ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மீண்டும் கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. நாளைய குழுக் கூட்டத்திற்குச் சமுகமளிக்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக்கட்சிக்குள் தற்போது நெருக்கடி நிலை எழுந்துள்ளதாலேயே நாளை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்தை மீறி சுயேட்சையாகப் போட்டியிடுவது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து நாளை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எம்.கே. சிவாஜிலிங்கம் தற்போது லண்டன் சென்றுள்ளார்.