யுத்த வெற்றிக்கு வழிகாட்டிய தலைமைக்கு சவால் விடமுடியாது – கோத்தாபய ராஜபக்ஷ

gotabaya-rajapaksha.jpgமுப்படை யினருக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கி, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு சிறப்பாக முகம் கொடுத்து யுத்தத்தை வெற்றிகொள்ள வழிகாட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கு எவரும் சவால்விட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தாய் நாட்டுக்காக உயிர் நீத்த சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்த படைவீரர்களை கெளரவிக்கும் 21 வது நினைவுதின வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட செய்தியை இராணுவத் தளபதி வாசித்தார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காகவும், இறைமைக்காகவும் உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் கதவுகளை திறப்பதற்காக பங்களிப்பு செய்த படைவீரர்களை கெளரவிப்பதில் மகிழ்ச்சிய டைகின்றோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம், மற்றும் வழிகாட்டலின் மூலம் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பலம், தைரியம், அர்ப்பணிப்பு காரணமாக 30 வருட காலம் நிலவிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர முடிந்தது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரை பலப்படுத்தி 80 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் ஆளணி பலத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கடந்த மூன்று வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்ததுடன் களமுனையிலுள்ள தளபதிகளுக்குத் தேவையான ஆளணியையும் பெற்றுக்கொடுத்தார்.

படையினருக்கும், களமுனைக்கும் தேவையான நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வளங்களை பெற்றுக் கொடுத்து எந்தவித வெளிநாட்டு சக்திகளுக்கும் தலைசாய்க்காது செயற்பட்ட ஜனாதிபதியின் உன்னதமான தலைமைத் துவத்தை கெளரவத்துடன் நினைவுகூர வேண்டும்.

இந்த யுத்தத்தை வெற்றிபெற முடியாது என்பதே வெளிநாட்டு நிபுணர்களினதும், தலைவர்களினதும் கருத்தாக இருந்தது. யுத்தக்கள வெற்றிகளை அவமதித்தவர்களும், இந்த நாட்டில் இருந்தனர். இதனையும் பொருட்படுத்தாது மனோ லிமையுடன் தலைமைத்துவத்தையும் கட்டளையிடும் தளபதிகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், உறுதியையும் ஜனாதிபதி வழங்கினார்.

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற வடமராட்சி யுத்தத்தை இந்த இடத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். யுத்தவெற்றிகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதிலும் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமலும், வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாகவும் யுத்தம் இடையில் நிறுத்தப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரபாகரனுக்கு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அன்றிருந்த அரசியல் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்ததை எவரும் மறக்கவில்லை. ஆனால் உயிரை பணயம் வைத்து முன்னோக்கிச் சென்ற உங்களது பிள்ளைகள், கணவன்மார்கள், தந்தையர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யோசிக்கவில்லை.முப்படையினரின் நலன்கள், மோதலுக்கு தேவையான வளங்கள் தலைமைத்துவம் இல்லாமையே இந்த யுத்தம் இதுவரை காலம் நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

தரைவழி பாதுகாப்பை இராணுவத்தினரும், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் ஆயுதங்கள் புலிகளின் கரங்களை சென்றடையாமல் அவற்றை அழித்தொழிக்கும் பணியை கடற்படையினரும், நவீன விமானங்களை பயன்படுத்தி எதிரிகளின் தளங்களை விமானப்படையினர் அழித்தும் சிறப்பாக ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *