December

December

கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

catak.jpgஇந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Sri Lanka in India ODI Series – 3rd ODI
India v Sri Lanka
India won by 7 wickets (with 44 balls remaining)
ODI no. 2934 | 2009/10 season
Played at Barabati Stadium, Cuttack
21 December 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum)
 WU Tharanga  b Jadeja  73 
 TM Dilshan  c †Karthik b Nehra  41 
 KC Sangakkara*†  st †Karthik b Sehwag  46 
 DPMD Jayawardene  c Raina b Harbhajan Singh  2 
 SHT Kandamby  b Sharma  22
 CK Kapugedera  b Jadeja  15 
 KMDN Kulasekara  lbw b Jadeja  10 
 S Randiv  c †Karthik b Sharma  0 
 SL Malinga  b Nehra  13 
 BAW Mendis  b Jadeja  6 
 UWMBCA Welegedara  not out  2  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
 Total (all out; 44.2 overs; 190 mins) 239 (5.39 runs per over)
Fall of wickets1-65 (Dilshan, 6.2 ov), 2-165 (Sangakkara, 22.3 ov), 3-169 (Tharanga, 24.4 ov), 4-173 (Jayawardene, 25.6 ov), 5-204 (Kapugedera, 34.3 ov), 6-210 (Kandamby, 35.5 ov), 7-210 (Randiv, 35.6 ov), 8-218 (Kulasekara, 38.1 ov), 9-236 (Mendis, 42.6 ov), 10-239 (Malinga, 44.2 ov) 
        
 Bowling 
 Z Khan 7 0 49 0  
 I Sharma 7 0 63 2
 A Nehra 6.2 0 32 2
Harbhajan Singh 9 0 29 1
 V Sehwag 4 0 26 1 
 RA Jadeja 10 0 32 4 
 Yuvraj Singh 1 0 5 0  
       
 India innings (target: 240 runs from 50 overs)
 V Sehwag*  c Dilshan b Welegedara  44
 SR Tendulkar  not out  96  
 G Gambhir  c & b Randiv  32 
 Yuvraj Singh  c †Sangakkara b Welegedara  23 
 KD Karthik†  not out  36  
 Extras (lb 5, w 6) 11     
      
Total (3 wickets; 42.4 overs) 242 (5.67 runs per over)
Did not bat SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, I Sharma 
Fall of wickets1-55 (Sehwag, 6.6 ov), 2-127 (Gambhir, 21.3 ov), 3-169 (Yuvraj Singh, 32.5 ov) 
        
 Bowling O M R W   
 UWMBCA Welegedara 8 1 35 2
KMDN Kulasekara 8 0 47 0
 SL Malinga 9.4 1 55  
 BAW Mendis 9 0 67 0  
 S Randiv 8 1 33 1
 
Match details
Toss Sri Lanka, who chose to bat
Series India led the 5-match series 2-1

“நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 25 சதவீதம் கிழக்கில் இருந்து”

1976 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் மொத்த நெல் உற்பத் தியில் 25சத வீதம் இம்முறை கிழக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வருட முதல் போகத்தில் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் மேலதிக காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட் டதையடுத்தே இவ்வாறான அமோக விளைச்சலை பெற முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, தகவல், தொழில்நுட்ப அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண அமைச்சர் மேலும் கூறியதாவது, மோதல் காரணமாக அழிந்திருந்த கிழக்கு மாகாணம் இன்று துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. 25 ற்கும் அதிகமான பாலங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் கிழக்கு பிரதேசம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு நாளை.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மீண்டும் கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. நாளைய குழுக் கூட்டத்திற்குச் சமுகமளிக்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக்கட்சிக்குள் தற்போது நெருக்கடி நிலை எழுந்துள்ளதாலேயே நாளை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்தை மீறி சுயேட்சையாகப் போட்டியிடுவது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து நாளை  கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எம்.கே. சிவாஜிலிங்கம் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

Viyoogam_CoverRahuman_Jan‘மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ என பிரித்தானியாவில் நடைபெற்ற மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான வியூகம் வெளியிட்டு நிகழ்வில் அச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார். டிசம்பர் 21ல் லண்டனுக்கு வெளியே நோர்பிற்றன் என்ற இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடையவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. கௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனா ராஜேந்திரன், என் சபேசன் ஆகியோர் சஞ்சிகையின் மதிப்பீட்டை மேற்கொண்டனர். சஞ்சிகை மதிப்பீடு அதன் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து கலந்தரையாடல் இடம்பெற்றது. வழமை போன்ற நூலாசிரியரை நோக்கிய கேள்விகளாக அல்லாமல் கலந்துகொண்டவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றது.

டிசம்பர் 13ல் இச்சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் இடம்பெற்றது. இவ்வார நடுப்பகுதியில் இதன் வெளியீடு பாரிஸில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Yamuna_Rajendiranவியூகம் விரிவான ஆழமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றை இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் பொதுவான தனது மதிப்பீட்டை அங்கு வைத்தார். மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரைகள் அவ்வாறு அமையவில்லை என்றும் இச்சஞ்சிகை கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த விடயங்களின் கலப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சஞ்சிகையின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அதனை ஒரு சஞ்சிகை என்பதிலும் பார்க்க நூலின் தோற்றத்தினையே வழங்குவதாகவும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார். வியூகத்தின் ஆசிரியர் தலையங்கம் அதன் கடந்த காலம் பற்றியும் தீப்பொறி மற்றும் உயிர்ப்பு சஞ்சிகை பற்றியும் பேசுவதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் சுயவிமர்சனம் செய்வதற்கான தளம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.

ஒரு கோட்பாட்டு இதழானது அவ்வியக்கத்தின் கோட்பாட்டு அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் வியூகத்தில் வெளிவந்துள்ள அத்தனை கட்டுரைகளுமே புனைப்பெயர்களில் வெளிவந்துள்ளதாகவும் வியூகம் சஞ்சிகையிலும் தொடர்புகளுக்கான எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனவும் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

20 வருடங்களுக்குப் பின்னர் தோழர் என்றழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறி தன் மதிப்பீட்டை ஆரம்பித்த என் சபேசன் இதனை ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகி உள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் என்பது தேசிய அரசியல் என்பதைக் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த என் சபேசன் தமிழ் தேசியம் அக முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றுக்காக தமிழ் தேசியத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இனசமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sabesan_Nசமூகத்தில் உள்ள காழ்ப்புகள் முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதாகக் கூறிய என் சபேசன் யமுனா ராஜேந்திரனின் மதிப்பீட்டில் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கட்டுரைகளில் ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். புனைபெயர்களில் எழுதுவதில் யமுனா ராஜேந்திரனுடன் முரண்பட்ட என் சபேசன் புனைபெயரில் எழுதுவதற்கான பாதுகாப்பு போன்ற காரணங்களும் தேவையும் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். வியூகம் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு தனது மதிப்பீட்டை முடித்துக் கொண்டார்.

மே 18 இயக்கம் சார்பாகவும் வியூகம் ஆசிரியர் குழு சார்பாகவும் கருத்து வெளியிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடந்து முடிந்த விதமும் முற்றாக அழிக்கப்பட்டதும் எதிர்பார்க்காத ஒன்று எனத் தனது கருத்துரையை ஆரம்பித்தார். இந்தப் புள்ளியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றில்லை என்றால் அதனை வலிந்து போராட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் அவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கும் போது ஒடுக்குகின்ற தேசம் வெற்றி கொண்ட படையாகக் கொக்கரிக்கின்ற போது அதற்க எதிராகப் பேசுவது ஒவ்வொரு அரசியல் உணர்வுள்ளவரினதும் தார்மீகக் கடமையென்றே தான் நினைப்பதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இவ்வாறான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பெறுவதாகக் கூறிய அவர் அவ்வாறான விவாதங்களிற்கான தொடக்கப் புள்ளியாகவும் அவ்வாறான விவாதங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலுமே மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இது ‘முடிவல்ல புதிய தொடகம்’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக தற்காலிகமாக அமைந்தாலும் அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகள் பிழையான தலைமையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல சரியான தலைமைகள் உருவாக முடியாமல் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்தனர் எனவும் குற்றம்சாட்டினார். போலியான ஒரு தலைமையைக் காப்பாற்றி இருக்க முடியாது எனத் தெரிவித்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கபட்டிருந்த பிரதேசங்களில் மக்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் தாங்கள் விடுதலை அடைந்ததாக உணர்ந்தார்களா என்பதுமே முக்கியமான கேள்வி என்றும் சுட்டிக்காட்டினார்.  

சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றுது. இதில் பெரும்பாலும் தேசியவாதம் தொடர்பான விவாதமே கூடுதலாக நடைபெற்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் தேசிய விடுதலையூடாகவே அமையும் என்று மார்க்சிய அடிப்படையில் கூறிக்கொண்டாலும் அது இனரீதியான தோற்றப்பாட்டையே காட்டுவதாக ராகவன் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாண்டியன் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மார்க்சிய ரீதியில் அணுகுவதாகக் கூறிக்கொள்பவர்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்று தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை மறைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டதை உதாரணங்களுடன் காட்டிய என் கெங்காதரன் மே 18 இயக்கமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்.

மாற்றுக் கருத்தக்கான விவாதத்திற்கான களத்தை உருவாக்குவதே தமது நோக்கு என்றும் இவ்வாறான நிகழ்வுகள் அதற்கு உதவும் என்றும் தெரிவித்த ரகுமான் ஜான் நடைமுறையில் உள்ள சாதனங்களின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதுடன் உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அதனை ஆராய்வதற்கான புதிய கோட்பாட்டு சாதனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி அதனை விவாதிப்போம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்! என்றும் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

(குறிப்பு: இது கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளின் விவாதங்களின் தொகுப்பு. பெரும்பாலும் கருத்து வெளிப்படுத்தியவர்களது கருத்து மாற்றம் இல்லாமல் பதிவு செய்துள்ளேன். தவறுதலாக கருத்துக்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டவும்.)

Related Articles:

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்

Sivajilingam M K_TNA MPஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் நேற்று (டிசம்பர் 20) லண்டன் வந்தார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உறுதிப்படுத்திய பின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும் ஜனாதிபதி வேட்பாளரான பின்னர் முதற் தடவையாக இன்று (டிசம்பர் 21) புலம்பெயர்ந்த தமிழர்களை நேரடியாகச் சந்திக்கின்றார். கிழக்கு லண்டனில் உள்ள குவாக்கர்ஸ் ஹவுசில் இன்று மாலை எம் கெ சிவாஜிலிங்கத்துடன் கேள்வி நேரம். இச்சந்திப்பில் அரசியல் ஆர்வமுடையவர்கள் கலந்தகொண்டு தங்கள் கேள்விகளை சந்தேகங்களை நேரடியாக எம் கெ சிவாஜிலிங்கத்திடம் முன் வைக்கமுடியும். இக்கேள்விநேரத்தை தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடாத்தப்பட்ட போராட்டங்களில் தோளோடு தோள் கொடுத்து வந்தவர் எம் கெ சிவாஜிலிங்கம். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு எதிராகத் திரும்பி உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காகவே இவர் தனித்துப் போட்டியிடுவதாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிவாஜிலிங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்றைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற அன்று வழிவகை செய்து கொடுத்தனர். அதற்கு பெரும்தொகைப் பணத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர். கடைசியாக நடந்த யுத்தம் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய கதையாக நிறைவு பெற்றது. சென்றமுறைக்கு மாறாக இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரணிக் கூட்டில் நிற்கும் முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொல்லுக் கொடுக்க களம் இறங்கி உள்ளனர்.

தனது அரசியல் நடவடிக்கை ஒரு சில சக்திகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம் தனது அரசியல் நகர்வு பற்றிய விளக்கமளிக்க லண்டனுக்கும் தமிழகத்திற்கும் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தொடர்பு:
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம்: 07846 322 369
ரிகொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452

A-9 தனியார் வாகனங்கள் இன்று முதல் பாதுகாப்பு அனுமதி பெறத் தேவையில்லை

buss.jpgகொழும் பிலிருந்து யாழ். நகருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் ஏ-9 பாதையூடாக பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வாகனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இருந்து கொழும்பு வரும் வாகனங்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ மேற்கொள்ளாமல் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொண்டு வந்தனர். பொதுமக்கள் அரச போக்குவரத்து சேவையினூடாக இதுவரை காலம் சென்று வந்தனர்.  ஏ-9 பாதை ஊடாக சொகுசு போக்குவரத்து சேவையும் நடத்தப்பட்டு வந்தது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஏ-9 பாதையூடாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது மதவாச்சி சோதனைச் சாவடியூடாக தனியார் வாகனங்களும் வவுனியா வரை செல்லலாம் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஏ9 பாதையூடாக தனியார் வாகனங்களிலேயே பொதுமக்கள் சென்று வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏ-9 பாதையூடாக இராணுவத்தினரின் தொடர் அணியுடனேயே இந்த பொதுமக்களின் வாகனங்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளன.

மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய அரசு முன்வந்துள்ளது.- அமைச்சர் சந்திரசேகரன்

chandirasekaran.jpgமலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்ததையடுத்து இக் கோரிக்கைகளை தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் நேற்று (20) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

பசில் எம்.பியும் பங்குகொண்ட இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியபோது மேலும் கூறியதாவது, மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மலையக மக்களின் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்வைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள அரசியல் பார்வையும் தமிழ் மக்களுக்கு இருந்தாலும் மலையக மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நாம் எதையும் சாதிக்க முடியும்.

எவர் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் மூலமே மலையக மக்களின் அபிலாஷை களை நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நிலைப் பாட்டை அடித்தளமாகக் கொண்டுதான் மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை கவனிக்கின்றது. எமது கோரிக் கைகளை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட காலை வரையறைக்குள் அதனை நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை மாற்றி சொந்தக் காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி லயன் முறை வாழ்க்கையிலிருந்து நமது மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

மலையக இளம் சந்ததியினர் மத்தியில் பூதாகரமாக உருவாகி வரும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். மலையக சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பின்தங்கிய சமூகமாக இருக்கின்ற நமது சமூகத்தை தரமுயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கு சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்களில் மலையக மக்களும் இணைந்துகொள்ளும் விதத்தில் புதிய பிரதேச செயலகங்களும் போதிய உள்ளூராட்சி சபைகளும் ஏற்படுத்தப்படுவதோடு நமது மக்கள் சனத் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் தொடங்கி சகல ஆட்சி சபைகளிலும் எமது பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அவசரகால தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அந்த சட்டத்தின் 23ம் விதியை நீக்குவதன் மூலம் தற்போது இன்னல்களுக்கு உள்ளாகி வரும் தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வுரிமையை ஏற்படுத்தியாக வேண்டும். புதிய தொழில் நியமனங்களிலும் பதவி, தரம் உயர்த்தப்படுதலும் பின் தங்கிய சமூகம் என்ற ரீதியில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஏனைய சமூகங்களுக்கு நிகரான எமது சமூகத்தையும் உறுமாற்ற முடியும். இந்த தெளிவோடும் உறுதியோடும் ஜனாதிபதி தேர்தலில் அரசோடு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.

யுத்த வெற்றிக்கு வழிகாட்டிய தலைமைக்கு சவால் விடமுடியாது – கோத்தாபய ராஜபக்ஷ

gotabaya-rajapaksha.jpgமுப்படை யினருக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கி, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு சிறப்பாக முகம் கொடுத்து யுத்தத்தை வெற்றிகொள்ள வழிகாட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கு எவரும் சவால்விட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தாய் நாட்டுக்காக உயிர் நீத்த சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்த படைவீரர்களை கெளரவிக்கும் 21 வது நினைவுதின வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட செய்தியை இராணுவத் தளபதி வாசித்தார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காகவும், இறைமைக்காகவும் உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் கதவுகளை திறப்பதற்காக பங்களிப்பு செய்த படைவீரர்களை கெளரவிப்பதில் மகிழ்ச்சிய டைகின்றோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம், மற்றும் வழிகாட்டலின் மூலம் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பலம், தைரியம், அர்ப்பணிப்பு காரணமாக 30 வருட காலம் நிலவிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர முடிந்தது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரை பலப்படுத்தி 80 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் ஆளணி பலத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கடந்த மூன்று வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்ததுடன் களமுனையிலுள்ள தளபதிகளுக்குத் தேவையான ஆளணியையும் பெற்றுக்கொடுத்தார்.

படையினருக்கும், களமுனைக்கும் தேவையான நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வளங்களை பெற்றுக் கொடுத்து எந்தவித வெளிநாட்டு சக்திகளுக்கும் தலைசாய்க்காது செயற்பட்ட ஜனாதிபதியின் உன்னதமான தலைமைத் துவத்தை கெளரவத்துடன் நினைவுகூர வேண்டும்.

இந்த யுத்தத்தை வெற்றிபெற முடியாது என்பதே வெளிநாட்டு நிபுணர்களினதும், தலைவர்களினதும் கருத்தாக இருந்தது. யுத்தக்கள வெற்றிகளை அவமதித்தவர்களும், இந்த நாட்டில் இருந்தனர். இதனையும் பொருட்படுத்தாது மனோ லிமையுடன் தலைமைத்துவத்தையும் கட்டளையிடும் தளபதிகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், உறுதியையும் ஜனாதிபதி வழங்கினார்.

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற வடமராட்சி யுத்தத்தை இந்த இடத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். யுத்தவெற்றிகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதிலும் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமலும், வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாகவும் யுத்தம் இடையில் நிறுத்தப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரபாகரனுக்கு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அன்றிருந்த அரசியல் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்ததை எவரும் மறக்கவில்லை. ஆனால் உயிரை பணயம் வைத்து முன்னோக்கிச் சென்ற உங்களது பிள்ளைகள், கணவன்மார்கள், தந்தையர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யோசிக்கவில்லை.முப்படையினரின் நலன்கள், மோதலுக்கு தேவையான வளங்கள் தலைமைத்துவம் இல்லாமையே இந்த யுத்தம் இதுவரை காலம் நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

தரைவழி பாதுகாப்பை இராணுவத்தினரும், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் ஆயுதங்கள் புலிகளின் கரங்களை சென்றடையாமல் அவற்றை அழித்தொழிக்கும் பணியை கடற்படையினரும், நவீன விமானங்களை பயன்படுத்தி எதிரிகளின் தளங்களை விமானப்படையினர் அழித்தும் சிறப்பாக ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.

தற்காலிக அடையாள அட்டை வழங்கல்: – ஜனவரி 21 வரை விண்ணப்பம் ஏற்கப்படும்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனவரி 21ம் திகதி வரை தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை மறுத்த தேர்தல் திணைக்களம் சகல தரப்பினருக்கும் வாக்களிக்கத் தேவையான ஒழுங்குகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி கூறினார்.

சுமார் 88 வீதமான மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு, எஞ்சியவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் தற்காலிக அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிராம சேவகர்களினூடாக தற்காலிக அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரியாக ஆட்சிசெய்ய எண்ணியுள்ளேன்: – ரணில்

ranil.jpgஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரியாக செயற்பட எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் இதற்கு வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவானால் மூன்று விடயங்களை நிறைவேற்றுவது குறித்து முன்னுரிமை கொடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, நாடாளுமன்ற அரசாங்க முறை, மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரிமுறை என்பன அதில் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.