27

27

ஐ.சி.சி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் சங்கக்கார முதலிடம்

srilanka-cri.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் துடுப்பாட்டு வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 130 ஓட்டங்கள் குவித்து அணியை காப்பாற்றியதன் மூலம் 3 வது இடத்தில் இருந்த அவர் முதலாம் இடத் துக்கு முன்னேறி இருக்கிறார். சங்கக்கார ஏற்கனவே 2007ம் ஆண்டு இறுதியிலும், 2008ம் ஆண்டிலும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

10 நாட்கள் முதலிட அரியணையில் உட்கார்ந்திருந்த இந்திய வீரர் கெளதம் கம்பீர் 2வது இடத்துக்கு இறங்கி உள்ளார். கொழும்பு டெஸ்டில் மொத்தம் 21 ஓட் டங்கள் (2, 10) மட்டுமே எடுத்த பாகிஸ் தான் அணித் தலைவர் யூனிஸ்கானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. 2வது இடத்தில் இருந்த அவர் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 15வது இடத்திலும், வி. வி. எஸ். லட்சுமண் 17வது இடத்திலும் ஷேவாக் 19வது இடத்திலும் உள்ளனர்.

தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் வீரர்கள் விவரம் வருமாறு:-

வரிசை வீரர் நாடு புள்ளி
1 சங்கக்கார இலங்கை 862
2 கம்பீர் இந்தியா 847
3 சந்தர்பால் மேற்கிந்தியா 821
4 முகமது யூசுப் பாகிஸ்தான் 818
5 மைக்கேல் கிளார்க் அவுஸ்திரேலியா 802
6 யூனிஸ்கான் பாகிஸ்தான் 801
7 பொண்டிங் அவுஸ்திரேலியா 790
8 சுமித் தென்ஆபிரிக்கா 782
9 ஜெயவர்த்தன இலங்கை 777
10 கல்லீஸ் தென்ஆபிரிக்கா 755

இராணுவ தளபதி வன்னி விஜயம்

vanni-a-h-q.jpgஇராணவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வன்னி கட்டளையிடும் தலைமையகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார். வன்னியின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அரசு முன்னெடுக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு படையினர் சார்பாக வழங்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கட்டளையிடும் தளபதிகளுடன் கலந்தாலோசித்தார்.

வன்னி மாவட்ட கட்டளையிடும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, இராணுவத் தளபதியை வரவேற்றார்.இராணுவ தளபதிக்கு வன்னி இராணுவ தலைமையகத்தில் இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டதுடன் இராணுவ தளபதியின் தலைமையில் விசேட கூட்டமும் நடைபெற்றது.

இராணுவத் தளபதியின் வன்னி விஜயத்தின் போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி மற்றும் கிழக்கு மாகாண கட்டளையிடும் தளபதிகளும் கலந்துகொண்டனர். மேற்படி கட்டளையிடும் தளபதிகள் அனைவரும் ஒரே சமயத்தில் இராணுவத் தளபதியை சந்தித்தமை இதுவே முதற்தடவை என்றும் இராணுவ தலைமையகம் தெரிவிக்கிறது.

பேருவளை கோஷ்டி மோதல்: சம்பவத்துடன் தொடர்புடைய 28 பேர் மஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்

beruwela.jpgபேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என் சந்தேகிக்கப்படும் 28 பேர் நேற்று களுத்துறை மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இரு கோஷ்டிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் 26 பேர் அளுத்கமவிலும் இரண்டு பேர் பேருவளையில் வைத்தும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 கைதுசெய்யப்பட்ட 28 பேரும் நேற்று களுத்துறை மஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். மோதல் இடம்பெற்ற பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர்.  இப்பகுதியில் தற்போது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதுடன், மக்கள் வழமைபோல் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதனைக் காணமுடிவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று காலை 10 மணிமுதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று கண்டி எசல பெரஹரா ஆரம்பம்

kandy-parahara.jpgவரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கண்டி மாநகரசபை வீதி ஓரங்களின் இரும்பு வேலிகளுக்கு பூச்சுப் பூசியுள்ளதுடன் தண்ணீர், மலசல கூட வசதிகளை மேற்கொண்டுள்ளது. விசேட ரயில் சேவைகளும் விசேட பஸ் சேவைகளும் இ.போ.சபையாலும் தனியார் போக்குவரத்து அதிகாரசபையினாலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரம் 45 பஸ் சேவைகள் நடைபெறவுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு 6500 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் சமாதான சூழ்நிலை காணப்படுவதால் 10 இலட்சம் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டியை சூழவுள்ள பகுதிகளில் மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இறுதி பெரஹரா ஆகஸ்ட் 6 ஆம் திகதி பகல் பெரஹராவுடன் முடிவுபெறவுள்ளது. இம்முறை அதிக சுற்றுலாப் பயணிகள் பெரஹராவை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காணிவேல் கண்காட்சி நிகழ்வு கண்டி கெட்டம்ப மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தன் இன்று கொடியேற்றம்

nallur-kovil.jpgவரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 தினங்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. கொடியேற்றம் இன்று  10 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த காலங்களைப் போல இம்முறையும் உற்சவத்தை முன்னிட்டு ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள 6 வீதிகளும்  நண்பகல் 12 மணிமுதல் 25 நாட்கள் போக்குவரத்துக்கு மூடப்படவுள்ளன.

இப்பாதைகள் மூடப்படுவதால் பொதுமக்களும் வாகனங்களும் போக்குவரத்துக்கு மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலை போக்குவரத்துப் பொலிஸார் வேண்டியுள்ளனர். இம்முறை தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள் ஆலய வளாகத்தில் காட்சியறைகள் விற்பனை நிலையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளன.

தேர் உற்சவம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படவுள்ளது. தேர், தீர்த்த தினங்களில் குடாநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீள்குடியேற்றம் – முதற்கட்டமாக 3000 குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

வவுனியா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்னர் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ள 35 கிராமங்களையும் உள்ளடக்கிய பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அலுவலர்கள் மற்றும் அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோரை அழைத்தே அரச அதிபர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஓகஸ்ட் முதல்வாரத்தில் மக்கள் குடியமரும் வகையில் சகல உட்கட்டமைப்பு வளங்களையும் பூர்த்தி செய்யுமாறு இவர்களுக்கு அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் பணிப்புரை வழங்கியிருக்கிறார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. இவர்களைக் குடியமர்த்தவென இனங்காணப்பட்ட கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு ஓகஸ்ட் முதல்வாரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை நெடுங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு காணி விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அடுத்தடுத்ததாக மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும் வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மடுத்தேவாலய உற்சவத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தரவுள்ளதால் வீதி உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மடு கோயில் சுற்றுப்புற வீதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக. பிரதான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டு கார்பட் செய்யப்பட்டுள்ளன. இதற்கென 124.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மடு தேவாலயத்திலிருந்து நாலாபுறமும் சுமார் 1 1/2 கிலோ மீற்றர் தொலைவிற்குள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகளும் பூர்த்தியான நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பில் டெங்கு தீவிரமாக பரவுகிறது பல பகுதிகளிலும் சிரமதானப் பணிகள்

mosquitfora.jpgநீர் கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரியமுல்ல பகுதியில் சனிக்கிழமை சிரமதானப் பணிகள் நடைபெற்றது. மாநகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை 154 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் நால்வர் மரணமடைந்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் லக்ஷ்மன் தெரிவித்தார்.  இவர்களில் 90 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்றும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரே, மாநகரசபை உறுப்பினர் எம்.ஏ.சற். பரீஸ், கட்டான பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி விஜித குரே ஆகியோரும் கலந்துகொண்டனர். தெப்பாஎல வாவி நீர்கொழும்புக்கும்கட்டானைக்கும் எல்லையாக உள்ளதால் அதனைச் சுத்தம் செய்து நீர் விரைவாக செல்ல ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ராசிக் பரீத் மாவத்தை, லாசரஸ் வீதி, மூர்வீதி, மொஸ்க் வீதி, ஐயூப் ஹாஜியார் மாவத்தை, ரகுமானா பாத் வீடமைப்புத் திட்டம் ஆகிய இடங்களில் இந்தச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன.

தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

election_cast_ballots.jpgயாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன. தபால் மூல வாக்களிப்பிற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதோடு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க பதுளை மாவட்டத்தில் 16,054 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 8,899 பேரும் தகுதி பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 335 பேரும் வவுனியாவில் 183 பேரும் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர்.

ஊவா மாகாண சபை மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது தெரிந்ததே.

வவுனியா நகர சபைத் தேர்தல் – மு.கா வேட்பாளர்கள் நால்வர் அ.இ.மு.காவில் நேற்று இணைவு

வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் மு. கா வேட்பாளர்களான நால்வர் நேற்று அகில இலங்கை முஸ் லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டு, ஐ. ம. சு. முவின் வெற்றிக்காக உழை க்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

ஏ. முஸாதிர், எஸ். எம். அபுல்கலாம், இல்முதீன் தஸ்மீம், எஸ். அஜ்மயின் ஆகிய வேட்பாளர்களே இணைந்து கொண்டவர்களாகும். வவுனியா பட்டானிச்சூரில் இடம்பெ ற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே இந்நால்வரும் இணைந்துகொண்டனர். அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர்அலி, பிரதியமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோர் முன்னிலையிலேயே இவர்கள் இணைந்துகொண்டனர்.

ஆசிய மனித உரிமை ஆணையக உதவியுடன் மலையகத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

mosquitfora.jpgமலை யகப் பகுதிகளில் டெங்கு ஒழிப்புக்கான விசேட விழிப்புணர்வு வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிய மனித உரிமை ஆணையகம் (செடக் நிறுவனம்) ஹட்டன், கொட்டகல, தலவாக்கலை, நுவரெலியா நகரசபைகளின் உதவியோடும் பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்போடும் பிரதான நகரங்களில் வீதி நாடகம் அரங்கேற்றம், கையேட்டுப் பிரதிகள் விநியோகம் போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் மலையகப் பிரிவு இத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கண்டி, மாத்தளை பகுதிகளிலும் இச்செயற்றிட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் மலையகப் பகுதிக்கான பொறுப்பாளர் ஆ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

3000 இற்கும் மேற்பட்ட பெருந்தோட்டப்புற மக்கள் இதன் மூலம் டெங்கு நோய் தொடர்பான சிறந்த விளக்கங்களைப் பெறுவதோடு டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.  மொத்தம் 15000 டெங்கு நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதுடன் 146 பேரளவில் இறந்துள்ளனர். இவ்வாறு மரணமானோரில் 46 பேர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே, பெருந்தோட்டப் பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்றிட்டம் மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும் பொதுமக்கள் டெங்கு நோய் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.