August

August

குடாநாட்டில் எரிபொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்

jaffna1.jpgயாழ். மாவட்டத்தில் எரிபொருட்களுக்கான புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெற்றோல் 90 ஒக்டேன் ஒரு லீற்றர் 134 ரூபா ஆகவும் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 78 ரூபா 50 சதமாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 54 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்ட செயலணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எரிபொருட்கள் ஏ9 பாதையால் எடுத்து வரப்படுவதால் அவற்றின் விலையைக் குறைப்பதற்கு ஆவன செய்ததையடுத்து புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் குளறுபடி: விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு

sri-lanka-school.jpgஇரண்டாம் தவணைப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக மாகாண, வலய மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வினாத்தாள்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும், மாகாணங்கள், வலயங்களிலிருந்து விசாரணைகள் மேற்கொண்டு தகவல்களை சேகரிக்கும் வேலைகளை கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது.

தவணைப் பரீட்சைகள் நடத்தும் போது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்லால் பெரேராவின் தலைமையிலான குழுவொன்று மேற்படி விசாரணைகளை நடத்துகிறது. விசாரணைகளின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு வாரத்துள் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் அதிகரிக்கலாம்

bus.jpgதனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் மட்டுமே அதிகரிக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோருகின்ற போதும் தாம் அதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையுயர்வு மற்றும் பஸ் சம்பந்தப்பட்ட செலவு தொடர்பிலேயே 7 வீத பஸ் கட்டண உயர்வை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

1. புலிகளின் பலவீனம், அவர்கள் தங்கள் தலைமையைத் தக்க வைப்பதற்கான பேரம் பேசலில் மக்களைப் பணயம் வைக்கப் போகின்றார்கள் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படப் போகின்றார்கள் என்பவை எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும் ஒரே நாளில் யுத்தம் முடிவுக்கு வந்தவிதம் எதிர்பாராததாகவே அமைந்தது.

2. சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல புரட்சிகர அல்லது முற்போக்கு முன்னோடிகள் என்று சொல்லப்படுபவர்கள் மத்தியிலும் புலிகள் பற்றிய பிம்பங்கள் காணப்பட்டதை மறுக்க முடியாது. அதனாலேயே பிரபாவின் உடலை சர்வதேச ஊடகங்களே காட்சிப்படுத்திக் கொண்டிருந்த போதும் தமிழ் சமூகத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கு கோவணத்துடன் நின்றது பிரபா மட்டுமல்ல மொத்த தமிழ் தேசமும் தான்.  இந்நிலையை ஏற்படுத்திய பெருமை பிரபாவையும் அவர் தலைமை வகித்த இயக்கத்தையுமே சேரும்.

3. மிகப்பெரும்  மனித அவலம் ஒன்று ஏற்பட இருந்ததை உணர்வதற்கு ரொக்கற் விஞ்ஞான அறிவு எதுவும் யாருக்கும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே நாம் தேசம்நெற்ம் ரவி சுந்தரலிங்கமும் புலிகள் ஆயுதங்களை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம்.

4. ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு சிலவாக இருந்து நூறாகி ஆயிரமாகிய போது நாங்கள் தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்று மேற்கு நாடுகளின் வீதிகளில் விர முழங்கங்கள் தள யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.’ மோட்டுச் சிங்களவன்’ என்று தங்கள் அறிவை தாங்களே மெச்சிக்கொண்டு ‘பனை மரத்தில் வெளவாளா தலைவருக்கே சவாலா’ என்ற கூக்குரல்கள் மட்டும் ஓங்கி ஒலித்தது.

5. 2009 ஏப்ரல் 30ல் புலிகளை முடிவுக்கு கொண்டு வருகின்றோம் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட புரொஜக்ற் பீக்கன் திட்டப்படி கால அட்டவணை போட்டு அதற்கமைவாக 18 நாட்கள் தாமதத்தில் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது.

6. இன்று கொல்லப்பட்ட வீரமரணமடைந்த தளபதிகளுக்கும் தலைவருக்கும் அஞ்சலி கூட நடத்த முடியாத பலவீனமான உள்நெருக்கடிக்குள் புலிகள் தள்ளப்பட்டு உள்ளனர். பிரபா கொல்லப்பட்டதை அறிவிக்கும் பட்சத்தில் புலிகள் அமைப்பும் அதனுடன் சேர்ந்து மங்கி மறைந்துவிடும் என்ற அச்சம் புலம்பெயர்ந்த புலிகளிடம் காணப்படுகின்றது. மேலும் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தைக் கொண்ட ஒரு பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கான முரண்பாடுகளும் எழாமல் இல்லை.

7. புலிகள் அமைப்பின் அதிகாரத்திற்கும் அதன் சொத்துக்களுக்குமான போட்டியில் அவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் போட்டியிலும் தங்களை இணைத்துள்ளனர். அதுவே கே பி யின் நாடு கடந்த தமிழீழ அரசு. அதற்கு மாற்றாக அவரை நிராகரிக்கும் புலிகள் வேறு வழிகளை நோக்குகிறார்கள். அவர்களின் பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையும் ஒரு கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.

8. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் இரு வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
ஆ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.

9. பல்வேறு முரண்பட்ட பிரிவினரும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.

ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு அவர்களை நிர்ப்பந்தித்து உள்ளது.

இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியின் நிலை இதுவாக உள்ளது.

10. தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.
._._._._._. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வலிந்து எடுத்து தக்கவைத்துக் கொண்ட தமிழ் மக்களின் அரசியலில்  மிகப்பெரும் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் பல்வேறு சக்திகளும் ஈடுபட்டுள்ளன. இவ்வெற்றிடத்தை நிரப்ப முயற்சிப்பவர்கள் தமிழ் அரசியலை மீண்டும் ஒரு நச்சுச் சுழற்சிக்குள் தள்ளி விடுகின்ற அபாயம் உள்ளது. அதனால் இது தொடர்பான புரிந்தணர்வு அரசியல் முரண்பாடுடையவர்களிடம் எட்டப்படுவது அவசியம்.

அந்த வகையில் கடந்த யூன் 21ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் ஈடுபாடுடைய ஆர்வமுடைய பல்வேறு அரசியல் பின்னணிகளை உடையவர்களும் இதில் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்கள் மத்தியிலும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான உரையாடல்கள் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச எல்லை எது என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

அண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஓர் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழ் அரசியல் சூழலில் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வெற்றிடம் மீண்டும் தவறான அரசியல் போக்குகளினால் நிரப்பப்படும் அபாயம் பற்றிய அச்சம் தமிழ் அரசியலாளர்களிடையே ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரையும் இந்த சடுதியான மாற்றங்கள் மிகவும் பாதித்து உள்ளது. பல்வேறு கசப்புணர்வுகளையும் வலிகளையும் கடந்து அடுத்த கட்டம் நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். நாம் கடந்து வந்த பாதைகள் மிகக் கரடுமுரடானதாகவும் மிக மோசமானதாகவும் இருந்துள்ளது. அதனால் அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு எமது நகர்வுகளை மேற்கொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும்.

அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் பின்னணியுடைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்துவதற்கு முன் தங்களிடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்துவது அவசியமாகும். இக்கலந்துரையாடல்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச எல்லை பற்றிய பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு  உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலில் பங்கேற்று நிகழ்வை ஆரோக்கியம் உள்ளதாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேசம் சஞ்சிகை ஒரு பொது ஊடகம் என்ற வகையில், இன்றைய காலத்துடன் தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான ஒரு தளமாக இருக்கின்றது. அந்த வகையில் யூன் 21ல் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தித் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

நீங்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதன் மூலம் கலந்துரையாடப்படும் விடயங்களை தவறவிடாது தொடர முடியும். மேலும் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதையும் தவிர்க்க முடியும்.

இக்கலந்துரையாடல் ஆக்கபூர்வமானதாக அமைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இக்கலந்துரையாடல் ஒரு பொதுக் கூட்டம் அல்ல. அழைக்கப்படுபவர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் : 02 ஓகஸ்ட் 2009 மாலை 14:30

இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 ரி சோதிலிங்கம் 07846 322 369

விமான நிலைய பார்வையாளர் மண்டபம் நாளை முதல் மீண்டும் திறப்பு

mihinlankaflight.jpg இதுவரை காலமும் மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் மண்டபம் நாளை 3ஆம் திகதி முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

சிற்றுண்டிச்சாலை வசதியுடன் நவீன வசதிகளுடன் கூடியதாக இப் பார்வையாளர் மண்டபம் அமைந்துள்ளதுடன் விமானம் ஒன்றின் உட்புறம் எவ்வாறு உள்ளது என்பதை பொதுமக்கள், மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் மாதிரி விமானமொன்றும் பார்வையாளர் மண்டபத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பார்வையாளர் மண்டபத்திலிருந்து விமான ஓடுபாதை, விமானங்கள் தரையிறங்குதல், புறப்பட்டுச் செல்லல் என்பவற்றை காணமுடியும் இதற்கு நுழைவுக்கட்டணமாக 20 ரூபா அறவிடப்படும் என்றும் விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

ஏ-9 இன்று முதல் தினமும் பஸ் சேவை

north-governor.jpgஏ-9  வீதியூடாக பயணிகள் பஸ் சேவை இன்று முதல் தினமும் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள சிங்கள மகா வித்தியாலய திடலிலிருந்து தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகள் வவுனியா நகரில் ரம்யா ஹவுஸ் பகுதியை வந்தடைந்ததும் அங்கிருந்து கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அனுமதி பெற்றவர்கள் தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகளில் பயணிக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.வவுனியாவுக்கு தினமும் செல்லும் 5 பஸ் வண்டிகளும் அதே தினம் யாழ். நகரை சென்றடையும் என யாழ். அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்தார்.

யாழ். நகருக்குள் மீண்டும் செல்பவர்கள் வவுனியா நகரிலுள்ள ரம்யா ஹவுஸ¤க்கு வரும் பட்சத்தில் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி புறப்படும் பஸ் வண்டிகளில் செல்ல முடியும் எனவும் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ஏ-9 பாதையூடாக மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்துச் சேவை இதுவரை நடத்தப்பட்டுவந்தது. ஐந்து வஸ் வண்டிகள் வீதம் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தன.

இதேவேளை, மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன. மதவாச்சிவரை வரும் யாத்திரிகர்களை பாதுகாப்பு நடைமுறைகளின் பின்னர் வேறு பஸ் வண்டிகள் மூலம் மடுத்தேவாலயம் வரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

(02-09-2009)”இந்தியாவுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் வவுனியா முகாம்களிலுள்ள அகதிகள்’

srilanka-refugees.jpg இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட தமிழர்கள் இப்போதும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் முன்னர் போன்று அல்லாமல் குறைந்தளவு அகதிகளாக வருவதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது. தற்போது அநேகமானவர்கள் விமானம் மூலம் வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 109 தமிழ் மக்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஜூனில் 142 பேரும் ஜூலையில் 89 பேரும் சென்றிருக்கின்றனர். 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் இந்தியாவுக்குப் பெருந்தொகையாகச் சென்றனர். கடல் மார்க்கமாகப் படகுகளில் மிக நெருக்கடியான பயணங்களை அவர்கள் மேற்கொண்டனர்.

இப்போது கொழும்புக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருவதாகவும் படகில் செல்வது இப்போது இலகுவானவிடயமாக இல்லாததால் விமானம் மூலம் வருவதாகவும் “ஒவ்வர்’ அமைப்பின் தலைவர் சீனா சந்திரஹாசன் கூறியுள்ளார். மே மாதம் 109 பேர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூனில் இந்தியா சென்ற 142 பேரில் 39 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூலையில் 10 பேர் படகில் சென்றனர். இதேவேளை, வவுனியாப் பகுதி முகாம்களில் உள்ள 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்களில் அநேகமானவர்கள் இந்தியாவுக்குச் சென்று புதிய வாழ்வை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பாக விசாரிப்பதாக சந்திரஹாசன் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்களில் கணிசமான தொகையினர் மத்தியில் இந்தியாவுக்கு வருவதற்கான எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ஆனால், புலிகளின் பகுதிகளில் இருந்த இந்த மக்களுக்கு இடமளிப்பது தொடர்பான விடயம் அரசியல் நிலைவரத்தில் தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 73,475 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ளனர். இதனை விட பலர் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

இந்தியாவுக்கு தமிழ் மக்கள் செல்வதற்கு விரும்பும் பிரதான காரணம் அவர்களுக்கு உள்ள அச்சமே என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி அகினோ காலமானார்

n13.jpgபிலிப் பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொராஷோன் அகினோ நேற்றுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 76 சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அகினோவின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் 10 நாட்கள் துக்கம் கடை பிடிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி குளோரியா மெகாபாக்ல் அரோயோ அறிவித்துள்ளார். அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர் பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்தில் ஆறு வாக்குச் சாவடிகள்!

election_fingercolur.jpgயாழ் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும்  மக்களில் 4388 பேர் யாழ். மாநகரசபைத் தேர்தலில்  வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம். நபீல் தெரிவித்துள்ளார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி,  பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம்,  கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர்பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா

chandrika.jpgநமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுபோது இலங்கையில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.