September

September

இந்தோனேஷியாவில் இன்று நில நடுக்கம். இலங்கைக்கு ஆபத்தில்லை!

tunami.jpgஇந்தோ னேஷியா ஜாவா தீவுப்பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த நிலநடுக்கத்தின் போது இந்தோனேஷிய தலைநகரில் உள்ள குடியிருப்புகளின் சில கட்டிடங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கபப்டுகிறது.

எனினும் இதன் காரணமாக இலங்கைக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

லிபியாவில் பாகிஸ்தான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு!

pak-pm-sl-pr.jpgலிபிய தலைநகர் திரிபோலியில் நடைபெறும் அந்நாட்டின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்து உரையாடினார். அத்துடன் அந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்திருக்கும் பல வெளிநாட்டுத் தலைவர்களையும்  தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்;.

பாகிஸ்தான் பிரதமருடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பு கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அதனூடாக ஏற்படும் இராஜதந்திர உறவுகள் நாடுகளுக்கிடையில் வர்த்தக,  பொருளாதார,  சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையுமெனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்பப் பரிமாற்று வேலைத் திட்டமொன்று இரு நாடுகளுக்குமிடையில் செயற்படுத்துவதற்கும் இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும்

“ஈ அறிவகம்” திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தான் அரசின் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் இச் சந்திப்பின்போது கவனம் செலுத்தினர்

யாழ். மேயராக யோகேஸ்வரியை நியமிக்க ஐ.ம.சு.முன்னணி தீர்மானம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தகவல்

jaffna_mayor-2009-08-11.pngயாழ்ப் பாண மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராஜாவை நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நேற்று கொழும்பு,  மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக என். இளங்கோவை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விபரங்கள் நேற்று தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர்களுக்கான பெயர்களை ஈ.பி.டி.பி. சிபார்சு செய்திருந்ததோடு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ{ம் பிரதி மேயர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.

எனினும், ஐ.ம.சு. முன்னணி கூடி இது குறித்து ஆராய்ந்து ஈ.பி.டி.பி. முன்வைத்த இருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. யாழ். குடாவில் குறைந்தளவு முஸ்லிம்களே வசிக்கின்றனர். இத்தேர்தலில் புத்தளம் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்தே அதிகமான முஸ்லிம்கள் வாக்களித்தனர். இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் பிரதி மேயர் பதவியை அ.இ.மு.காங்கிரஸக்கு வழங்க அக்கட்சிக்கும் ஈ.பி.டி.பி.க்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். 

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 போட்டி இன்று

kumar-sangakkara.jpgஇலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கில் இரவுப் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு 20க்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.  இரண்டாவது போட்டி எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும்.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரையும் அள்ளிச் சுருட்டியது. இலங்கை அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி 20க்கு 20 போட்டியில் வெற்றி பெறும் எண்ணத்தில் களத்தில் குதிக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு பழி தீர்த்தாற் போல் ஆகிவிடும்.

இலங்கை அணிவீரர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போட்டியில் நிரூபிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கனடாவில் “உண்மையைப் பேசவிடு” ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

canada.jpgகனடிய தமிழர் சமூகமும், கனடிய தமிழ் மாணவர் சமூகமும் கனடிய ஊடகவியலாளர் சமூகத்தை இணைத்து முன்னெடுக்கும் “உண்மையைப்  பேசவிடு” ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் எதிர்வரும் 4 ம் திகதி வெள்ளிக்கிழமை 205  Wellington Street (Front & John) Toronto வில் அமைந்துள்ள கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்பாக நடைபெறவுள்ளது. 

டாக்டர் சிவபாலனும் பிணையில் விடுவிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை செய்தி ஏஜென்ஸிகளுக்கு வழங்கிக் குற்றமிழைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் டாக்டரும் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் எஸ்.சிவபாலன் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்தஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து இரண்டு லட்சம் ரூபா உறுதிப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு டாக்டர்களையும் கடந்த 24ஆம் திகதி நிபந்தனைப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவானால் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. 

தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் ஒத்துழையாமைப் போராட்டம்

pluckers.jpgமலையகத் தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் இன்று இரண்டாம் திகதி முதல் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 500 ரூபாவால் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டதையடுத்து, தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

கொட்டகலையில் நேற்று சங்கங்கள் ஒன்றுகூடி இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது பற்றித் தீர்மானித்ததாகப் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மீண்டும் எதிர்வரும் 7 ஆந் திகதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. எவ்வாறெனினும், 500 ரூபா சம்பள உயர்வு என்ற அடிப்படையிலும், ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரிக்கப்படும் தொகையை தீபாவளி மாதச் சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென தொழிற்சங்கங்கள் அறிவித்து விட்டதாக பிரதி அமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (31) கொட்டகலையில் நடை பெற்றது. இதில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்க வேண்டும் எனச் சங்கங்கள் கோரின. ஆனால் முதலாளிமார் சம்மேளனம், அவ்வாறு வழங்க முடியாதென்றும் 12.5% அதிகரிக்க முடியுமென்றும் கூறிவிட்டது. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் கலாவாதியான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுபிக்க இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கமின்றி முறிந்தது. மீண்டும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்பை நிராகரித்து விட்டது. இதனையடுத்து தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து நேற்று கொட்டகலையில் கூடி ஆராய்ந்து முடிவெடுத்துள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி ஆகிய சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தோட்டத் தொழிலாளர்கள் மனநிறைவுடன் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டியின் தலைவர் எஸ். இராமநாதன் தெரிவித்தார். தமது அமைப்பில் உள்ள தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இம்முறை போராட்டத்தை இறுக்கமாக மேற்கொள்ளப் போவதாக இராமநாதன் கூறினார்.

தொழிலாளர்களுக்கு தற்போது 200 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும், தேயிலை விலைக்கு 20 ரூபாவும், 75% வேலைக்குச் சென்றால் 70 ரூபாவும் வழங்கப்படுகின்றது. இதனையடுத்து மொத்தமாக 500 வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி இதய சுத்தியுடன் இணைந்து செயல்படுவதற்கும் போராட்டங்களில் பங்கெடுப்பதற்கும் பின் நிற்காது.

கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிப்பதற்கு 600 ரூபா நாட்சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என்று மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“மலையக மக்கள் முன்னணி சமூக நலனில் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றது. முதலாளிமார் சம்மேளனம் மலையகத் தொழிலாளர்களின் விடயத்தில் எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொள்வது வேதனைக் குரிய விடயமாகும்.

கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி இவ்விடயத்தில் ஒதுங்கி இருக்கக் கூடாது. அதே போல மற்றைய கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் நடைமுறைப் பற்றாக்குறைகள், வாழ்க்கைச் செலவு உயர்ச்சி, வேலை குறைப்பு என்பவைகள் தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் சங்கக்காரா முதலிடம்

kumar-sangakkara.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்ததால் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்கக்காரா ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். இதனால் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  3-வது இடத்தில் மஹேல ஜெயவர்தனா உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் டேல் ஸ்டெய்ன், முரளிதரன், மிட்செல் ஜான்சன் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்-2வது சுற்றில் சானியா, சோம்தேவ்

sania-mirza1111.jpgயுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் இந்திய வீரர் சோம்தேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, பெலாரசின் வோல்கா கோவர்ட்சோவாவை எதிர்கொண்டார்.

இதில் சானியா 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார். அதில் அவர் இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், போர்ச்சுக்கல்லை சேர்ந்த பெரட்ரிகோ கில்லை 6-3, 6-4, 6-3 என வென்றார். இவர் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைப்பரை சந்திக்கிறார்.

இது குறித்து சானியா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள்  பிரிவு ஒற்றையர் போட்டியில் ஒரே சமயத்தில் இரண்டு இந்தியர்கள்  இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
 

300 முதியோர்கள் இன்று இந்து மாமன்றத்தால் ஏற்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகுறைந்த 300 முதியோர்களை இன்று புதன்கிழமை அகில இலங்கை இந்து மாமன்றம் பொறுப்பேற்றுக்கொள்கிறது.

சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் செயலாளர் திருமதி வி. ஜெகராசசிங்கம் ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று 300 முதியோர்கள் இந்து மாமன்றத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள அவர்களுக்கான இல்லங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர்.