நாட்டில் 500 ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லை தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளைத் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் உரிய முறையில் பதிவுசெய்யப்பட்ட 370 ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளே உள்ளன. இவ்வாறான நிலையில் 500 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் எவ்வாறு கூறலாம். அவருக்கு தொழிற்சாலைகள் பற்றிய எவ்வித தகவலும் தெரியாது என்பது இதன்மூலம் புலனாகிறது.
தொழிற்சாலைகள் மூடப்படாமலும் இல்லை ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அதற்குப் பதிலாக வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் அதில் கடமையாற்றிவர்களுக்கு வேறு தெழிற்சாலைகளில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை கவனிக்க வேண்டியதில்லை. தொழில் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையையே கவனிக்க வேண்டும். அந்தவகையில் தொழில் கிடைக்கப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது. தோட்டங்கள் பற்றித் தெரிந்துள்ளவர்களுக்கு தொழிற்சாலைகள் பற்றி தெரிய வாய்பபில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.