இலங்கை யிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் முஸ்லிம்களின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று விசேட கடவுச்சீட்டு கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட கருமபீடமத்தின் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் எவ்வித சிரமங்களுமின்றி கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மீரா மொஹிதீன் தேசம் நெட்டுக்கு தெரிவித்தார்.
இவ்வருடத்திலிருந்து ஹஜ் கடமைக்குச் செல்பவர்களும் முன்பு ஹஜ்ஜுக்கு மட்டுமென கடவுச் சீட்டு பெற்றுக்கொண்டவர்களும் தமது கடவுச் சீட்டுக்களை சகல நாடுகளுக்குமானதாக பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கருமபீடத் திறப்பு விழாவில் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் ஹஜ் முகவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.