வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மன்னார் மற்றும் யாழ். மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரென மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரம், நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டிருப்பதால் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் அவ்வப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை மன்னாரில் மாந்தை மேற்கு, மடுவின் சில பகுதிகளில் தற்போதும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்தவர்களை மடுவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசமொன்றினுள் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக மீளக்குடியமர்த்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
மெனிக்பாம் நிவாரண கிராமத்தில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்தில் மிதிவெடியகற்றப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொத்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
நிவாரணக் கிராமங்களிலிருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத பகுதிகளை தமது சொந்த இருப்பிடங்களாக கொண்டவர்கள் அப்பணிகள் நிறைவடையும் வரை யாழ்ப்பாண நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவரேனவும் அமைச்சர் றிசாட் சுட்டிக்காட்டினார்.