இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையையும் ஏனைய சகல உதவிகளையும் வழங்கவேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனிப்பட்டவகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நட்பு ரீதியான உதவிகள் மூலமே உண்மையான சமாதானத்தைப் பெற்று, நீதியை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நிலைநாட்ட முடியும் எனவும் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை பேராயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துப் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னரே பேராயர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு பேராயர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மட்டுமன்றி, ஏனைய அனைத்து விதமான உதவிகளையும் இலங்கைக்கு சர்வதேசம் வழங்கவேண்டும். இனவாதம் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தினால் மக்கள் பாரியளவு பாதிப்புக்களை எதிர்கொண்டனர். மேற்குலக நாடுகளின் நட்பு ரீதியான உதவிகள் மூலமே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒற்றுமை, கௌரவம், தனி மனித சுதந்திரம் போன்றவற்றை உறுதிப்படுத்த முடியும்.
மாறாக, தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைச் செய்யமுடியாது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன என்பதனால், இந்த வேண்டு கோளை விடுக்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.