வவுனியாவில் மீளக்குடியேறியோருக்கு அடிப்படை வசதிகள் யாவும் இலவசம்

210909va-re-set.jpgவவுனியா தெற்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 320 பேருக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உலர் உணவுகள், மின்சார இணைப்பு, நிவாரண உதவிகள் ஆகியன வழங்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது குறித்து உயர்மட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு வவுனியா வடக்கில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தமது சொந்த காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தமது காணிகளை சுத்திகரித்து பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக இவர்களை குடியேற்றும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்வெட்டி, கோடரி ஆகியன உள்ளிட்ட காணி சுத்திகரிப்பு உபகரணங்களும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்கான 16 தகரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். வீதிகள், குளங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள், தபாலகங்கள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டிருப்பதுடன் ஒவ்வொருவரது காணிகளுக்கும் நீர் மற்றும் மின் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் இணைப்புக்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதால் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதெனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவர்களுடைய சுத்திகரிப்பு பணிகளை ஊக்குவிக்கும் முகமாக ஒரு ஏக்கர் நிலபரப்புக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது காணிகள் பற்றைக் காடுகளாக மாறியிருப்பதனால் அவற்றை சுத்திகரிக்க சிறிது காலம் தேவைபடுமென்பதனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வரும் 06 மாதகாலத்துக்கு அக்காணிகளைச் சேர்ந்தோருக்கு நிவாரணமாக குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது. ணிகளில் தூர்ந்துபோன கிணறுகளை மீள வெட்டி புதுப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் உதவுவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டமையினால் இவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 06 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • இராவுத்தர்
    இராவுத்தர்

    பெரியளவிலான கண்ணிவெடிகளும் சிறிய ரக மிதிவெடிகளும் எண்ணிலடங்காத அளவில் புதைக்கப்பட்டிருக்கும் பிரதேசமொன்றில் மக்களை அவசர அவசரமாக அழைத்துச் சென்று மீளக்குடியேற்றுவது ஆபத்து மிக்கதாகும்.
    போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் முல்லைத்தீவு ஆகும். யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற பிரதேசம் அதுவாகும். அங்கிருந்தே கூடுதலான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் அநேகமானோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தோராவர்.
    அதேசமயம் முல்லைத்தீவு பிரதேசமக்களை மீளக்குடியேற்றும் பணியே தற்போது சற்றுத் தாமதத்துக்கு உள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க அங்கு பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதே தாமதத்துக்குக் காரணமாகும்.
    முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படுவதே முதலில் பிரதானமானது. கண்ணிவெடி ஆபத்து முற்றாக நீக்கப்பட்ட பின்னர் அங்கு மீளக்குடியேறுவதிலேயே மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர்.
    வவுனியா மாவட்டம் உட்பட வன்னியின் பல்வேறு பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டிலிருந்து நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
    மக்கள் பாதுகாப்புக் கருதி அரசுக்கென்று பாரிய பொறுப்பு உண்டு. அரசு தனது பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகிச் சென்று விட முடியாது. வன்னியில் இடம்பெயர்ந்திருக் கும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
    வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கென எல்லாமாக முப்பத்தைந்து கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் இதுவரை இருபத்தெட்டு கிராமங்களில் மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
    கடந்த கால யுத்த சூழலின் போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். வடமாகாண மீள்குடி யேற்றத்தைப் பொறுத்தவரை அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே காலப் பகுதியில் உடனடியாக மக்களை மீளக் குடியேற்றுவதென்பது சாத்தியமானதல்ல.- இரணைப்பாலை இராவுத்தர்-

    Reply
  • மாயா
    மாயா

    வடக்கே நிலக் கண்ணி வெடிகள் இருப்பதாக அரசு சொல்வது போல இருந்திருந்தால் , புதுமாத்தளன் மற்றும் வெள்ளைமுள்ளி வாய்க்காலில் இருந்து அலை அலையாக ஓடி வந்த மக்களின் கால்களே இருந்திருக்காது. தமிழ் மக்களின் வாக்குகளைத் திருடவே அரசு, மக்களை முகாம்களில் தொடர்ந்தும் அடைத்து வைக்க முயல்கிறது என தபற அமில பெளத்த மத குரு நேற்று (21)பகிரங்க கூட்டமொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

    தவிரவும் , அரசு தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்காது மக்களை முகாம்களில் தடுத்து வைத்து சர்வதேச சதி வலையில் சிக்கியுள்ளது. கண்ணி வெடிகளை அகற்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரங்களால் இலங்கையில் மட்டுமல்ல , இந்தியாவிலுள்ள கண்ணி வெடிகளையும் கூட அகற்றலாம் என்றார் நகைப்போடு. தடுப்பு முகாம்களில் இருக்கும் தாய் – தந்தையரையும் , சகோதர சகோதரிகளையும் விடுவித்து தாம் சேகரித்துள்ள பொருட்களை அவர்களுக்கு நேரடியாக வழங்க அரசு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் ஒன்றை நேற்று (21) விடுத்துள்ளார்.

    Reply