

சங்கரியார் மாதிரி கடிதம் எழுதி எழுதியா தீர்வு காணப்போகிறோம். இலங்கையில் இப்போது ஒரு காந்தியோ ஒரு நெல்சன் மண்டேலாவையோ ஒரு பிடல் கஸ்ரோவையோ தேடி கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சமாவது அப்படி இருந்தவர்களையும் தொலைச்சுப்போட்டு நிற்கிறோம். அப்படியாயின் இப்போது இருக்கிற பேய்க்குள்ளே கொஞ்சம் நல்ல பேயை கண்டுபிடிச்சு அவங்கள் மூலமாக (நல்ல பேய்கள் கூட்டு சேர்ந்தாலும் நல்லது.) அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப் பரவலாக்கல் மூலம் எமது மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை முதலில் செய்வோம். இதைவிட்டுவிட்டு அமெரிக்காவும் இந்தியாவும் எங்களோடை விளையாடுகின்றது என்று அதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை வேற எழுதுவானேன்.

ஏன் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவோடும் சிங்கப்பூரோடும் விளையாடுகிறாங்கள் இல்லை. இருக்கிற நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்களும் ஒழுங்காக இருப்பாங்கள் தானே. முதலில் நாங்கள் தமிழர்கள் தான் எங்கள் நாடு இலங்கை என்பதை ஒத்துக்கொள்வோம்.
 
நாங்கள் முன்புவிட்ட பிழையே இதுதான். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ‘மட்ச்’ நடந்தால் நாம் இந்தியாவின் பக்கம் எனென்றால் அவன் சிங்களவன். இந்தியாவுக்கும் தென்ஆபிரிக்காவிற்கும் ‘மட்ச்’ நடந்தால் நாங்கள் தென் ஆபிரிக்காவின் பக்கம் ஏனென்றால் வடக்கத்தையன் ஏமாத்திட்டான். நமீதாவும் நயன்தாராவும் ஆடினால் அழகாக ரசிப்போம். மாலினியும் ரூபகலாவும் வந்து ஆடினால் யாழ்ப்பாணத்தை கெடுக்கிறாங்கள் என்போம். முதலில் இந்தத் துவேசத்தை நிற்பாட்ட வேண்டும்.
வெளிநாட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழி மூன்றாம் மொழி எல்லாம் படிப்பிப்போம் ஆனால் இலங்கையில் சிங்களம் படித்தால் குற்றமா? அவர்களும் தமிழ் படிக்கட்டும் நாங்களும் சிங்களம் படிப்போமே. இதை பள்ளிக்கூடங்களில் கட்டாயக்கல்வி என்று கொண்டுவந்தால்தான் என்ன குற்றம். இந்தியாவிலேயே தமிழ் அரசகரும மொழியல்ல. ஆனால் இலங்கையில் தமிழ் அரசகரும மொழி எனினும் இது சரியாக அமுல்படுத்தப் படவில்லை ஒத்துக் கொள்வோம்.

எல்லாவற்றுக்கும் விமர்சனம் செய்ய மட்டும்தான் விளைந்தவர்கள் என்றில்லாமல் நடந்த நன்மைகளையும் தட்டிக்கொடுத்து எழுதலாமே. என்னதான் சொன்னாலும்  கடந்த ஆறு மாதமாக குண்டுவெடிப்பு இல்லை கரும்புலித் தாக்குதல் இல்லை. விமானம் வந்து குண்டு போடவில்லை. கிபீர் வந்து சனத்தை வெருட்டவில்லை. ரிவியில் கொடூரமான இறந்த கோரக் காட்சிகளைக் காணவில்லை இது தொடர வேண்டாமா. இந்த 6மாத காலத்திற்குள் அப்துல்கலாமாக வரக்கூடிய எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தப்பியிருக்கிறார்கள் இது தொடர வேண்டாமா.

வடக்கு வழமைக்குத் திரும்புகிற யதார்த்தத்தை புரிந்து கொள்ளத்தானே வேணும். இதுதானே தொடர வேணும். இதோ நாடு சுபீட்சம் அடைந்துவிட்டது என்று சொல்லவில்லை. படிப்படியாகத்தானே சாதனைகளைப் படைக்க முடியும். இது நாங்கள் இங்கிருந்து செய்த சாதனை அல்ல. அவர்கள் செய்த சாதனை. அதைப் பாராட்டித்தானே ஆகவேண்டும். அதை விட்டுவிட்டு மகிந்தா அடிக்கிறான். கோத்தபாய சுருட்டுறான் டக்ளஸ் வெருட்டுறான் என்றதை மட்டும் எழுதாமல் மற்றைய பக்கத்தையும் எழுதலாமே. அதற்காக மகிந்தாவுக்கு ஆலவட்டமும் டக்ளஸ்ற்கு சாமரமும் வீசுவது என்பதல்ல அர்த்தம்.

ஜனநாயக சூழல் உருவாகி ஒழுங்கான எதிர்க்கட்சிகள் உருவானால் இவர்கள் பிழையென்றால் இவர்களையும் தூக்கி எறியும் அதற்கான சூழலை உருவாக்குமே. கையிலே தேன் வடிந்தால் யாரெண்டாலும் நக்கத்தான் பார்ப்பார்கள். அதை மட்டுமே எழுதாமல் அந்த மக்களும் நிம்மதியாக வாழ வழி எழுதுவமே.

சுவிஸ்சிற்கு வந்து சுயநிர்ணயம் கதைத்தால் சுன்னாகச் சந்தை கொடிகட்டிப் பறக்காது. வயலுக்குள் அவன் இறங்குவதற்கு தேவை நல்ல விதையும் உரமுமே. அதைக் கொடுங்கள். அவன் தானாக நிமிர்ந்து காட்டுவான்.

கிழிந்து போன வலையுடன் கடலுக்குப் போனால் சுறா பிடிக்கலாமா. அவன் சும்மாதானே திரும்புவான். வேண்டிக் கொடுங்கள் நல்ல வலையை அவன் சுறாவல்ல திமிங்கிலமும் கொண்டு வருவான். அவனுக்குத் தேவை உங்கள் தேசியமல்ல. உங்கள் தேசியமும் சுயநிர்ணய உரிமையையும் விடுத்து அவர்களை முதலில் வாழவிடுங்கள்.

அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே.

முன்னைய பதிவு : மானாட மயிலாடா : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)

பொன்சேகா ஆதரிப்பு எதிரொலி! ஜே.வி.பிக்குள் பிளவு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதையடுத்து அக்கட்சிக்குள் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடம் எதிர்ப்பு தோன்ற ஆரம்பித்துள்ளதுடன் கடந்த 30ம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பங்கேற்கவில்லை.

அவர் திடீரென வெளிநாட்டுக்கு பயணமாகியதன் காரணமாகவே இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் பிரசார நடவடிக்கைகளை கூடிய வரை தவிர்த்துக் கொள்ளவே இவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து ராஜினாமா செய்துள்ள கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திருமதி பிரியங்கா கொதலாவல கட்சியின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளதையடுத்து மத்திய செயற்குழுவின் பல உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரட்நாயக்க, சுனில் ஹந்துங்ஹெட்டி ஆகியோரும் வெளிநாடு செல்ல தயாராகியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு ரணிலிடம் தீர்வில்லை – ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்கலாம் என்கிறார் அசாத் சாலி

sali.jpgசிறுபான்மை மக்களுக்கான எந்தத் தீர்வும் ஐக்கிய தேசிய கட்சியிடம் கிடையாதென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண முடியமென்றும்  ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ஆசாத் சாலி தெரிவித்தார். ‘தினகரன்’க்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே ஆசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1994ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஜே.ஆர், ஆர். பிரேமதாச ஆகியோர் மாத்திரமே சிறுபான்மையினருக்குச் சார்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார்” என்று தெரிவித்த ஆசாத் சாலி, ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அங்கத்தினர்களை மதிக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார். ஜனாதிபதிக்கும், சரத் பொன்சேகாவுக்குமிடயில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. என்றும் கூறினார்.

சிறுபான்மை மக்களுக்குத் தீர்வொன்றை முன்வைப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க நீண்டகாலம் கூறி வருகிறார். எந்தத் தீர்வும் நடைபெறவில்லை. அவரிடம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை!

ஜனவரி 26ம் திகதி; நன்றிக் கடன் செலுத்தும் தினம்

நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுத்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்ற தினமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கருதவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் நன்றியுள்ள சமூகம் என்பதை இத் தேர்தல் மூலம் வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மஹிந்த சிந்தனை – மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஹிதாயத் நகர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத் தொழில் முயற்சிக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எம். எஸ். சுபைர் மேலும் பேசுகையில்: கடந்த காலங்களில் முஸ்லிம் சமூக்தைச் சேர்ந்த பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும் கப்பம் கொடுத்து வாழ்ந்த சூழ்நிலையினையும் எம்மால் மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான நிலைமையினை மாற்றியமைத்து பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

தற்போது எங்கும் சுதந்திரமாக அச்சமின்றி பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. முஸ்லிம் சமூகம் நன்றியுள்ளதொரு சமூகம் என்பதை வெளிக்காட்டவும் ஜனாதிபதிக்கு நன்றிக்கடன் செலுத்தும் சந்தர்ப்பமாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அழகான பனைமரமும் எரியூட்டப்பட்ட ஈழமும்!! : அழகி

Palmyra_Treeகடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு எமது ஈழம் எப்படி இருந்தது? கொள்ளை அழகோடு மக்களின் மகிழ்ச்சியோடு தான் இருந்தது என நான் நினைக்கிறேன். வயல் வெளிகள், வெங்காயத் தோட்டங்கள், தேயிலை பயிர்கள் போல் பசுமையாய் காட்சியளித்த புகையிலை, மிளகாய்கன்றுகள் இன்னும் சொல்லப் போனால், ஐம்பது வயது தாண்டிய கிழடுகளுடன் ஒரு சக நண்பனைப் போல ஒற்றை மாட்டு வண்டி நீர் இறைக்கச் செல்லும் காட்சி, தான் விளைவிக்கும் பயிர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் விவசாயி, மாணவர்கள் பள்ளி செல்லும் காட்சி என எல்லாம் நினைவில் வந்து மனதை வாட்டுகின்றது. இந்தியாவில் உள்ளவர்களை விட நாம் சுதந்திரமாக இருந்ததாகவே எனக்கு தோன்றுகின்றது. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் எனில் எமது சுதந்திரங்களை நாம் ஏன் இழந்தோம். பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருந்த கோவணத்தையும் இழந்தவர்களாகி விட்டோம். இதை ஏற்படுத்தியவர்கள் யார்?

இந்த அவலத்தை எமக்கு தந்தவர்கள் யார்? அவர்களை மக்களாகிய நாம் எப்படி அனுமதித்தோம். சுதந்திரம் என்பது என்ன? அது யாருக்கு தேவைப்பட்டது? இப்பொழுதாகிலும் புலம்பெயர் தமிழர் புரிந்து கொள்கிறார்களா? சுதந்திரத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா?
1) தற்கொலை போராளிகளை அனுப்பி வாங்க முடியுமா?
2) ராணுவ தளத்தை ஐம்பது தற்கொலை தாக்குதல் நடத்தி எல்லாளனைக் காட்டினால் அடைய முடியுமா?
3) அரசியல் சாணக்கியம் அற்ற ஆயுததாரிகளால் முடியுமா?
4) எந்த விதமான கேள்விக்கும் இடமின்றி எமது இனத்தில் இரண்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்களே இப்போதாவது சுதந்திரம் கிடைத்ததா?
5) வெறும் மாக்ஸியம் , லெனிஸிஸம் , ரொக்ஸிஸம் பேசிக் கொண்டு இவ்வளவு அழிவுகளுக்கிடையிலும் சிங்களவர்கள் எமது உடன்பிறப்புக்கள் என கூறிக் கொண்டு மேதாவித்தனத்துடன் உலா வந்து கொண்டிருந்தால் சுதந்திரம் கிடைத்து விடுமா?

கடந்த காலங்களில் பல சம்பவங்களை கேள்வியுற்று இருந்தேன். தமிழ் இளைஞர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? படித்த பட்டதாரிகளுக்கு வேலையில்லை – சிங்கள அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். என்னை பொறுத்தவரை எமது ஊரில் பல்கலைக்கழகம் சென்று படித்து முடித்தவர்கள் எல்லோரும் வேலையில் தான் இருந்தார்கள். தரப்படுத்தல் என்ற பிரச்சனை இருந்தது என்பது உண்மையே. இதனால் சில மாணவர்கள் பாதிப்படைந்து கவலைப்பட்டார்கள். ஆனால் பலர் நன்கு படித்து பல்கலைக்கழகம் வரை சென்றார்கள். என்னைப் பொறுத்தவரை எமது இன விடுதலை என்றால் என்னவென்று தெரியாமல் – கல்வியறிவு குறைந்தவர்களால், ஆதிக்க வெறியர்கள் சிலரால் ஆங்காங்கே சில இன உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை சேர்த்து குழுக்களை அமைத்துக் கொண்டார்கள். இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? எமது தமிழினத்தின் குறைபாடு என்னவெனில் சமுதாயத்தை நேசிப்பதில்லை. மாறாக எது நடந்தாலும் தன்னை பாதிக்காத வகையில் மௌனமாக இருக்கும். இந்த குணத்தினாலேயே கடத்தல்காரனான குட்டிமணி அரச சொத்துக்களை கொள்ளையடித்த போது மௌனமாக இருந்தார்கள். மேலும் குட்டிமணியை சிலர் பொலிசிடம் பிடித்து கொடுக்க முற்பட்டபோது குட்டிமணியால் கொல்லப்பட்டார்கள். ஆனால் மக்கள் அங்கு பேசிக் கொண்டது என்னவெனில் அரசாங்கத்தின் சொத்தை கொள்ளையடித்தால் இவர்களுக்கென்ன? இதை வாய்ப்பாக பயன்படுத்தி குட்டிமணி, பிரபாகரன், உமாமகேஸ்வரன், சபாரட்னம் இன்னும் ஏனைய குழுக்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து கேள்வி கேட்க ஆளில்லாமல் கண்மூடித்தனமாக எமது மக்களுக்கெதிராக காட்டுத் தர்பார் நடத்தினார்கள்.

சமூக விரோதிகள் என்ற பெயரில் தமிழ் மக்களை மின்கம்பங்களில் கட்டி நெற்றியில் வெடிவைத்து கொன்றார்கள். இதையும் மக்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோடு நிறுத்தாமல் ‘பெடியள் வெடி வைத்தால் நெற்றி வெடிதான்” என கேவலமாக குரூரமாக வர்ணித்தார்கள். பக்கத்தில் இருந்து ரிவோல்வரை நெற்றியில் வைத்துதானே சுட்டார்கள் – இதில் கிலாகித்து பேச வீரம் எங்கே இருக்கிறது. மக்கள் இதை சொல்வதிலே பெருமை கொண்டார்கள். அது இந்த பயங்கர குழுக்களுக்கு வலுவூட்டுவதாய் அமைந்தது. இதில் சில குழுத்தலைவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சில தலைவர்கள் விபச்சாரப் பெண்களிடம் சென்று வந்தார்கள். சிலர் ஒவ்வொரு இரவும் குடிபோதையில் மிதந்தார்கள். இப்படியே கொள்ளையடித்த பணம், மக்கள் கொடுத்த பணம் எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இவர்களுடைய ராஜபோக வாழ்விற்கு இடைஞ்சலாக இருப்பவர்களை தேசதுரோகி என்ற பட்டத்துடன் கொலையும் செய்தார்கள். கேட்பதற்கு யாரும் இல்லை. இவர்கள் செய்த எல்லா துரோகங்களையும் புலம்பெயர்ந்த தமிழர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள். இப்பொழுது ஈழத்தில் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புலிகளின் அதிகாரவெறியினால் கேட்பதற்கு நாதியில்லா நிலையில் பலரின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு தமது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் புலம்பெயர் தமிழீழம் என்று பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள். இப்பொழுதும் மக்கள் மௌனிகளாகவே இருக்கின்றார்கள்.

இப்படியாயின் சுதந்திரம் என்பதுதான் என்ன? அதை மக்கள் மக்களுக்காக தாமே கட்டியெழுப்ப வேண்டும். எப்படி? முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பின்பு பலருடன் விவாதம் செய்து ஆராய வேண்டும். மக்களை நேசிக்க வேண்டும். மக்களை நேசிப்பது என்பது என்ன? வாய்ப்பில்லாதவன், வசதியற்றவன், மென்மனம் கொண்டவன், துணையற்றவன், அமுக்கப்பட்டவன் என பலவகைப்பட்ட சமுதாயப் பிரஜைகளையும் மரியாதையாகவும் இரக்கமுடனும் எதிர்கொண்டு அவனுக்காக செயல் புரிதலே மக்களை நேசிப்பதாகும். போராட்டத்தை அந்த மக்களுடையதாக உருவெடுக்க வைத்தல் வேண்டும். போராட்டம் மக்களுடையதாக உருவாகி வரும் போதுதான் நல்ல அரசியல், இராஜதந்திர அனுபவங்களுடன் ஆயுதம் ஏந்த வேண்டும். உயிர்களின் மீது நேசமும் அவற்றின் அருமையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய மண்ணில் நல்ல வசதி வாய்ப்புக்கயோடு மிகவும் சுதந்திரமாக இருந்து கொண்டு போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் வேண்டும். தவிர்க்க முடியாது எனவும், மக்கள் வெளியேற தவித்தபோது வன்னி மண் உங்கள் பூர்வீகம் அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும், நீங்கள் செத்தால்தான் வெள்ளைக்காரன் மனங்கசிந்து ஓடோடி வருவான் என்றெல்லாம் கூறிய ஈவு இரக்கமில்லா புலிப் பினாமிகளே!! உங்களுடைய ஒரு பிள்ளையை என்றாலும் யுத்தத்திற்கு அனுப்ப முடியுமா?

நாட்டில் நிலவிய பசி, பட்டினி – வறுமை என்ற நிலைகளைப் பயன்படுத்தி ஒன்றுமறியாக் குழந்தைகளுக்கு குண்டுகளைக் கட்டி அனுப்பி கொலை செய்து அதை கண்டு களித்ததீர்கள். இரக்கமில்லாத மனித முண்டங்களே, எத்தனை விலைமதிப்பற்ற போராளிகளை எல்லாம் கொன்றொழித்து விட்டு கிட்டு, குமரப்பா, நடேசன், சங்கர், பால்ராஜ் போன்றவர்களை கொண்டாடுகிறீர்கள்? யார் இவர்கள்? இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? புலி ஆதரவாளர்களே! இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

எனது இளம்பருவத்தில் கல்வி கற்கும்போது எமது ஆசிரியர் அடிக்கடி நல்ல மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுவார். அதை கீழே குறிப்பிடுகின்றேன். ஒரு பகுதி மக்களை அவர் வாழைக்கு ஒப்பிடுவார். வாழைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் கொடுக்கிறீர்களோ அதற்கு தகுந்த பலனை தரும். இரண்டாவதாக தென்னைக்கு ஒப்பிடுவார். தென்னைக்கு கொஞ்ச தண்ணீர் கொடுத்தால் போதும் பலன் தரும். ஆனால் பனை மரம் மனிதர்கள் எந்த உதவியும் செய்யாமலே மனிதர்களுக்கு உதவி செய்யும்.

இப்படித்தான் போராளிகளும், அல்லது இனிவரும் காலத்தில் நடக்கும் போராட்டங்களாக இருந்தாலும் பனை போன்ற குணமுடையவர்களால் தான் வழிகாட்டப்பட வேண்டும். இப்பொழுது இவ்வளவு வரட்சிக்கும் அழிவுக்கும் மத்தியிலும் பனை கம்பீரமாக காட்சி தருகிறது. பனைக்கு கற்பகதரு என்ற பெயரும் உண்டு.

நாம் கேணல், லெப்டினட், மாமனிதன், தேசப்பற்றாளன் என்றெல்லாம் பெயர்கள் வைக்கிறோம். ஆனால் இன்று பெயர் வாங்கினவனும் இல்லை. பெயர் வைத்தவனும் இல்லை. இத்தனை அட்டூழியங்கள் இந்த புலிகளால் செய்யப்பட்டும், அழிந்தும் திருந்தவில்லை. இவர்கள் எப்போதுதான் திருந்தப் போகின்றார்கள்? ஜிரிவியும், புலிகளும் முதலில் அகதிகள் முகாமில் இருக்கும் இளைஞர் யுவதிகளை தயவு செய்து ஒரு ஆயிரம் பேரையாவது இந்த ஐரோப்பாவிற்கு அழைத்து தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்களானால் புண்ணியமாதல் கிடைக்கும். நன்றிகெட்ட மனிதர்களே, இப்பொழுதாவது திருந்தப் பாருங்கள். மேலும் மேலும் தவறுகள் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு மன்னிப்பே கிடைக்காது போய்விடும்!!

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் இன்று முதல் சுதந்திர நடமாட்டம்

srilanka_displaced.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து இவ்வனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வோர் தாம் தங்கியுள்ள கிராமத்தின் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியே சென்றுவர முடியும் என வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது. இதன் மூலம் இடைத்தங்கல் கிராமங்களில் தங்கியிருந்தோரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதுடன், அவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடவும் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசுந்தரம் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தோருக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வட்டைகளை அவர்கள் நிவாரணக் கிராமங்களின் பொறுப்பாளர்களிடம் காட்டிவிட்டுத் தாம் திரும்பி வரும் தினத்தையும் குறிப்பிட முடியும்.  அவர்கள் எந்தவிதப் பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் பல்வேறு மாவட்டங்களிலுமி ருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியிருந்தோரில் பெருமளவிலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலு முள்ளவர்கள் ஏற்கனவே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அத்துடன் வயோதிபர்கள். நோய்வாய்ப்பட்டவர்களும் தமது உறவினர்களுடன் போய் இணைந்துகொள்ளும் வகையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேறியவர்களைத் தவிர வவுனியா நலன்புரிக் கிராமங்களில் மேலும் 1,20,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கே இன்றுமுதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  இதேவேளை, மேற்படி 1,20,000 பேரையும் எதிர்வரும் 2010 ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை அமைத்து, அவர்களும் வாக்களிக்க உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்; மேற்படி விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை யொன்றுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதுடன், அதனையடுத்து அவரது வழிகாட்டல்களுக் கமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 325 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு நேற்று அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவர்களுக்கான சைக்கிள்களை வழங்கினார். மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கை சிறுவர் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட ராதிகா

மியன்மார் அரசாங்கம் தனது பாரிய இராணுவத்துக்கு தொடர்ந்தும் சிறுவர்களை சேர்த்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ள சிறுவர் போராளிகள் தொடர்பான விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா.நிபுணர் ராதிகா குமாரசாமி, அதேசமயம்  இலங்கையில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ. நா. தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது மியன்மாரில் தான் ஸ்வேயின் அரசாங்கம் தொடர்ந்தும் படைக்கு சிறுவர்களைத் திரட்டி வருவது தொடர்பாகவும் இலங்கை முகாம்களிலிருந்து சிறுவர்கள் உட்பட இடம்பெயர்ந்த மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ராதிகா குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மியன்மாரில் பிராந்திய மட்டத்தில் ஆட்திரட்டல் இடம்பெறுவதாக தென்படுவதை ராதிகா குறிப்பிட்டிருப்பதாக இணையத்தள செய்தி சேவை தெரிவித்தது.  இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் டிசம்பர் இல் இலங்கைக்கு செல்வதற்கு பற்றிக் கம்மெயார்ட்டை தான் நியமித்திருப்பதாகவும் அதன்பின் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்தி இலங்கை தொடர்பான சகல கேள்விகளுக்கும் பதிலளிப்பாரெனவும் கூறியுள்ளார்.

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வேளை வந்துவிட்டது. மகாநாயக்கர்களை சந்தித்த பின் ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgயுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இப்போது வழிபிறந்துள்ளது என்று தெரிவித்த எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா வட, கிழக்கு மக்களின் உரிமைகளை கவனிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று தலதாமாளிகையில் வழிபட்டபின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற சரத்பொன்சேகா பின்னர் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண இப்பொழுது வழி ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்றதால் மக்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாழும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றாலும் அகதி முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தாமதம் காட்டப்படுகிறது. அவர்கள் சொந்த இடத்திற்கு உடனே அனுப்பப்படவேண்டும்.

வட,கிழக்கு யுத்தம் முடிவுற்று மக்கள் அமைதியாக வாழும் வேளையில் அவர்களது உரிமை பற்றி நாம் கவனிக்கவேண்டும்.கவனிக்க வேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளோம். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தச்சட்டம் இருந்தபோதும் இன்று நிலைமை வேறாக உள்ளது. அதற்கு மேலாக உரிமைகள் உள்ள சரத்துகள் அடங்கிய தீர்வை பாராளுமன்றில் பெறப்படும் அதிகாரம் மூலம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.சிங்களவர்,முஸ்லிம்கள்,தமிழர்கள் எல்லோரும் இந்த நாட்டு பிரஜைகள்,அவர்கள் மத்தியில் ஒற்றுமை ,புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது இன்றைய தேவையாகும். 13 ஆவது அரசியலமைப்பு சட்டத்தினை ஜே. வி.பி. எதிர்த்தபோதிலும் இப்பொழுது எம்முடன் இணைந்துள்ள அவர்கள் அதற்கு ஆதரவளிக்கிறார்கள். இதற்காக அதிகாரத்தை பரவலாக்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படும். என்றார்.

பொன்சேகா ஆதரவுக்கு எதிரொலி – மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராஜினாமா

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் சோஷலிச மகளிர் அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளருமான பிரியங்கா கொத்தலாவல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி கூட்டாக செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதுடன் வகித்து வந்துள்ள அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு கடும் தொனியில் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ள தையிட்டு தான் கிலேசமுற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.