August

August

முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு? எச்சரிக்கிறார் தலைமை நீதிபதி இப்திகார்

musharap.jpg‘பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப், நாடாளுமன்றில் ராஜதுரோகக் குற்றம் சாட்டப்படுவார்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து ஜனாதிபதியானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பணிநீக்கம் செய்து 2007ம் ஆண்டு அவசர நிலை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். முஷாரப் ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு பழி வாங்கப்பட்ட இப்திகார் அலிசவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும் நீதிபதிகளை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹமீத் கான் சார் பில் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் மனுசெய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலிசவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. நீதிமன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, முஷாரப்பிற்கு இந்த நீதிபதிகள் ஆயம் உத்தரவிட்டிருந்தது. முஷாரப் தற்போது லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் யாரும் நீதிமன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், கோபமடைந்த தலைமை நீதிபதி இப்திகார் அலிசவுத்ரி கூறியதாவது:

அவசர காலத்துக்கு பிறகு முஷாரப்பால் உருவாக்கப்பட்ட சட்டத்திருத்தங்கள் அனைத்தையும் பார்லிமென்ட் ரத்துச் செய்யும் நிலை ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள முஷாரப், நாடாளுமன்றில் ‘தேசத்துரோகி’ என குற்றம் சாட்டப்படும் நிலை ஏற்படும். இந்த வழக்கில் நீதிமன்றம் யாருக்கும் தண்டனை கொடுக்க முடியாது. அவசர நிலையை பிறப்பித்து முஷாரப் எடுத்த 41 நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது. முஷாரப்பால் அமுல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய ஒன்றரை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு இப்திகார் அலிசவுத்ரி கூறினார்.

ஆனால், அதே சமயம் ராஜதுரோகக் குற்றச் சாட்டை அமுல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே கூட்டணி அரசில் சிக்கல், தலிபான் தொந்தரவு ஆகியவைகளால் சிரமப்படும் சூழ்நிலையில் இது தேவையற்றது என்று கூறினார். அதே சமயம், லண்டனில் இருந்து கொண்டு சம்மன் அனுப்பியும் வராமல் இருக்கும் முஷாரப் மீது ஏன் இலண்டனிலே வழக்கு தொடரக்கூடாது என்ற கருத்தும் பேசப்படுகிறது. மேல் நீதிமன்றில் ஆஜராகாமல் தவிர்க்கும் முஷாரப் மீது மேல்நீதிமன்றம் ராஜதுரோகக் குற்றம் சாட்டுமோ என முஷாரப்பின் ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும் என்பதால், அவர் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.