ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இ.தொ.கா. முடிவு செய்துள்ளதென அதன் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நேற்றுத் தெரிவித்தார். இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. கா.வின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே இவ் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பல அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இ. தொ. காங்கிரஸின் நிலைப்பாட்டை பற்றி பல விதமான ஊகங்களை பலர் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பெருந்தோட்டப் பகுதி வைத்தியசாலைகள் அரச வைத்திய சாலைகளாக மாற்றம்பெற்றன.
3179 பேருக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 500 பேருக்கு தொடர்பாடல் உத்தியோகமும் 300 பேருக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் கல்வித் துறையிலும் பாரிய வெற்றியை பெற உதவியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் பத்து வருட வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டப் பகுதியில் அமுல்படுத்த உள்ளோம். இதற்கு வெளிநாட்டு நிதி உதவி பயன்படுத்தப்படும். இதற்கான தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி வழங்கி, அனுமதி வழங்கி உள்ளார்.
200 வருட பின்புல சரித்திரத்தைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் இ. தொ கா. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று இந்த அரசாங்கத்தில் இணைந்தமையின் பயனாகவே லயன்முறை அழிக்கப்பட்டு தனி வீடுகள் பெருந்தோட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.
பாதைகள் திருத்தப்பட்டு காபட் போடப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி மலையக பகுதியில் செயல்படுத்த உள்ளார். எமது மக்களின் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டம் என அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மலையகத்தில் பெரும் வாக்குகளால் வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைப்போம் என்றார்.