September

September

நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்ததைவிட நல்ல நிலையில் என சர்வதேச நாணய நிதியம் பாராட்டு – அநுர பிரியதர்ஷன யாபா

240909anura_priyadarsana_yapa.jpgஇலங் கையின் பொருளாதார நிலை எதிர்பார்ததைவிட நல்ல நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளதாக  தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில். இலங்கைக்கான வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு 1.9 பில்லியன் டொலர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு விடயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தாம் விரும்பியவாறு கருத்துத் தெரிவிப்பது அவருக்கு பழக்கமாகியுள்ளது.

எமது மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி நாட்டின் வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு 4 பில்லியன் டொலராகும். இதனை சரியாக அறிந்துகொள்ளாமல் 1.9 பில்லியன் என அவர் நினைத்தவாறு கூறியிருக்கும் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் அந்த அளவுக்கு வீழ்ச்சி அடையவில்லை. சர்வதேச அமைப்புக்கள் கூட எமது பொருளாதார நிலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடனுதவி வழங்கும் போது அவர்கள் எதிர்பார்ததைவிட நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் காணப்படுவதாக அந்த நிதியத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நாட்டின் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. பொரளாதாரம் அபிவிருத்தி கண்டுள்ளது. தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளன. இவ்வாறு பல துறைகளிலும் நாட்டில் முன்னேற்றம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ். ஏரிகள் புணரமைப்புத் திட்டம்

rajitha_senarathna00jpg.jpgயாழ்.  குடா நாட்டின் நன்னீர் அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் யாழ். ஏரிகளைச் சார்ந்த 13 அணைக்கட்டுக்களைப் புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி நிர்மாணப் பணிகளை அரச அபிவிருத்திக்கான பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கவும் இயந்திர சாதன சேவைகளை அரச தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புப் பணிகளுக்கு 132 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

ஹஜ்ஜை முன்னிட்டு விசேட கடவுச்சீட்டு கருமபீடம் – இன்று திறப்பு

210909ramzan.jpgஇலங்கை யிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் முஸ்லிம்களின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று விசேட கடவுச்சீட்டு கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட கருமபீடமத்தின் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் எவ்வித சிரமங்களுமின்றி கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மீரா மொஹிதீன் தேசம் நெட்டுக்கு தெரிவித்தார்.

இவ்வருடத்திலிருந்து ஹஜ் கடமைக்குச் செல்பவர்களும் முன்பு ஹஜ்ஜுக்கு மட்டுமென கடவுச் சீட்டு பெற்றுக்கொண்டவர்களும் தமது கடவுச் சீட்டுக்களை சகல நாடுகளுக்குமானதாக பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கருமபீடத் திறப்பு விழாவில் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி,  மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் ஹஜ் முகவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

250909un-council.jpgஉலக மட்டத்தில் அணு ஆயுதப் பரவலை தடுக்கவும், ஆயுதக் களைவின் மூலம் அணுசக்தி சார்ந்த தீவிரவாதத்தை குறைக்கும் முகமான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு ஆயுதமற்ற ஒரு உலகை உருவாக்க அனைவரிடமும் இருக்கும் ஒரு அர்ப்பணிப்பு இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரிகிறது என்று இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் ஒரு பங்கிருப்பதை சுட்டிக்காட்டிய ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், தம் நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலாகக் குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரானின் அணுத்திட்டம் தொடர்பாக அதன் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. என்றாலும் இரான் மீது கூடுதலாக எந்த தடையையும் விதிப்பதற்கு சீனா தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்துள்ளது.

யாழ். குருநகர் – கொழும்புத்துறை வீதி போக்குவரத்துக்கு திறப்பு

epdp.jpgயாழ்.  குருநகர் – கொழும்புத்துறை கடற்கரை வீதி மக்களின் போக்குவரத்துக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் திறந்து வைத்தார். இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் படைத் தரப்பினரதும், அரச உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்த வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், மக்களின் சார்பில் ஜனாதிபதிக்கும் படைத் தரப்பினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கடற்றொழிலாளர்களுக்குத் தொழிலில் ஈடுபடுவதற்கு 24 மணி நேர அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் இவ்வாறானதொரு சூழ் நிலையை, ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் எமது மக்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 30 வருடங்களாக எங்களை நாங்களே அழித்துக்கொண்ட நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் எனில், நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசியுரை வழங்கிய வணக்கத்திற்குரிய ஜெரோ செல்வநாயகம் இன்று வீதியைத் திறந்து வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மக்களின் வாழ்வையும் மலர வைப்பார் என்பதால், அமைச்சருக்குத் தனது நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் யாழ். கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், மாநகர முதல்வர், உதவி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திறைசேரி பொறுப்பை ஜயசுந்தர மீள ஏற்க முடியுமென நீதிமன்று தீர்ப்பு

999.jpgஉச்சநீதி மன்றத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர சமர்ப்பித்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேநேரம், கலாநிதி ஜயசுந்தர திறை சேரி செயலாளர் பொறுப்பை மீண்டும் ஏற்க முடியுமெனவும் உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்கியது.

இவரது விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த ஏழு பேர் கொண்ட விசேட நீதியரசர்கள் குழுமத்தில் ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்திற்கு சார்பாகவும் ஒருவர் மாறுபட்ட கருத்தையும் வழங்கியிருந்தார்.

ஆறுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உட்பட ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்தி ற்கு சார்பாகத் தீர்ப்பு வழங்கினர். நீதியரசர் சிரானி திலகவர்த்தன மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். முழுமையான தீர்ப்பு வழங் குவதை நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, நீதியர சர்களான சிராணி பண்டாரநாயக்க, சிராணி திலகவர்தன, சலீம் மர்சூஃப், ஜகத் பாலபட்டபெந்தி, கே. சிறிபவன், பி. ஏ. ரத்நாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.

பீ. பி. ஜயசுந்தரவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார். நீதிமன்றத்தினால் வழங் கப்பட்ட தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு பிரதிவாதியான பீ. பி. ஜயசுந்தர ஒருபோதும் கோரவில்லை. நீதிமன்றத்திற்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியை வாபஸ் பெறுமாறே மனுதாரர் கோருகிறாரென பாயிஸ் முஸ்தபா நீதிமன்றுக்குத் தெளிவுபடுத்தினார்.

மனுதாரரான ஜயசுந்தர சுயவிருப்பத்தின் பேரில் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்கவில்லை. மாறாக முன்னாள் பிரதம நீதியரசரின் உத்தரவின் பேரிலேயே அதனை அவர் சமர்ப்பித்தாரென பாயிஸ் முஸ்தபா எடுத்துக் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

லங்கா மரைன் சேர்விஸ் லிமிட்டெட் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தியது தொடர்பான தீர்ப்பின் போது இனி மேல் எந்தவித அரச பதவிகளும் வகிப்பதில்லையென சத்தியக் கடதாசியை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் நீதியரசர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கலாநிதி ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்திற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மத்திய அரசின் கீழ் மொனராகலை வைத்தியசாலை

nimalsiripaladasilva.jpgமொனரா கலை மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதாரா மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.

இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழக் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோமானின் இறுதி வாரிசு மரணம்

250909_osman.jpg1920 களில் துருக்கிய குடியரசு உருவாகியிருக்காவிட்டால் அங்கே ஒட்டோமான் பேரரசின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்திருக்கக்கூடிய நபர், தற்போது தனது தொண்ணூற்று ஏழாவது வயதில் உயிரிழந்துள்ளார்.

துருக்கியிலே கடைசி ஒட்டோமான் என்று அறியப்படுகின்ற எர்துகுருல் உஸ்மான், ஒட்டோமான் பேரரச குடும்பத்தில் பிறந்து, போஸ்போரஸ்ரில் உள்ள சுல்தான் அரண்மனையில் சிறு பிள்ளையாக விளையாடியிருந்தவர்.

ஆனால் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ஒரு சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே கழித்திருந்தார். நவீன துருக்கியின் தோற்றுநரான கெமால் அடாதுருக்கினால் ஒட்டோமான் ராஜ குடும்பம் நாட்டை விட்டு துரத்தப்பட்டிருந்தது.  அப்போது நாட்டை விட்டு வெளியேறியிருந்த உஸ்மான் 1990 களில் தனது தாத்தாவின் முந்தைய அரண்மனையை பார்க்க வந்த ஒரு சுற்றுலாக் குழுவோடு சேர்ந்துதான் மீண்டும் துருக்கிக்குள் நுழைந்திருந்தார்.

தோட்டங்கள் பற்றித் தெரிந்தவருக்கு தொழிற்சாலைகள் பற்றித் தெரியாது – லக்ஷ்மன் கிரியெல்லைக்கு அமைச்சர் யாப்பா பதிலடி

anura_priyadarshana_yapa.jpgநாட்டில் 500 ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லை தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளைத் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்  ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் உரிய முறையில் பதிவுசெய்யப்பட்ட 370 ஆடை தயாரிக்கும்  தொழிற்சாலைகளே உள்ளன. இவ்வாறான நிலையில் 500 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் எவ்வாறு கூறலாம். அவருக்கு தொழிற்சாலைகள் பற்றிய எவ்வித தகவலும் தெரியாது என்பது இதன்மூலம் புலனாகிறது.

தொழிற்சாலைகள் மூடப்படாமலும் இல்லை ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அதற்குப் பதிலாக வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் அதில் கடமையாற்றிவர்களுக்கு வேறு தெழிற்சாலைகளில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை கவனிக்க வேண்டியதில்லை. தொழில் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையையே கவனிக்க வேண்டும். அந்தவகையில் தொழில் கிடைக்கப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது. தோட்டங்கள் பற்றித் தெரிந்துள்ளவர்களுக்கு தொழிற்சாலைகள் பற்றி தெரிய வாய்பபில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மத்திய மாகாண விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி

dimujayarathna2222.jpgமத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள தொழுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹாலியத்த,  நாரங்விட்ட மற்றும் முல்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சமர்ப்பித்திருந்தார்.