August

August

எரிக் சொல்ஹெய்ம்மின் கூற்று தொடர்பில் சட்ட ரீதியாக நோர்வேயிடம் முறைப்பாடு

இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அவசியம் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை தொடர்பில் நோர்வே அரசாங்கத்திடம் சட்டரீதியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர்  பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதரகம் ஊடாக வார இறுதியில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சொல்ஹெய்ம்மின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சொல்ஹெய்ம் தெரிவித்துள்ள இக்கருத்து தொடர்பாக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பிய ஜனாதிபதி பன்றிக் காய்ச்சலினால் பாதிப்பு

swine.jpgகொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ யூரிப் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அல்வாரோவிற்கு அவரது இல்லத்தில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தமது கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதகாவும் கொலம்பிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற தென் அமெரிக்க நாடுகளது தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..கொலம்பியாவில் மொத்தமாக 621 பேர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திஸ்ஸாநாயகத்தை விடுவிக்ககோரி நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம்

tissanayaga000.jpgபயங் கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் வழக்கு விசாரணைகளுக்காக இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸாநாயகத்தை விடுவிக்கக் கோரி முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

சந்திராயன்-1 திட்டம் நிறுத்தப்படுகிறது – மாதவன் நாயர்

29-chandrayaan.jpgசந்திர யான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 திட்டம் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிலவை நோக்கிய சந்திரயான்-1 விண்கலத்தின் பயணம் இந்திய மக்களின் மனதில் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சனிக்கிழமை அதிகாலையில், சந்திரயான்-1 விண்கலத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்தியர்கள்  அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும் சந்திரயான்-1 திட்டத்தின் பலனில் 95 சதவீதத்தை ஏற்கனவே எட்டி விட்டதாக விஞ்ஞானிகளும், இஸ்ரோவும் அறிவித்துள்ளனர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்திரயான்-1 திட்டம் மிகப் பெரும் வெற்றிதான் என்று வர்ணித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரயான் -1 திட்டத்தை முடித்துக் கொள்வதாக இஸ்ரோ தலைவர்  மாதவன் நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

tissanayaga000.jpgபயங்க ரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திஸ்ஸாநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tissanayagam333.jpg

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் கல்வி, சுகாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ.160 கோடி

mullai-ga.jpgகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தில் துரிதமாகப் புனரமைக்கவென அரசாங்கம் 160 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு, வட மாகாண சபை மற்றும் அந்தந்தத் திணைக்களங்கள் ஆகியவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், கிளிநொச்சி பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்நிதி ஊடாக 180 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல புனரமைப்பு வேலைகளையும் தாமதிமின்றி துரிதகெதியில் ஆரம்பிப்பதற்குத் தேவையான சகல அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிதி ஒதுக்கீடு இவ்விரு மாவட்டங்களினதும், கல்வி, சுகாதாரம், மின்சாரம் பொது வசதிகள் உட்பட சகல துறைகளையும் மேம்படுத்தவென மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதன்படி இவ்விரு மாவட்டங்களினதும் புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விபரம் வருமாறு, சுகாதார துறைக்கு 487.4 மில்லியன், மின்சாரத்திற்கு 451 மில்லியன், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழான வீதிகளுக்கென 122. 7 மில்லியன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குக் கீழான வீதிகளுக்கு 150 மில்லியன், உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கீழான உள்வீதிகளுக்கு 130. 12 மில்லியன், கல்வி துறைக்கு 90 மில்லியன், கமநல சேவைக்கு 51 மில்லியன், நீர்ப்பாசனத்துறைக்கு 65 மில்லியன், விவசாய அபிவிருத்திக்கு 36.3 மில்லியன், நன்னீர் மீன்வளப்பு துறைக்கு 26.2 மில்லியன், கூட்டுறவு துறைக்கு 37 மில்லியன், மாவட்டங்களின் நிர்வாக கட்டடத்திருத்த வேலைகளுக்கென 29.5 மில்லியன், பிரதேச செயலக கட்டிட திருத்த வேலைகளுக்கென 22.7 மில்லியன் என்றபடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு துறைக்கென 11.6 மில்லியனும், தென்னை அபிவிருத்திக்கென 5.8 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கென மகநெகும திட்டத்தின் கீழ் 20 மில்லியனும், தளபாடக் கொள்வனவுக்கென 12 மில்லியனும், சிறுவர் பராமரிப்புக்கு 6.6 மில்லியனும் உள்ளூராட்சி கட்டிடத் திருத்தத்திற்கு 12 மில்லியனும், விவசாயத் திணைக்களத்திற்கு 6 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெரும் – கருத்துக்கணிப்பு

japan.jpgஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெருவெற்றி பெரும் என்று கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.

கருத்துக் கணிப்புகளை ஒத்து தேர்தல் முடிவுகள் வருமானால் ஜப்பானில் கடந்த அரை நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட இடைவெளி இன்றி தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் தாராளவாத ஜனநாயகக் கட்சி பதவியகல நேரிடும்.

கடுமையான தோல்வி என்று குறிப்பிட்டு அப்படியான ஒரு தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக பிரதமர் டாரோ அஸோ தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் பதவியிலிருந்தும் தான் விலக எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் மிக மோசமான பொருளாதார வீழ்ச்ச்யை சந்தித்த நேரத்தில் ஆட்சி செயத அரசியல் தலைவர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபமே தனது வெற்றிக்குக் காரணம் என, பிரதமராக வரக்கூடியவர் எனத் கருதப்படும் யுகியோ ஹடொயாமா தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண் ஒருவர் வீஸா இன்றி லண்டன் செல்வதற்கு அனுமதி

visa.jpgதமிழ் பெண் ஒருவர் வீஸா அனுமதியின்றி லண்டன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
 
40 வயதான அங்கயற்கண்ணி கிருஸ்ணபிள்ளை என்ற பெண்ணே இவ்வாறு வீஸா இன்றி லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
விமானம் மூலமாக குறித்த பெண் லண்டன் சென்றுள்ளதாகவும், அவருக்கு உரிய வீஸா அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
குறித்த பெண்ணுக்கு எந்த அடிப்படையில் வீஸா வழங்கப்பட்டதென்பது தமக்கு தெரியாது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பான தகவல்களை திரட்டியதன் பின்னர் விளக்கமளிக்க உள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹேஸ் தெரிவித்துள்ளார்.
 
குறித்த பெண்ணின் வீஸா அனுமதிக்காலம் காலாவதியாகியுள்ள நிலையில், வீஸா இன்றியே குறித்த பெண் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நேற்றுவரை பன்றிக் காய்ச்சல் பலி 99

swine.jpgநேற்று பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது.

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் நேற்றுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையான சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் இஷார் என்ற 20 வயது வாலிபர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரையும் சேர்த்து புனேவில் இதுவரை 27 பேர் இறந்துள்ளனர். தேசிய அளவில் 99 பேராக பலி  எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சரணடைந்த – கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சும் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் இவ்வாரமளவில் கொழும்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளன.

புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இதுபோன்று பல்வேறு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தினடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிதியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளும் ஜப்பான், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல். ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினருக்கு புனர்வாழ்வு அளிக்குமுகமாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றி கற்பித்தல், தளபாடம் தயாரித்தல், தச்சுத் தொழில் செய்தல், ஆடை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.