வவுனியா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்னர் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ள 35 கிராமங்களையும் உள்ளடக்கிய பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அலுவலர்கள் மற்றும் அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோரை அழைத்தே அரச அதிபர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் முதல்வாரத்தில் மக்கள் குடியமரும் வகையில் சகல உட்கட்டமைப்பு வளங்களையும் பூர்த்தி செய்யுமாறு இவர்களுக்கு அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் பணிப்புரை வழங்கியிருக்கிறார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரச அதிபர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கில் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. இவர்களைக் குடியமர்த்தவென இனங்காணப்பட்ட கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு ஓகஸ்ட் முதல்வாரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை நெடுங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு காணி விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அடுத்தடுத்ததாக மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும் வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மடுத்தேவாலய உற்சவத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தரவுள்ளதால் வீதி உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மடு கோயில் சுற்றுப்புற வீதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக. பிரதான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டு கார்பட் செய்யப்பட்டுள்ளன. இதற்கென 124.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மடு தேவாலயத்திலிருந்து நாலாபுறமும் சுமார் 1 1/2 கிலோ மீற்றர் தொலைவிற்குள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகளும் பூர்த்தியான நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.